உள்ளூர் செய்திகள்

 டவுட் தனபாலு

வி.சி.க., தலைவர் திருமாவளவன்: எதிர்க்கட்சித் தலைவர் உதயநிதி, த.வெ.க., கூட்டணி கட்சிகளை, 'சோபா மாடல்' என விமர்சிப்பதை, மக்கள் புறந்தள்ளி விட்டனர். இந்த காலத்தில் யாராவது சோபாவில் பணத்தை மறைத்து வைத்து கொடுப்பரா? ஒரு சினிமாவில் இடம்பெற்ற காட்சியை மையப்படுத்தி, மக்கள் ஏற்க முடியாத ஒரு விமர்சனத்தை உதயநிதி கூறுகிறார். டவுட் தனபாலு: நீங்க சொல்றதும் வாஸ்தவம் தான்... அதேநேரம், இந்த காலத்தில் சோபா இல்லாம, வேற எந்த வகைகளில் பணத்தை, 'பைசல்' பண்ணுவாங்க என்ற ரகசியத்தையும் நீங்க வெளியிட்டிருந்தா, 'டவுட்' இல்லாம உங்களை பாராட்டலாம்! இந்திய கம்யூ., தமிழக செயலர் வீரபாண்டியன்: மக்கள் மீது இருக்கும் நம்பிக்கையில் இடைத்தேர்தலில் களம் இறங்கி உள்ளோம். கூட்டணி பலம், பண பலத்துடன் இருக்கும் கட்சிகளை எதிர்த்து, கொள்கை பலத்துடன் போட்டி போடுகிறோம். த.வெ.க., அரசுக்கு கம்யூனிஸ்ட்கள் அளிக்கும் ஆதரவு என்பது, மக்கள் அளித்த தீர்ப்புக்கான ஆதரவு. எங்கள் கட்சி கூடி ஒரு முடிவு எடுக்கும் வரை, இந்த ஆதரவு தொடரும். த.வெ.க., ஆட்சியை கவிழ்க்கும் எண்ணம் எங்களுக்கு இல்லை. டவுட் தனபாலு: வர்ற இடைத்தேர்தலில் இரண்டு தொகுதிகளிலும் த.வெ.க., ஜெயிச்சிட்டா, உங்க கட்சியின் ஆதரவே அவங்களுக்கு தேவையில்லாம போயிடுமே... அதனால தான், 'ஆட்சியை கவிழ்க்கும் எண்ணம் இல்லை'ன்னு அடக்கி வாசிக்கிறீங்க என்பது, 'டவுட்'டே இல்லாம தெரியுது! புதிய தமிழகம் கட்சி நிறுவனர் கிருஷ்ணசாமி: தமிழகத்தில் பள்ளி, கல்லுாரி மாணவர்களுக்கான தங்கும் விடுதிகளில் மாட்டிறைச்சி வழங்கப் போவதாக, வி.சி.க.,வைச் சேர்ந்த, தமிழக சமூக நீதித் துறை அமைச்சர் வன்னி அரசு அறிவித்தது கண்டிக்கத்தக்கது. அவர், தன் அறிவிப்பை திரும்பப் பெற்று, பொது மன்னிப்பு கேட்க வேண்டும். இதை வலியுறுத்தி, வரும் 30ம் தேதி, வன்னி அரசின் வீடு மற்றும் மாவட்ட தலைநகரங்களில், புதிய தமிழகம் கட்சி உள்ளிட்ட 12 அரசியல் அமைப்புகள் இணைந்து ஆர்ப்பாட்டம் நடத்தும். டவுட் தனபாலு: உணவு, உடை என்பது தனி நபர் சுதந்திரம் சம்பந்தப்பட்டது... 'நீ இதைத்தான் சாப்பிடணும்; இதைத்தான் உடுத்தணும்'னு யாரையும் கட்டாயப்படுத்தக் கூடாது... அந்த வகையில், அமைச்சர் வன்னி அரசின் கருத்து கடுமையாக கண்டிக்கப்பட வேண்டியது என்பதில், 'டவுட்'டே இல்லை!


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !