உள்ளூர் செய்திகள்

 டவுட் தனபாலு

தி.மு.க., இளைஞரணி செயலர் உதயநிதி: முதல்வர் விஜய்க்கு கொலை மிரட்டல் விடுத்ததாக கைது செய்யப்பட்டுள்ள, விளாத்திகுளம் தி.மு.க., - எம்.எல்.ஏ., மார்க்கண்டேயன், சிறையில் தைரியமாக இருக்கிறார். அவரை, ஜாமினில் வெளியே கொண்டு வர, சட்டரீதியான நடவடிக்கைகள் மேற்கொள்ளப்படும். டவுட் தனபாலு: மார்க்கண்டேயன் கைதாகி ஒரு வாரம் கழிச்சு தான், அவரைப் போய் பார்க்கணும்னு உங்களுக்கு தோணுச்சா...? இதுவே, உங்க தாத்தா கருணாநிதியா இருந்திருந்தா, எம்.எல்.ஏ., கைதான மறுநாளே சிறைக்குப் போய் பார்த்து ஆறுதல் சொல்லி, அதே ஊர்ல கண்டனப் பொதுக்கூட்டமும் நடத்தி, ஆளுங்கட்சியை காய்ச்சி எடுத்திருப்பார்... அது எல்லாம் உங்களுக்கு கை வருமா என்பது, 'டவுட்' தான்! ---- வி.சி.க., தலைவர் திருமாவளவன்: பா.ஜ., அடுத்தடுத்து பல வீழ்ச்சிகளை சந்திப்பதற்கான தொடக்கப் புள்ளி தான், மாணவர்கள் போராட்டம். அரசியலில், நாம் தீர்மானிப்பவர்கள் தான் தோல்வியைத் தருவர் என்பது இல்லை; நம்மால் கணிக்க முடியாதவர்களும் நம்மை வீழ்த்துவர். அப்படித்தான், தி.மு.க., - அ.தி.மு.க.,வை த.வெ.க., வீழ்த்தியது. டவுட் தனபாலு: வாஸ்தவம் தான்... விஜய் பெயரை சொல்வதைக் கூட, தகுதிக் குறைவான செயலாக, அன்றைய முதல்வர் ஸ்டாலின் மற்றும் உதயநிதி எல்லாம் நினைச்சாங்க... ஆனா, இன்னைக்கு பாருங்க... ஒரு நாளைக்கு மூணு அறிக்கை, நாலு பேட்டின்னு, விஜய் பெயரை மந்திரம் மாதிரி உச்சரிக்க வேண்டிய சூழலுக்கு ஆளாகிட்டாங்க என்பதில், 'டவுட்'டே இல்லை! ------ இந்திய கம்யூ., தமிழக செயலர் வீரபாண்டியன்: எங்கள் கட்சி, யாருடைய மிரட்டலுக்கும் அஞ்சும் கட்சியல்ல. கட்சியின் முடிவை செயல்படுத்துவதில் ராணுவமே குறுக்கிட்டாலும், அதை எதிர்கொள்வோம் என்பதற்கு பல உதாரணங்கள் உள்ளன. த.வெ.க.,வும், அதன் தலைமையிலான அரசும் விமர்சனத்துக்கு அப்பாற்பட்டவை அல்ல. விமர்சனங்கள் என்பது, ஜனநாயக முறைகளைப் பாதுகாக்கும் வழிமுறைகளில் ஒன்று. டவுட் தனபாலு: 'த.வெ.க.,வை விமர்சிப்போம்'னு சொல்ற நீங்க, கடந்த ஐந்தாண்டு தி.மு.க., ஆட்சியில், எத்தனையோ நெஞ்சை உலுக்கும் சம்பவங்கள் நடந்தும், விமர்சிக்காம அடக்கி வாசித்தது ஏன் என்ற, 'டவுட்' எழுதே... தேர்தலில் சீட்களும், செலவுக்கு கோடி கோடியாக அவங்க கொட்டிக் கொடுத்ததும் தான் காரணமோ என்ற, 'டவுட்'டும் சேர்ந்தே எழுது!


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை