விடுதலை சிறுத்தைகள் கட்சி தலைவர் திருமாவளவன்: பா.ம.க., நிறுவனர் ராமதாஸ், எந்த கூட்டணியில் சேர வேண்டும் என்பது குறித்து, அவர் தான் முடிவெடுக்க வேண்டும். கடந்த 2011ல், ஜாதி - மதத்தின் பெயரால் வெறுப்பு அரசியலை முன்னெடுக்கும் கட்சியுடன் கூட்டணி கிடையாது என, வி.சி.,க்கள் சார்பில் முடிவெடுத்துள்ளோம். அதில், இன்றும் உறுதியாக இருக்கிறோம். டவுட் தனபாலு: 'ராமதாஸ் எங்க அணிக்கு வந்தால், தி.மு.க., அணியில் இருந்து விலகிடுவோம்'னு அடிச்சு சொல்ல மாட்டேங்கிறீங்களே... ஒருவேளை, உங்களுக்கு கூடுதல் சீட்கள் தர்றதா, தி.மு.க., சமரசம் பேசினால், ராமதாஸ் வருகையை இருகரம் நீட்டி ஏத்துக்குவீங்களோ என்ற, 'டவுட்' தான் வருது! அ.தி.மு.க., -தகவல் தொழில்நுட்ப அணி அறிக்கை: சட்டத்துக்கு விரோதமாக, தொடர்ந்து, 'பிளாக்'கில் டிக்கெட் விற்று, அதன் வழியே, பல கோடிகள் கண்ட நடிகர் விஜய் தான் பெரும் ஊழல்வாதி. உங்கள் படம் வெளியாக, அன்றைய முதல்வர் வீட்டில் ஐந்து மணி நேரம் கைகட்டி காத்திருந்ததை சொல்லலாமா? தன் வருமானத்தை பெருக்க, அதிகார மையத்திடம் மண்டியிடுவதும், ஊழல் தான் பனையூர் பண்ணையாரே! அ.தி.மு.க., ஆட்சியில், கல்வி அமைச்சராக இருந்த செங்கோட்டையனை பக்கத்தில் வைத்துக் கொண்டு, ஊழல் ஆட்சி என்று எங்களை சொல்வது தான் துாய சக்தியா? டவுட் தனபாலு: அ.தி.மு.க., ஆட்சியில அமைச்சரா இருந்த செங்கோட்டையன், நிறைய ஊழல் செஞ்சிருக்கார்னு, 'டவுட்'டே இல்லாமல், அக்கட்சியின், ஐ.டி., பிரிவு ஒப்புக் கொள்கிறதோ? தே.மு.தி.க., பொதுச்செயலர் பிரேமலதா: திருச்செந்துார் முருகன் கோவிலில் நல்ல தரிசனம் கிடைத்தது; அதுவே நல்ல சகுனம் தான். கூட்டணி குறித்து, உரிய நேரத்தில் அதிகாரப்பூர்வ அறிவிப்பு வெளியாகும். எங்களது கட்சி நிர்வாகிகள் யாருடன் கூட்டணி வைக்க வேண்டும் என்று விரும்புகின்றனரோ, அவர்களோடு கூட்டணி அமைப்போம். முருகன் அருளால், நிச்சயம் ஒரு மகத்தான கூட்டணி அமையும். டவுட் தனபாலு: அடிக்கடி கடவுள் முருகன் பெயரை உச்சரிக்கிறீங்களே... இதை பார்த்தால், 'திருப்பரங்குன்றம் மலை உச்சியில் தீபம் ஏற்ற விடாம தடுத்து, முருக பக்தர்களின் மனங்களை புண்படுத்திய தி.மு.க.,வுடன் கூட்டணி கிடையாது' என்பதை, உங்க கட்சி நிர்வாகிகளுக்கு நாசுக்கா சுட்டிக்காட்டுறீங் களோ என்ற, 'டவுட்' தான் வருது!