உள்ளூர் செய்திகள்

/ தினம் தினம் / இதப்படிங்க முதல்ல / கார் பந்தயத்தில் கலக்கும் சிக்கமகளூரு தமிழச்சி

கார் பந்தயத்தில் கலக்கும் சிக்கமகளூரு தமிழச்சி

தமிழகத்தின் விருதுநகரை சேர்ந்தவர் வெங்கடேஷ். கடந்த 23 ஆண்டுகளாக சிக்கமகளூரு டவுனில் வசிக்கிறார். காபி ஏற்றுமதி தொழில் செய்கிறார். இவரது மகள் திவ்யா, 28. பி.சி.ஏ., பட்டதாரியான இவர், தந்தைக்கு உதவியாக, காபி தொழிலை கவனித்து வருகிறார். இதுதவிர கார் ஓட்டுவதிலும் இவருக்கு ஆர்வம் அதிகம். அதுவும் சாதாரண கார் இல்லை, பந்தய கார்.குடியரசு தினத்தை ஒட்டி, சிக்கமகளூரு அருகே இரேமகளூர் கிராமத்தில் மர்லே செல்லும் சாலையில், தனியார் நிறுவனம் சார்பில் கார் பந்தய போட்டி நடந்தது. 2 கி.மீ., துாரத்திற்கு நடந்த இப்போட்டியில், திவ்யாவும் கலந்து கொண்டார். கரடுமுரடான சாலையில் தனது 'மாருதி எஸ்டீம்' காரில் இலக்கை நோக்கி பாய்ந்த பறந்த திவ்யா, 2 நிமிடம் 39 வினாடிகளில் இலக்கை அடைந்து, முதல் இடம் பிடித்து வெற்றி பெற்றார். அவரது திறமையை பார்த்து போட்டியாளர்கள் ஆச்சரியம் அடைந்தனர்.இதுகுறித்து திவ்யா கூறியதாவது:என்னுடைய 23 வயது வரை, ஸ்கூட்டர் மட்டுமே ஓட்டி வந்தேன். கார் ஓட்ட வேண்டும் என்ற ஆசை வந்ததும், ஓட்டுநர் பயிற்சி பள்ளிக்கு சென்று பயிற்சி எடுத்து, ஓட்டுநர் உரிமம் பெற்றேன். பின், பந்தய கார்களை ஓட்ட வேண்டும் என்ற ஆசை வந்தது. அதற்கு பயிற்சி அளிக்கும் நிறுவனத்தில் பயிற்சிக்கு சேர்ந்தேன்.போலோ காரில் பயிற்சி எடுத்தேன். பின், சொந்தமாக மாருதி எஸ்டீம் காரை வாங்கி, பந்தயத்திற்கு ஏற்ப வடிவமைப்பு செய்தேன். கரடுமுரடான சாலைகளில் காரை ஓட்டி பயிற்சி எடுத்தேன்.இதற்கு முன்பு சிக்கமகளூரு, தமிழகத்தின் ஓசூரில் நடந்த கார் பந்தய போட்டிகளில் பங்கேற்று, இரண்டாவது, மூன்றாவது பரிசை வாங்கி உள்ளேன். இம்முறை சிக்கமகளூரில் நடந்த போட்டியில், பல்வேறு மாநிலங்களை சேர்ந்த 60க்கும் மேற்பட்ட பந்தய வீரர்கள் கலந்து கொண்டனர். இதில் முதல் பரிசு பெற்றது மகிழ்ச்சி அளிக்கிறது.என் தந்தை வெங்கடேஷ் தொடர்ந்து ஆதரவு தருகிறார். இலக்கை வேகமாக கடந்ததை பார்த்து, தமிழகத்தில் நடக்கும் கார் பந்தயங்களில் நீங்கள் கலந்து கொள்ள வேண்டும் என்று, என்னிடம் போட்டியாளர்கள் கூறினர். இது எனக்கு ஊக்கமாக இருந்தது. கார் பந்தயத்தில் இன்னும் நிறைய சாதிக்கும் ஆசை உள்ளது. இவ்வாறு அவர் கூறினார்.-- நமது நிருபர் - -


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

முக்கிய வீடியோ