| ADDED : செப் 25, 2024 12:54 AM
புதுடில்லி, உத்தர பிரதேச மாநிலம் ஆக்ராவைச் சேர்ந்தவர் ஹர்ஷ் கர்க், 24. வழக்கறிஞராக உள்ளார். கடந்த 2004ல் இவருக்கு, 7 வயதாக இருக்கும் போது, வீட்டுக்கு வெளியே விளையாடி கொண்டிருந்தபோது மர்ம நபர்கள் கடத்திச் சென்றனர். தடுக்க வந்த அவரது தந்தையையும் சுட்டனர். பின் 55 லட்சம் ரூபாய் தந்தால் குழந்தையை விடுவிப்போம் என்று மிரட்டினர்.கடத்தல்காரர்களுடன் பேச்சு நடத்தி, 26 நாட்கள் போராட்டத்துக்கு பின், மத்திய பிரதேசத்தின் சிவ்புரி பகுதியில் இருந்து குழந்தையை போலீசார் மீட்டனர். இந்த கடத்தல் வழக்கில் எட்டு பேர் கைது செய்யப்பட்டனர். இந்த வழக்கு ஆக்ரா நீதிமன்றத்தில் நடந்து வந்தது.இதற்கிடையே, 7 வயதில் கடத்தப்பட்ட சிறுவன், வழக்கறிஞர் படிப்பை சமீபத்தில் முடித்தார். தான் கடத்தப்பட்டது தொடர்பான வழக்கின் இறுதிக்கட்ட விசாரணையின்போது, நீதிபதியின் அனுமதி பெற்று, தன் தரப்பு சார்பில் அவரே ஆஜராகி, 55 நிமிடங்கள் வாதாடினார். அரசு தரப்பு வழக்கறிஞருக்கு உதவியாக முக்கிய ஆதாரங்களை எடுத்து வைத்தார். இந்த வழக்கில், தன்னை கடத்திய நான்கு பேருக்கு ஆயுள் தண்டனையும், தலா 1 லட்சம் ரூபாய் அபராதமும் பெற்று தந்தார். மற்ற நால்வருக்கு எதிராக போதிய ஆதாரங்கள் இல்லாததால் அவர்கள் விடுவிக்கப்பட்டனர். இது குறித்து வழக்கறிஞர் ஹர்ஷ் கர்க் கூறுகையில், “என்னை கடத்திச் சென்று 26 நாட்கள் அடைத்து வைத்திருந்ததை பல ஆண்டுகள் ஆகியும் என்னால் மறக்க முடியவில்லை. அந்த உளவியல் பாதிப்பு இன்னும் எனக்குள் இருக்கிறது. “இது போன்ற குற்றச்செயல்களை இனி யாருக்கும் நடக்க கூடாது என்பதற்காக வழக்கறிஞர் ஆக வேண்டும் என்று முடிவு செய்தேன். அதன்படியே வழக்கறிஞர் ஆகி குற்றவாளிகளுக்கு தண்டனை பெற்று தந்துள்ளேன்,” என்றார்.