ஹெல்மெட் அணிய பிரசாரம்; ரூ.50 பெட்ரோல் இலவசம்
மயிலாடுதுறை: மயிலாடுதுறையில், ஹெல்மெட் அணிந்து வந்தவர்களுக்கு பெட்ரோல் பங்கில், 50 ரூபாய்க்கு பெட்ரோல் இலவசமாக வழங்கப்பட்டது. மயிலாடுதுறையில், கிங்ஸ் ரோட்டரி கிளப் சார்பில், வாகன ஓட்டிகளுக்கு பாதுகாப்பான சாலை பயணம் குறித்த விழிப்புணர்வு ஏற்படுத்த, கால்டாக்ஸ் அருகே உள்ள பெட்ரோல் பங்கில், ஹெல்மெட் அணிந்து வருபவர்களுக்கு, 50 ரூபாய் பெட்ரோல் இலவசமாக வழங்கப்பட்டது. விநாயகர் வேடமணிந்த நாடக கலைஞர்கள், வாகனத்தில் பெட்ரோல் நிரப்பினர். இந்த தகவலை கேள்விப்பட்டு, ஏராளமான வாகன ஓட்டிகள் தலையில் ஹெல்மெட் அணிந்தபடி வந்து, பெட்ரோல் போட வரிசையாக அணிவகுத்து நின்றனர். 'பாதுகாப்பான பயணத்தை உறுதி செய்வதே, தங்கள் குறிக்கோள்' என, கிங்ஸ் ரோட்டரி கிளப் நிர்வாகிகள் தெரிவித்தனர்.