அ.தி.மு.க., முன்னாள் முதல்வர் பன்னீர்செல்வம்: வரவிருக்கும், 2026 சட்டசபை தேர்தலில், இப்போதுள்ள அ.தி.மு.க.,வால் வெற்றி பெற முடியாது. அ.தி.மு.க., பொதுச் செயலராக பழனிசாமி பொறுப்பேற்றதில் இருந்து, இதுவரை கட்சி சந்தித்த 11 தேர்தல்களில், தோல்வி தான் அடைந்துள்ளது. கட்சியில் இவரைத் தான் சேர்ப்போம்; அவரை சேர்க்க மாட்டோம் என சர்வாதிகார போக்கில் கூற, யாருக்கும் அதிகாரம் இல்லை. டவுட் தனபாலு: உங்களின் ஆதங்கம் புரிகிறது; ஆனால், நீங்கள் முதல்வராக இருந்தபோது, அளவுக்கு மீறி அடக்க ஒடுக்கமாக இருந்ததால், ஆட்சி கை மாறி, கட்சியும் பழனிசாமி கைக்கு சென்று விட்டது. நல்லவராக இருப்பதாக நினைத்து எல்லாவற்றையும் கோட்டை விட்டது உங்களோட பலவீனம் என்பதில், 'டவுட்'டே இல்லையே! சென்னை அண்ணா பல்கலைக்கழகத்தின் முன்னாள் துணை வேந்தர் பாலகுருசாமி: தமிழகத்தில், 14க்கும் மேற்பட்ட பல்கலைக்கழகங்களில் நீண்ட காலமாக துணை வேந்தர் இல்லை. பல பல்கலைக்கழகங்களில் பதிவாளர், நிதி அலுவலர் பணியிடங்களும் காலியாக உள்ளன. அந்த பணியிடங்களுக்கு தகுதியானவர்களை உடனடியாக நியமிக்க வேண்டும். டவுட் தனபாலு: உங்களைப் போன்ற வல்லுநர்கள் எவ்வளவு எடுத்துச் சொன்னாலும், தற்போதைய அரசு அதையெல்லாம் காதிலேயே வாங்காது. 'எல்லா, 'பவரும்' எங்களுக்கே' என்று செயல்படுபவர்கள், மற்றவர்கள் சொல்லும் எந்த நல்ல அறிவுரையையும் ஏற்கவே மாட்டார்கள் என்பதில், 'டவுட்'டே இல்லை! பிரதமர் நரேந்திர மோடி: காங்கிரஸ் கட்சி பிறந்த நகரமான மும்பையில், அக்கட்சி ஐந்தாவது இடத்திற்கு தள்ளப்பட்டுள்ளது. பல ஆண்டுகளாக அக்கட்சி ஆட்சி செய்த மஹாராஷ்டிர மாநிலத்தில், அக்கட்சி ஓரங்கட்டப்பட்டுள்ளது. வளர்ச்சிக்கான எந்த பணியையும் செய்யாததால், மக்களின் நம்பிக்கையை காங்கிரஸ் கட்சி இழந்துள்ளது. டவுட் தனபாலு: காங்., கட்சியின் இனிமையான, ஆளுமைமிக்க தலைவராக இருந்த ராஜிவ் இறந்த பின், அவரது மனைவி சோனியாவின் கைக்குச் கட்சி சென்ற உடனேயே, சறுக்கல் காணத் துவங்கி விட்டது. இனி காங்., கட்சி தலைநிமிர்வது, 'டவுட்' தான்!