உள்ளூர் செய்திகள்

/ தினம் தினம் / இதப்படிங்க முதல்ல / பெற்றோரை இழந்த குழந்தைகளை அரவணைக்கும் முஸ்லிம் பெண்

பெற்றோரை இழந்த குழந்தைகளை அரவணைக்கும் முஸ்லிம் பெண்

சிறு வயதிலேயே பெற்றோரை இழந்து தவிக்கும் குழந்தைகளுக்கு, தங்களை யாராவது அன்பாக அரவணைக்க மாட்டார்களா என்ற ஏக்கம் இருக்கும். இப்படிப்பட்ட குழந்தைகளை அரவணைக்கும் இடமாக உள்ளது 'சினேக தீபா' என்ற பராமரிப்பு மையம்.இந்த மையத்தை நடத்துபவர் முஸ்லிம் பெண் தபசும். இந்த மையத்தில் பல ஜாதி, மதங்களை சேர்ந்த 25 குழந்தைகள் பராமரிக்கப்பட்டு வருகின்றனர்.இம்மையம் துவங்கப்பட்ட வரலாறு பற்றி தபசும் கூறியதாவது:நான் கல்லூரியில் படித்தபோது எனக்கு நெருங்கிய தோழி ஒருவர் இருந்தார். கல்லுாரி முடிந்தவுடன் தோழிக்கு திருமணம் ஆகிவிட்டது. ஆனால் சில ஆண்டுகளில் எச்.ஐ.வி., பாதிப்பு ஏற்பட்டு இறந்தார். அவருக்கு பிறந்த மகளை, கணவர் குடும்பத்தினர் ஒதுக்க ஆரம்பித்தனர்.

வீட்டில் வளர்ப்பு

தனி தட்டு, டம்ளர், படுக்கை கொடுத்தனர். இதை நானே என் கண் கூடாக பார்த்தேன். தோழியின் மகளை அழைத்துச் சென்று எனது வீட்டில் வளர்க்க ஆரம்பித்தேன்.அப்போது தான் பெற்றோரை இழந்து, உறவினர்கள் கொடுமையால் அவதிப்படும் குழந்தைகளுக்காக பராமரிப்பு மையம் உருவாக்க வேண்டும் என்று தோன்றியது.கடந்த 2011ல் சினேக தீபா என்ற பெயரில் பராமரிப்பு மையம் ஆரம்பித்தேன். தற்போது எங்கள் மையத்தில் பெற்றோரை இழந்த 25 குழந்தைகள் அரவணைக்கப்பட்டு வருகின்றனர். அவர்களை எங்கள் மையத்தில் வளர்க்க, கர்நாடக பெண்கள் மற்றும் குழந்தைகள் நலத்துறையின் அனுமதியும் பெற்றுள்ளோம். இவர்களை 18 வயது வரை வளர்க்கும் பொறுப்பை நாங்கள் ஏற்றுள்ளோம். இங்கு இருக்கும் குழந்தைகளை பெற்றோர் நமக்கு இல்லையே என்று கவலைப்படாமல் இருக்க வேண்டும் என்பது எங்கள் நோக்கம். சிலரின் உதவிகளும் எங்களுக்கு கிடைக்கின்றன.

கல்வி செலவு

குழந்தைகளின் கல்வி செலவை நாங்கள் ஏற்றுக் கொள்கிறோம். ஜாதி, மதம் பாகுபாடு பார்க்காமல் குழந்தைகளை பராமரிக்கிறோம். குழந்தைகளும் ஒருவருக்கொருவர் அன்பை வெளிப்படுத்தி வருகின்றனர்.குழந்தைகள், சில நேரம் என்னை 'அம்மா' என்று அழைப்பர். இது என் மனதிற்கு மகிழ்ச்சியை கொடுக்கும். பெற்றோரை இழந்து தவிக்கும் ஆதரவற்ற குழந்தைகளுக்கு ஆதரவு கரம் நீட்ட அனைவரும் முன்வர வேண்டும் என்பது எனது அன்பான வேண்டுகோள்.இவ்வாறு அவர் கூறினார்.தபசுமை பாராட்ட நினைப்போர் 86605 27513 என்ற மொபைல் எண்ணில் தொடர்பு கொண்டு பேசலாம்.-- நமது நிருபர் --


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

வாசகர்கள் கருத்துகள் ( 1 )

Ram pollachi
செப் 01, 2024 18:56

இந்த மாதிரி நடத்துகிற அமைப்புகள் அரசு அதிகாரிகளை கைக்குள் வைத்துக்கொண்டு பல காரியங்களை சாதிப்பார்கள் அதை கண்ணால் பார்த்திருக்கிறேன் அவ்வளவு அ......தனம் . அடுத்து ஊரில் உள்ள அநாதை சடலங்களை அடக்கம் செய்ய ஒரு கூட்டம்.... தெரிந்தவர்கள் அறிந்தவர்கள் கூட வந்தால் மொத்த செலவும் கொடுக்க வேண்டுமாம்.... யாருமே வரவில்லை என்றால் அவர்கள் செலவாம்... ஜீவன் சாந்தி அடைந்த மாதிரி நினைத்துக் கொள்ள வேண்டியது தான்.