உள்ளூர் செய்திகள்

 டவுட் தனபாலு

இந்திய கம்யூ., மாநில செயலர் வீரபாண்டியன்: தற்போது, தி.மு.க., கூட்டணியில் இந்திய கம்யூ., இல்லை. 'தமிழக வெற்றிக் கழக அரசுக்கு ஆதரவு அளிக்க, நாங்கள் தான் கூட்டணி கட்சிகளை அனுப்பி இருக்கிறோம்' என்று, தி.மு.க., தலைவர் ஸ்டாலின் சொல்லி வருவது சரியல்ல. த.வெ.க.,வை நாங்கள் புதிய ஜனநாயக சக்தியாக கருதுகிறோம். கடந்த தி.மு.க., ஆட்சியில் தவறுகள் நடந்திருந்தால், அவற்றின் மீது சட்டப்படி த.வெ.க., அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும். டவுட் தனபாலு: 'தி.மு.க., ஆட்சியில் தவறுகள் நடந்திருந்தால் நடவடிக்கை எடுக்கணும்'னு த.வெ.க., அரசுக்கு, 'எடுத்து' கொடுக்குறீங்களே... நாடு முழுக்க காணாம போயிட்ட உங்க கட்சிக்கு சில சீட்களும், தேர்தல் செலவுக்கு பல கோடி ரூபாயையும் கொடுத்து உதவிய தி.மு.க.,வுக்கு, சரியான கைமாறு பண்ணிட்டீங்க என் பதில், 'டவுட்'டே இல்லை! தி.மு.க., துணை பொதுச்செயலர் கனிமொழி: தமிழகத்தில் என்னென்ன திட்டங்கள் இருக்கிறது என்றே புதிய ஆட்சியாளர்களுக்கு தெரியவில்லை. முதன் முதலாக, மகளிரை காவல் துறைக்கு கொண்டு வந்தது கருணாநிதி. மகளிர் பாதுகாப்புக்காக தனி பிரிவையே உருவாக்கியது ஸ்டாலின். இன்று புதிதாக ஒரு சீருடை வழங்கினால், அது புதிய திட்டமாக மாறி விடுமா? தமிழகத்தில் ஏற்கனவே இருந்த திட்டத்தை, 'சிங்கப்பெண் படை' என, 'காப்பி பேஸ்ட்' செய்து த.வெ.க.வினர், 'ஸ்டிக்கர்' ஒட்டியுள்ளனர். டவுட் தனபாலு: தமிழகத்தில் ஏற்கனவே இந்த திட்டம் இருந்துச்சு என்றால், தி.மு.க., ஆட்சியில் பெண்கள், குழந்தைகளுக்கு எதிரான பாலியல் குற்றங்கள் அதிகமா நடந்தது ஏன்...? நீங்க, இப்ப ஆட்சியை இழந்துட்டு நிற்பதற்கு அந்த சம்பவங்களும் ஒரு காரணம் என்பதில், 'டவுட்'டே இல்லை! பத்திரிகை செய்தி: தென்சென்னை மேற்கு மாவட்ட ம.தி.மு.க., செயலர் சைதை சுப்பிரமணி, கட்சியின் பொதுச்செயலர் வைகோவுக்கு எழுதியுள்ள கடிதத்தில், 'ம.தி.மு.க.,வில், 33 ஆண்டுகளாக பல பொறுப்புகளை வழங்கினீர்கள். நானும் கட்சி வளர்ச்சிக்கு உழைத்துள்ளேன். தற்போது, என் குடும்ப சூழல் மற்றும் அரசியல் சூழ்நிலையால், கட்சி பொறுப்பி லிருந்து விலகுகிறேன்' என தெரிவித்துள்ளார். டவுட் தனபாலு: ம.தி.மு.க.,வில் இப்படி ஒரு மாவட்டச் செயலர் இருந்தார் என்பதே, இப்பதான் வெளியுலகிற்கு தெரியவருது... அந்த வகையில் தான் வைகோவின் கட்சியும், அவரது செயல்பாடுகளும் இருந்திருக்கு என்பது, 'டவுட்' இல்லாம தெரியுது!


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

வாசகர்கள் கருத்துகள் ( 2 )

duruvasar
ஜூன் 14, 2026 14:25

கனிமொழி யின் கருத்துக்கு மயிலிறகைவிட மென்மையா மைக்ரோ பிரஷ் கொண்டு டவுட்டு என்ற பெயரில் தடவிகொடுக்கிறோம் என தோன்றவில்லையா.


Raajan
ஜூன் 14, 2026 06:18

மகளீருக்கு தனியாக பாதுகாப்பு தரவேண்டும் என்ற நிலை உங்கள் கட்சியின் ஆட்சி நேரத்தில் தானே வந்தது. தீம்க ரெளடிகளை கட்டவிழ்த்து விட்டதே உங்கள் ஆட்சி தானே. "ஜெ" பெண் என்றும் பாராமல் அவமானப்படுத்தியது உங்கள் கட்சிதானே? உங்கள் பெண்ணீயம் புரட்டுக்களை மக்கள் மறக்கவில்லை. பேசாம எங்கனாச்சும் சைடு போய் உருட்டி விளையாடுங்க.


அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை