உள்ளூர் செய்திகள்

 டவுட் தனபாலு

காங்., மூத்த தலைவர் மணிசங்கர் அய்யர்: மத்தியில் ஆட்சி அமைக்க, 'இண்டி' கூட்டணியை ஒருங்கிணைக்க வேண்டும். இந்த கூட்டணியை ஒருங்கிணைக்க சிறந்த மனிதர் தமிழக முதல்வர் ஸ்டாலின் தான். அவர் ஒருவர் தான், வெற்று முழக்கங்களை முன்வைக்காமல் பிரச்னைகளை பேசுகிறார். பிரதமரை, 'திருடன்' என்றோ, 'ஓட்டு திருடன்' என்றோ அவர் சொல்லவில்லை. 'இண்டி' கூட்டணிக்கு தலைமை தாங்க, ஸ்டாலின் தான் சரியான நபர். டவுட் தனபாலு: உங்க கட்சியின் நிழல் தலைவரா வலம் வரும் ராகுலை தான் மறைமுகமாக நீங்க விமர்சிக்கிறீங்க என்பது, 'டவுட்' இல்லாம தெரியுது... ஆட்சியில் பங்கு கேட்டு குடைச்சல் தரும் மாணிக்கம் தாகூர் போன்றவங்களை சமாளிக்க, டில்லியில் இருக்கும் உங்களை தி.மு.க., தரப்பு துாண்டி விட்டிருக்குமோ என்ற, 'டவுட்'டும் கூடவே வருது! lll தமிழக பா.ஜ., தலைவர் நயினார் நாகேந்திரன்: என் அரசியல் வாழ்க்கையில், தனிநபர் விமர்சனத்தை அனுமதிப்பதில்லை; நானும் அந்த வகையில் பேசியதில்லை. நடிகை திரிஷா குறித்த என் பேச்சு, அதனால் எழுந்த சர்ச்சை தொடர்பாக பா.ஜ., தேசிய மகளிரணி தலைவர் வானதி, தமிழக பா.ஜ., முன்னாள் தலைவர் அண்ணாமலை ஆகியோர் என்னிடம் பேசினர். உண்மையில் இதில் யாரேனும் வருத்தப்படுவர் எனில், நானும் மனப்பூர்வமாக வருத்தம் தெரிவித்து கொள்கிறேன். டவுட் தனபாலு: 'பேசுறதுக்கு முன்னாடி யோசிக்கணும்... பேசிட்டு யோசிக்கக் கூடாது'ன்னு பெரியவங்க சொல்வாங்க... இன்று தேசிய கட்சியில் பொறுப்பான பதவியில் இருந்தாலும், பழைய திராவிட இயக்க பழக்க தோஷம் உங்களை விட்டு இன்னும் போகலை என்பது, 'டவுட்' இல்லாம தெரியுது! lll அ.ம.மு.க., பொதுச்செயலர் தினகரன்: சட்டசபை தேர்தல் நெருங்கும் நேரத்தில், கடந்த 15 நாட்களில், 5,000 டெண்டர்கள், ஒரே நேரத்தில், 50க்கும் அதிகமான கல்குவாரிகளுக்கு ஏலம் என்ற அறிவிப்பு வெளியாகி உள்ளது. ஆட்சி காலத்தின் இறுதி நேரத்தில், கிடைத்த வரை லாபம் என்று, அரசு கஜானாவை முழுமையாக காலியாக்க துடிக்கும் தி.மு.க.,வுக்கு, வரும் தேர்தலில் மக்கள் பாடம் புகட்டுவர். டவுட் தனபாலு: மக்கள் நமக்கு பாடம் புகட்டி, வீட்டுக்கு அனுப்பிடுவாங்களோ என்ற பயத்துல தான், கடைசி நேர கல்லா கட்டும் பணியில் ஆளுங்கட்சியினர் தீவிரமா இருக்காங்களோ என்ற, 'டவுட்' வருது... அடுத்து, தே.ஜ., கூட்டணி ஆட்சிக்கு வந்தாலும், காலியான கஜானாவை வச்சு திணறட்டும்னு திட்டம் போட்டே இப்படி பண்றாங்களோ என்ற, 'டவுட்'டும் சேர்ந்தே வருது! lll


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !