உள்ளூர் செய்திகள்

 டவுட் தனபாலு

பா.ஜ., தமிழக மூத்த தலைவர் தமிழிசை சவுந்தரராஜன்: தமிழகத்தில் டெங்கு காய்ச்சல் பாதிப்பு அதிகரித்துள்ளது. தற்போது, மாநகராட்சிகளில் குப்பை அகற்றும் பணிகள் முறையாக நடக்காததால், டெங்கு பாதிப்பு அதிகரித்துள்ளது. மாநகராட்சி ஒருவரிடமும், ஆட்சி ஒருவரிடமும் இருப்பதால், மக்கள் பாதிக்கப்படுகின்றனர். இதில், முதல்வர் விஜய், தனி கவனம் செலுத்த வேண்டும். டவுட் தனபாலு: 'தமிழகம் முழுக்கவே, உள்ளாட்சி பதவிகளில், 90 சதவீதம் தி.மு.க.,வினர் தான் இருக்காங்க... அதனால, எல்லா உள்ளாட்சி அமைப்புகளையும் உடனே கலைச்சிட்டு, தேர்தல் நடத்தி, அங்கயும் த.வெ.க.,வினரை பதவிகள்ல அமர்த்துங்க... அப்ப தான் நிர்வாகம் சீராக நடக்கும்'னு ஆளுங்கட்சிக்கு 'ஐடியா' தர்றீங்களோ என்ற, 'டவுட்' தான் வருது! ஜனாதிபதிக்கு வி.சி.க., தலைவர் திருமாவளவன் கடிதம்: அரசியலமைப்பு சட்டப்படி, மூன்று உறுப்பினர்கள் கொண்ட தேர்தல் கமிஷனில், பெரும்பான்மை அடிப்படையில் முக்கிய முடிவுகள் எடுக்கப்பட வேண்டும். ஆனால், தலைமை தேர்தல் கமிஷனர் ஞானேஷ்குமாருக்கு எதிராக, மற்ற இரு தேர்தல் கமிஷனர்கள், 14 முறை தங்கள் ஆட்சேபனையை பதிவு செய்துள்ளனர். எனவே, தலைமை தேர்தல் கமிஷனர் ஞானேஷ்குமாரை பதவி விலக அறிவுறுத்த வேண்டும். டவுட் தனபாலு: உச்ச நீதிமன்றம், உயர் நீதிமன்றங்களில் பல நீதிபதிகள் இருந்தாலும், தலைமை நீதிபதிக்கு தானே சகல அதிகாரங்களும் இருக்கு... அதேபோல, தேர்தல் கமிஷனில் ரெண்டு கமிஷனர்கள் இருந்தாலும், தலைமை கமிஷனருக்கு தான், முடிவெடுக்கும் அதிகாரம் உண்டு என்பது, மூத்த அரசியல் தலைவரான உங்களுக்கு தெரியாதா என்ற, 'டவுட்' தான் வருது! பத்திரிகை செய்தி: கடந்த தி.மு.க., ஆட்சியில், நகராட்சி மற்றும் குடிநீர் வழங்கல் துறை அமைச்சராக நேரு இருந்தார். அப்போது அவரது துறையில், 1,020 கோடி ரூபாய்க்கு ஊழல் நடந்திருப்பதாக, நேரு, அவரது தம்பிகள் மணிவண்ணன், ரவிச்சந்திரன், நேருவின் வலதுகரமாக இருந்த கவிபிரசாத் உட்பட 13 பேர் மீது, லஞ்ச ஒழிப்பு போலீசார் வழக்கு பதிவு செய்தனர். இவ்வழக்கில் தேடப்பட்டு வந்த கவிபிரசாத், சென்னை விமான நிலையத்தில் இருந்து லண்டன் செல்ல முயன்றபோது, கைது செய்யப்பட்டார். டவுட் தனபாலு: விசாரணையில், கவிபிரசாத் கக்கப் போகும் தகவல்கள் எல்லாம், நேருவுக்கும், அவரது தம்பிகளுக்கும் நல்ல செய்தியா இருக்காது... அதனால, கவிபிரசாத்தை தொடர்ந்து, அவங்களும் கம்பி எண்ண வேண்டியிருக்கும் என்பதில், 'டவுட்'டே இல்லை!


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

வாசகர்கள் கருத்துகள் ( 2 )

கண்ணன்
செப் 28, 2026 11:24

அரசியல் தலைவர்கள் எவ்வளவு மூத்தோரக இருப்பினும் அவர்களுக்கு முறையான படிப்பிலையெனில் அவர்களால் எந்தவிதமான பயனுமில்லை


அசோகன்
செப் 28, 2026 08:58

வாதங்கள் நடந்ததை மட்டுமே ஒரு முடிவாக பேசுவது அபத்தம்...... இறுதி முடிவில் மூன்று பேருமே ஒப்புக்கொண்டு கையெழுதிட்டத்தை வேண்டுமென்றே மறைத்து எதிர்க்கட்சிகள் பேசுவது கேலிக்கூத்து.....