விருதுநகர் காங்., - எம்.பி., மாணிக்கம் தாகூர்: ஜார்க்கண்ட் மாநிலத்தில், ஜார்க்கண்ட் முக்தி மோர்ச்சா கட்சி தலைமையிலான, 'இண்டி' கூட்டணியில், முதல்வர் உட்பட 12 அமைச்சர்கள் உள்ளனர். அங்கு, காங்கிரசுக்கு நான்கு அமைச்சர்களும், ராஷ்ட்ரீய ஜனதா தளம் கட்சிக்கு ஒரு அமைச்சர் பதவியும் வழங்கப்பட்டுள்ளது. இது தான் சரியான அதிகார பகிர்வு. இது தான், கூட்டணியில் பின்பற்றப்பட வேண்டிய உண்மையான மாடல். காங்-., மூத்த தலைவர் ராகுலுக்கும், ஜார்க்கண்ட் முதல்வர் ஹேமந்த் சோரனுக்கும் இடையிலான, பரஸ்பர நம்பிக்கையும், மரியாதையும் கொண்ட அரசியல் உறவே, இதற்கு காரணம். டவுட் தனபாலு: ஆட்சியில் பங்கு கேட்டு, நீங்க குரல் கொடுப்பதால் எந்த பலனும் இருக்காது... தமிழக முதல்வருடன் சகோதரர் மாதிரி பழகும் உங்க மூத்த தலைவர் ராகுலே, இது சம்பந்தமா ஸ்டாலினுடன் பேசினால் தான், பிரச்னைக்கு தீர்வு கிடைக்கும் என்பதில், 'டவுட்'டே இல்லை! தமிழக பா.ஜ., பொதுச்செயலர் ராம சீனிவாசன்: தமிழகத்தில் அறநிலையத் துறையின் கீழ், 40,000 கோவில்கள், தனியாரிடம் 10,000 கோவில்கள் உள்ளன. தனியார் நிர்வகிக்கும் கோவில்கள் நன்றாக பராமரிக்கப்படுகின்றன. தமிழகத்தில் மட்டுமே அறநிலையத் துறை உள்ளது. மற்ற மாநிலங்களில் கோவில்களை நிர்வகிக்க, 'டிரஸ்ட்' உள்ளது. கேரளாவில் தேவசம் போர்டு உள்ளது. கோவில்களில் மாநில அரசுகள் தலையிடுவதில்லை. டவுட் தனபாலு: கேரளாவில் தேவசம் போர்டு இருந்தும், சபரிமலை அய்யப்பன் கோவில்ல, பல கோடி ரூபாய் மதிப்பு தங்கத்தை, 'ஆட்டை' போட்டுட்டாங்களே... அதனால, நிர்வாகம் யாரிடம் இருந்தாலும் சரி... அதுல இருக்கிறவங்க, கடவுளுக்கு பயந்து வேலை செய்யணும் என்பதில், 'டவுட்'டே இல்லை! தமிழக பா.ஜ., தலைவர் நயினார் நாகேந்திரன்: 'ஹிந்தி வேண்டாம்' என்கின்றனர். ஆனால், திருப்பூரில் அனைத்து, 'டாஸ்மாக்' மதுக் கடைகளிலும் ஹிந்தியில் போர்டு உள்ளது. மதுக் கடையில் ஹிந்தியில் எழுதும் தி.மு.க., அரசு, தமிழக மக்கள் ஹிந்தி கற்பதற்கு மட்டும் தடை போடுவது ஏன்? டவுட் தனபாலு: சென்னையிலயே ஹிந்தி பேசும் மக்கள் அதிகம் வசிக்கும் சவுகார்பேட்டையில், தி.மு.க.,வினர் ஓட்டு கேட்டு போறப்ப, ஹிந்தியில் அச்சடிச்ச போஸ்டர்களை தானே வினியோகம் செய்றாங்க... அவங்களுக்கு ஹிந்திக்காரங்க ஆதரவு வேணும்... ஆனா, தமிழர்கள் ஹிந்தி கத்துக்கக் கூடாது என்பது தான் திராவிட மாடல் அரசின் கொள்கை என்பதில், 'டவுட்'டே இல்லை!