தமிழக பொதுப்பணித் துறை அமைச்சர் ஆதவ் அர்ஜுனா: சட்டசபையில் கட்சி நிதி என முதல்வர் பேசியதும், எதிர்க்கட்சியினர் குரல் எழுப்புகின்றனர். கடந்த தி.மு.க., ஆட்சியில், மொத்த துறைகளில் 16 துறைகள் ஸ்டாலின் மருமகன் சபரீசனுக்கும், 16 துறைகள் உதயநிதிக்கும் பிரித்து ஊழல் செய்துள்ளனர். மேலும், 1,000 தனியார் பள்ளிகளிடம், தலா 25 லட்சம் ரூபாய் வரை லஞ்சம் பெற்றுள்ளனர். இது குறித்து சட்டரீதியாக நடவடிக்கை எடுக்கப்படும். டவுட் தனபாலு: 'பெண் களுக்கு சொத்தில் சம பங்கு' என்ற சட்டத்தை முன்னாள் முதல்வர் கருணாநிதி தான் கொண்டு வந்தாரு... அவரது குடும்பத்திலும் அதை சரியா செயல்படுத்தியிருக்காங்க என்பதில், 'டவுட்'டே இல்லை... அதேபோல, அடுத்து பள்ளிக்கல்வி துறையின், 'மாஜி' அமைச்சர் மகேஷ் வீட்டுல லஞ்ச ஒழிப்பு போலீசார் சோதனை நடத்த போறாங்க என்பதும், 'டவுட்'டே இல்லாம தெரியுது! பத்திரிகை செய்தி: பா.ம.க.,வில் ராமதாசும், அவரது மகன் அன்புமணியும் மீண்டும் இணைந்து விட்டதால், ராமதாசால் நியமிக்கப்பட்ட நிர்வாகிகள் கலக்கத்தில் உள்ளனர். 'ராமதாசால் நியமிக்கப்பட்டவர்கள், கட்சிக்கு வலிமை சேர்ப்பவர்களாக இருந்தால், அவர்களை அன்புமணி நீக்க மாட்டார். ஆனால், ராமதாசின் மகள் ஸ்ரீகாந்தி, அவரது மகன் சுகந்தன், கவுரவ தலைவர் ஜி.கே.மணி ஆகியோர் கட்சி பொறுப்புகளில் இருப்பதை அன்புமணி விரும்ப மாட்டார்' என அக்கட்சி வட்டாரங்கள் தெரிவிக்கின்றன. டவுட் தனபாலு: இதுல, ஸ்ரீகாந்தியும், சுகந்தனும் அன்புமணியின் ரத்த சொந்தங்கள் என்பதால் அவங்களுக்கு எந்த பாதிப்பும் இருக்காது... ஆனா, 'ராமதாசின் எல்லா முடிவுகளுக்கும் ஜி.கே.மணி தான் காரணம்'னு அன்புமணி குற்றம்சாட்டியிருப்பதால், அவரது அரசியல் எதிர்காலம் என்னவாகும் என்ற, 'டவுட்'தான் வருது! தமிழக வருவாய் துறை அமைச்சர் செங்கோட்டையன்: பா.ஜ., தமிழக தலைவர் நயினார் நாகேந்திரன் காமெடியாக ஏதாவது பேசிக்கொண்டு இருப்பார்; அவருக்கெல்லாம் பதில் சொல்ல முடியாது. பா.ஜ.,வினர் வேண்டுமென்றே த.வெ.க.,வை விமர்சிக்கின்றனர். அவர்கள் விமர்சிக்க வேண்டியது, தி.மு.க.,வை தான். ஏனெனில், தி.மு.க.,வினர் தான் பா.ஜ.,வை தாக்கி வருகின்றனர். டவுட் தனபாலு: செத்த பாம்பை அடிப்பதில் என்ன லாபம்...? ஆளுங்கட்சியை விமர்சித்தால் தான் விளம்பர வெளிச்சம் கிடைக்கும்னு நினைச்சு நயினார் நாகேந்திரன் செயல்படுறாரோ என்ற, 'டவுட்' உங்களுக்கு வரலையா?