உள்ளூர் செய்திகள்

 டவுட் தனபாலு

பா.ஜ., தமிழக தலைமை செய்தி தொடர்பாளர் நாராயணன் திருப்பதி: தமிழக நிதி அமைச்சர் மரிய வில்சன் சட்டசபையில் பேசுகையில், 'எவ்வளவு தமிழ் படித்திருந்தாலும், கிறிஸ்துவ மதம் போதிக்கும் அன்பும், அமைதியும், பொறுமையும், பைபிளில் கூறியுள்ளதை போல் யாருக்கும் இருக்காது' என கூறியது கண்டிக்கத்தக்கது. 'தமிழை விட, என் மதம் தான் உயர்ந்தது' என கூறினால், அது முழுக்க முழுக்க மதவாதமே. இதை, பா.ஜ., வன்மையாகக் கண்டிக்கிறது. டவுட் தனபாலு: 'தமிழ் எங்கள் உயிருக்கு நேர்'னு, பாரதிதாசன் பாடி வச்சிருக்காரு... 'அந்த தமிழை விட என் மதம் தான் பெரிது'ன்னு, ஹிந்துக்களே சொல்லியிருந்தாலும் அதை ஏற்க முடியாது... அந்த வகையில், அமைச்சர் மரிய வில்சனுக்கு இன்னும் பக்குவம் தேவை என்பதில், 'டவுட்'டே இல்லை! பா.ஜ., தமிழக தலைவர் நயினார் நாகேந்திரன்: ஊரக பகுதி மாணவர்களுக்கு, உயர்தரமான சி.பி.எஸ்.இ., கல்வியை இலவசமாக வழங்கும் நவோதயா பள்ளிகளைத் தடுக்கும் நோக்கில், த.வெ.க., அரசு, உச்ச நீதிமன்றத்தில் பிரமாண பத்திரம் தாக்கல் செய்திருப்பது கண்டனத்திற்குரியது. உணவு, சீருடை, புத்தகங்கள் என, அனைத்தையும் இலவசமாக வழங்கும் பள்ளிகளை தடுப்பதன் வாயிலாக, தி.மு.க.,வின் மாணவர் விரோத பாதையையே, த.வெ.க., அரசும் பின்பற்றி, தி.மு.க.,வின், 'பி -டீம்' ஆக செயல்படுவது ஏமாற்றமளிக்கிறது. டவுட் தனபாலு: தி.மு.க., அரசு பின்பற்றிய கொள்கைகள் அனைத்தையும், அச்சு பிசகாமல் இவங்களும் கடைப்பிடிக்கிறாங்க... பல அரசு துறைகளில், லஞ்சம் ஓரளவுக்கு குறைஞ்சிருக்கு என்பதை தவிர, தி.மு.க., ஆட்சிக்கும், த.வெ.க., ஆட்சிக்கும் ஆறு வித்தியாசங்களையாவது கண்டுபிடிக்க முடியுமா என்பது, 'டவுட்' தான்! த.வெ.க.,வைச் சேர்ந்த, தமிழக ஹிந்து அறநிலையத்துறை அமைச்சர் ரமேஷ்: தி.மு.க., முன்னாள் அமைச்சர் சேகர்பாபு கூறியபடி, நான் அரைகுறையாகத் தான் இருக்கிறேன். கோவில் பணத்தை கொள்ளையடிப்பதில், முறைகேடு செய்வதில், நிர்வாக சீர்கேடு செய்வதில் எனக்கு அனுபவம் குறைவு தான். அதேநேரம், அறநிலையத் துறையில் தி.மு.க.,வினர் செய்த ஊழல், முறைகேடுகள் எல்லாம் அரைகுறையாகவே தெரிந்துள்ளன. முழுமையாக தெரிந்த பின், சேகர்பாபு பதிலளிக்க தயாராக இருக்க வேண்டும். டவுட் தனபாலு: 'கடந்த ஆட்சியில் அறநிலையத் துறையில் நடந்த முறைகேடுகளை தோண்டி துருவப் போறோம்'னு, அமைச்சர் ரமேஷ் சொல்லிட்டாரு... 'வாயை கொடுத்து வம்புல மாட்டிக்கணுமா' என்ற பழமொழிக்கு சரியான உதாரணம், சேகர்பாபு தான் என்பதில், 'டவுட்'டே இல்லை!


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

வாசகர்கள் கருத்துகள் ( 2 )

Lakshminarasimhan
ஆக 14, 2026 07:36

இப்படி அமைச்சர் ஒரு மதம் சார்ந்த கருத்தை சட்டமன்றத்தில் உரைத்தது நியாயம் தானா ?


Raajan
ஆக 14, 2026 04:52

அட நோக்கமாக. திராவிட கட்சி ஊழல் செய்ததை யாரும் நிரூபித்ததே இல்லை, இதை வேண்டுமானால் அனுபவம் பத்தாதுனு சொல்லியிருக்கலாம். தீம்க ஃபைல்ஸ் 1,2,3 னு வரிசையையாக கொடுத்தவரையே ஓரங்கட்டி வைச்சுட்டாங்க. பாஜக இன்னும் ஊழலுக்கு எதிராக இருக்குதானு கேள்வி வருது.


அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை