உள்ளூர் செய்திகள்

 டவுட் தனபாலு

விருதுநகர் காங்., - எம்.பி., மாணிக்கம் தாகூர்: பீஹார் முதல்வர் நிதிஷ் குமார் நேர்மையான அரசியல் தலைவர். அவரை ராஜினாமா செய்ய வைத்து, ராஜ்யசபாவுக்கு மோடி அரசு அனுப்புகிறது. இதேபோன்ற நிலை, தமிழகத்தில் முன்னாள் முதல்வர் பழனிசாமிக்கு வரக்கூடாது. பதவி ஆசைக்காகவும், சி.பி.ஐ., அமலாக்கத் துறை ஆகியவற்றை வைத்து மிரட்டுவதாலும், பா.ஜ.,விடம் பழனிசாமி அடிபணிந்துள்ளார். டவுட் தனபாலு: சி.பி.ஐ., அமலாக்கத் துறையை விட்டு, மற்ற கட்சிகளை மிரட்டி வழிக்கு கொண்டு வரும் யுக்தியை கண்டுபிடிச்சதே காங்கிரஸ் தானே... 2011 சட்டசபை தேர்தல் சமயத்தில், தி.மு.க., தலைமை அலுவலகமான அறிவாலயத்தில் சி.பி.ஐ.,யை விட்டு, 'ரெய்டு' நடத்தி, காங்., கட்சிக்கு 63 சீட்களை மிரட்டி வாங்கிய வரலாற்றை மறந்துட்டீங்களோ என்ற, 'டவுட்'தான் வருது! தமிழக வெற்றிக் கழகம் கட்சி தலைவர் விஜய்: நம் கட்சியின் மகளிர் அணி கட்டமைப்பை வலுப்படுத்த, ஸ்பூர்த்தி அருண் தலைமையில், 10 பேர் கொண்ட ஒருங்கிணைப்பு குழு உருவாக்கப்பட்டுள்ளது. இந்த குழு, என் உத்தரவு மற்றும் ஆலோசனையின்படி, பொதுச்செயலர் ஆனந்த் மற்றும் நிர்வாகக் குழுவின் வழிகாட்டுதலின்படி செயல்படும். டவுட் தனபாலு: உங்க கட்சியில் தினமும் ஒரு குழுவை போடுறீங்க... இந்த குழுவினர் எல்லாம் என்ன பண்றாங்க, யாரிடம் ஆலோசனை நடத்துறாங்கன்னே தெரியலையே... எல்லா கட்சிகளும் தேர்தல் களத்தில் இறங்கிட்ட சூழலில், உங்களது வீடு மற்றும் அலுவலகம் இருக்கும் சென்னை, நீலாங்கரையிலும், பனையூரிலும் மட்டும் கட்சியை நடத்திட்டு இருந்தா, உங்களது முதல்வர் கனவு பலிக்குமா என்பது, 'டவுட்'தான்! தமிழக முதல்வர் ஸ்டாலின்: தி.மு.க., கூட்டணியில் புதிதாக பல கட்சிகள் இணைந்து, கூடுதல் வலிமையை பெற்றிருக்கிறோம். அதனால் தான், அரசியல் எதிரிகள், தங்கள் கட்சியின் வலிமை மீது நம்பிக்கை இல்லாமல், நம் கூட்டணி உடையாதா என ஏங்கி கிடந்தனர். நம்மிடமிருந்து, 'அவர்கள் வெளியேறி விடுவர், இவர்கள் பிரிந்து போவர்' என்று கனவில் கணக்கு போட்டு, கற்பனை கோட்டைகளை கட்டினர். கூட்டணியை உடைக்க முயற்சி செய்தனர். அதை முறியடித்து வெற்றி பெற்றுள்ளோம். டவுட் தனபாலு: உங்க கூட்டணியை உடைக்க, வெளியில இருந்து யாரும் முயற்சி பண்ணலை... காங்.,கில் இருக்கும் சிலர் தான், விஜய் கட்சியுடன் அணி சேர ஆசைப்பட்டு, கூட்டணியை உடைக்க பார்த்தாங்க... இப்ப கூட்டணியை கட்டி காப்பாத்திட்டதால, அந்த பழியை எதிர்க்கட்சிகள் மீது போடுறீங்க என்பது, 'டவுட்' இல்லாம தெரியுது!


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

வாசகர்கள் கருத்துகள் ( 2 )

duruvasar
மார் 09, 2026 14:54

மாணிக்கம் தாகூர் அவருடைய தலைவர் ராகுலை போல வளர்ச்சி அடையாத நிலையில் உள்ளவர் என்ற டவுட்டு வரவில்லையா.


Balaji
மார் 09, 2026 11:07

நிதிஷ்குமார் 20 வருடம் ஆட்சி முடித்து வயது மூப்பின் காரணமாக முதலமைச்சர் பதவியை ராஜினாமா செய்து அடுத்த தலைமுறைக்கு வழி விடுவது எப்படி பிஜேபி காரணமாகும். இதை அதிமுக வுடன் பொருத்தி பார்ப்பது சரியான ஒப்பீடு கிடையாது. உங்கள் வாதப்படி வைத்துக்கொண்டாலும் 20 வருடம் கழித்துதான் இது நடக்கும்.


அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை