மா.கம்யூ., தமிழக செயலர் சண்முகம்:
பொது வெளியில் ஆபாசமாகவும், அருவருக்கத்தக்க வகையிலும் எதிர்க்கட்சித் தலைவர் உதயநிதி பேசியது கண்டிக்கத்தக்கது. பொது வெளியில் அரசியல் நாகரிகத்தை உதயநிதி கடைப்பிடிக்க வேண்டும். உதயநிதியின் பேச்சை நாடே கண்டித்து வருகிறது. இடது சாரிகள் யாரும் இதுபோல பேச மாட்டோம். அப்படிப் பேசினால், அவர்களை கட்சியில் வைத்துக் கொள்ள மாட்டோம். டவுட் தனபாலு:
அரசியல் நாகரிகத்தை கடைப்பிடிக்கிறதுல, உங்க கட்சியை அடிச்சுக்க யாரும் கிடையாது என்பதில், 'டவுட்'டே இல்லை... அதேநேரம், 'இப்படி எல்லாம் ஆபாசமா பேசியவர் கட்சியுடனா இத்தனை வருஷங்களா கூட்டணியில் இருந்தோம்' என்ற குற்ற உணர்ச்சி உங்களுக்கு வரலையா என்ற, 'டவுட்'டும் சேர்ந்தே வருது! ---தி.மு.க., இளைஞரணி செயலர் உதயநிதி:
பெண்களை தாழ்த்திப் பேசும் எண்ணம் எனக்கு துளியும் இல்லை. என் தாய், தந்தை என்னை அப்படி வளர்க்கவில்லை. எனக்கு திருமணமாகி மனைவி இருக்கிறார். அவருடன் தான் வாழ்ந்து வருகிறேன். எனக்கு மகள், தங்கை இருக்கின்றனர். தமிழகத்தில் உள்ள ஒவ்வொரு பெண்ணையும் தாயாக, சகோதரியாக நினைக்கிறேன். டவுட் தனபாலு:
தஞ்சையில், உங்க கட்சியினர் ஒரு நடிகை பெயரைச் சொல்லி கூச்சல் போட்டப்ப, 'அப்படி எல்லாம் சொல்லக் கூடாது'ன்னு, அவங்க வாயை அடைச்சிருந்தா, பொறுப்பான எதிர்க்கட்சி தலைவரா உங்களைப் பாராட்டியிருக்கலாம்... ஆனா, அங்க உங்க கட்சியினரை உற்சாகப்படுத்தி பேசிட்டு, இப்ப இப்படி உருகுவதை உங்க கட்சியில் இருக்கும் பெண்களே நம்புவாங்களா என்பது, 'டவுட்' தான்! ----விளாத்திகுளம் தி.மு.க., - எம்.எல்.ஏ., மார்க்கண்டேயன்:
எதிர்க்கட்சித் தலைவர் உதயநிதி, நேரடியாக சிறைக்கு வந்து என்னை சந்தித்து, சட்டசபைக்கு வருமாறு அழைத்துச் சென்றார். முன்னாள் முதல்வர்கள் கருணாநிதி, ஸ்டா லின் ஆகியோர் பல ஆண்டுகள் சிறையில் இருந்துள்ளனர். தி.மு.க.,வினருக்கு சிறை என்பது புதிதல்ல; அது முக்தி தரும் இடம். டவுட் தனபாலு:
முதல்வர் விஜய்க்கு மிரட்டல் விடுத்துப் பேசிய வழக்கில் கைதாகி, 10 நாள் தான் ஜெயில்ல இருந்தீங்க... அதுக்குள்ள, கருணாநிதி, ஸ்டாலின் தகுதி உங்களுக்கும் வந்துட்ட மாதிரி, 'பில்டப்' தர்றீங்களே... எத்தனை வருஷங் கள் நீங்க ஜெயில்ல இருந்தாலும் சரி, காலையில கைதாகி, ராத்திரி விடுதலையான உதயநிதிக்கு கிடைச்ச மதிப்பும், மரியாதையும் உங்களுக்கு கிடைக்காது என்பதில், 'டவுட்'டே இல்லை!