உள்ளூர் செய்திகள்

 டவுட் தனபாலு

தமிழக வெற்றிக் கழகம் கட்சியின் இணை பொதுச் செயலர் நிர்மல் குமார்: சி.பி.ஐ., 'சம்மன்' அனுப்பியதால், நடிகர் விஜய் டில்லி சென்று, அவர்கள் கேள்விகளுக்கு உரிய விளக்கங்கள் அளித்தார். பொங்கல் பண்டிகை, ஜனநாயகன் பட வெளியீடு பணிகள் இருப்பதால், அடுத்தகட்ட விசாரணையை, வேறு தேதிக்கு மாற்றும்படி கேட்கப்பட்டது; அதை, சி.பி.ஐ., ஏற்றது. எனவே, வரும் 19ம் தேதி விஜய் மீண்டும் டில்லி செல்வார். டவுட் தனபாலு: ஜனநாயகன் பட விவகாரம், கோர்ட்டில் இருக்கு... அதுல, விஜய் கோர்ட்டுல போய் வாதாடப் போறாரா... ஏழு மணி நேரம் விஜயிடம் சி.பி.ஐ., விசாரணை நடத்தியும், மறுபடியும் கூப்பிடுறாங்கன்னா, நிஜமாவே அங்க விசாரணை தான் நடக்குதா அல்லது வேறு ஏதும், 'பஞ்சாயத்து' நடக்குதா என்ற, 'டவுட்'கள் எழுதே! lll தமிழக துணை முதல்வர் உதயநிதி: டில்லியில் அமர்ந்துள்ள பா.ஜ.,வினர், தமிழகத்தை எப்படியாவது ஆளலாம் என முயற்சிக்கின்றனர். அதற்காக பழைய அடிமைகளும், புதிய அடிமைகளும், அவர்களுடன் சேருவர். எத்தனை பேரை அழைத்து வந்தாலும், ஸ்டாலினை தான் மீண்டும் முதல்வராக மக்கள் தேர்ந்தெடுப்பர். அதை தடுக்க வேண்டும் என்பதற்காகவே, வாக்காளர் பட்டியல் சிறப்பு திருத்தப் பணி வாயிலாக, தமிழகத்தில் 97 லட்சம் வாக்காளர்களை நீக்கியுள்ளனர். என்ன செய்தாலும், அடிமைகளுக்கு தோல்வி தான் கிடைக்கும். டவுட் தனபாலு: பொங்கல் பரிசாக ஒவ்வொரு குடும்பத்துக்கும் தலா, 3,000 ரூபாயை வாரி விட்டது கைகொடுக்கும்னு நினைக்கிறீங்களா... இல்லாட்டி, தேர்தலின் போது, உங்க கட்சியினர் செய்யப் போகும் பணப் பட்டுவாடா, உங்களை மீண்டும் கரை சேர்க்கும்னு நம்புறீங்களா என்ற, 'டவுட்' தான் வருது! lll தமிழக காங்., தலைவர் செல்வப்பெருந்தகை: தமிழக சட்டசபை தேர்தல் கூட்டணி குறித்து பொது வெளியில், காங்கிரசார் யாரும் பேசக்கூடாது; மீறினால், கண்டிப்பாக நடவடிக்கை உண்டு. 'ஆட்சியில் பங்கு இல்லை' என்பது, அமைச்சர் பெரியசாமியின் தனிப்பட்ட கருத்து. அவரது கருத்து குறித்து, எங்களுக்கு எந்த கருத்து வேறுபாடும் கிடையாது. டவுட் தனபாலு: அமைச்சர் பெரியசாமி, தி.மு.க.,வில் மூத்த தலைவர்... அவரது கருத்தை தனிப்பட்ட கருத்து என நீங்க எப்படி சொல்லலாம்... பெரியசாமியின் கருத்துக்கு மறுப்பு தெரிவித்து, தி.மு.க., தலைமை ஒரு வார்த்தை கூட சொல்லாமல் இருப்பது ஏன் என்ற, 'டவுட்' உங்களுக்கு வரலையா? lll


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை