தமிழக பா.ஜ., மூத்த தலைவர் தமிழிசை: 'எமர்ஜென்சி' காலத்தில், இப்போதைய தமிழக முதல்வர் ஸ்டாலினை, காங்கிரஸ் கைது செய்தது. அப்படி இருக்கும் போது, தி.மு.க.,வும், காங்கிரசும் இயற்கையான கூட்டணி என சொல்லி யாரை ஏமாற்றுகின்றனர். 1967ம் ஆண்டு சட்டசபை தேர்தலில் காங் கிரசை தீர்த்து கட்டியது, தி.மு.க., தான். டவுட் தனபாலு: அது சரி... 2021 சட்டசபை தேர்தலில், உங்களுடன் கூட்டணியில் இருந்த அ.தி.மு.க., 2024 லோக்சபா தேர்தலில், உங்க கட்சியை நட்டாற்றில் விட்டுட்டு போயிடுச்சே... இப்ப மீண்டும் நீங்க சேர்ந்திருக்கீங்களே... இது மட்டும் இயற்கையான கூட்டணியா என்ற, 'டவுட்' வருதே! பத்திரிகை செய்தி: வரும் சட்டசபை தேர்தலில், தி.மு.க., கூட்டணியில், 10க்கும் மேற்பட்ட தொகுதிகளை பெற்று கட்சிக்கு அங்கீகாரம் பெற, மக்கள் நீதி மய்யம் கட்சி தலைவர் கமல் முடிவு செய்துள்ளார். எனவே, வரும் தேர்தலில், தங்கள் கட்சிக்கு, 'டார்ச் லைட்' சின்னத்தை ஒதுக்க வேண்டும் என, அவரின், ம.நீ.ம., கட்சி சார்பில் தேர்தல் கமிஷனில் விண்ணப்பிக்கப்பட்டது. அதை ஏற்றுக் கொண்ட தேர்தல் கமிஷன், அக்கட்சிக்கு, டார்ச் லைட் சின்னத்தை ஒதுக்கி உள்ளது. டவுட் தனபாலு: அது சரி... டார்ச் லைட் சின்னத்தை தேர்தல் கமிஷன் சும்மா ஒண்ணும் தரலை... தமிழகத்தில், மக்கள் நீதி மய்யம் கட்சி எங்கே இருக்குன்னு தேடி பார்க்கத் தான் தந்திருக்கு என்பதில், 'டவுட்'டே இல்லை! தி.மு.க., துணை பொதுச்செயலர் கனிமொழி: தி.மு.க., கூட்டணி என்பது மக்களோடு இருக்கும் கூட்டணி. உடன்பாடு இல்லாதோர் இணைந்து, அ.தி.மு.க., கூட்டணியை உருவாக்கி உள்ளனர். அதனால், அக்கூட்டணி வெற்றி பெற வாய்ப்பில்லை. இன்னும் கொஞ்ச நாளுக்கு, அ.தி.மு.க., பத்திரமாக இருக்க வேண்டும் என்பது தான் எங்கள் கவலை. டவுட் தனபாலு: அ.தி.மு.க.,வை யாரும் களவாடிட்டு போகப் போறதில்லை... உங்க கூட்டணியில் இருக்கும் காங்., கட்சி தான், உங்களுக்கு வாலையும், த.வெ.க., பக்கம் தலையையும் காட்டிட்டு இருக்குது... அதனால, உங்க கூட்டணிக்கு அணை போடும் வேலையை முதல்ல நீங்க பார்க்கணும் என்பதில், 'டவுட்'டே இல்லை!