உள்ளூர் செய்திகள்

/ தினம் தினம் / இதப்படிங்க முதல்ல /  தலையில் தேங்காய் உடைத்து பக்தர்கள் வினோத வழிபாடு

 தலையில் தேங்காய் உடைத்து பக்தர்கள் வினோத வழிபாடு

புதுக்கோட்டை: செல்லுகுடி வீரலட்சுமி அம்மன் கோவில் ஆடி திருவிழாவையொட்டி பக்தர்கள் தலையில் தேங்காய் உடைத்தும், சாட்டையால் அடி வாங்கியும் நூதன வழிபாடு செய்தனர். புதுக்கோட்டை மாவட்டம், செல்லுகுடியில் பிரசித்தி பெற்ற வீரலட்சுமி அம்மன் கோவில் உள்ளது. இங்கு ஆடி திருவிழா ஒவ்வொரு ஆண்டும் கொண்டாடுவது வழக்கம். அதன்படி, இந்தாண்டுக்கான திருவிழா கடந்த 10 நாட்களாக நடைபெற்று வந்தது. நேற்று அதிகாலையில் சர்வ அலங்காரத்தில் வீரலட்சுமி அம்மன், செல்லாயி மற்றும் பேராயி ஆகிய தெய்வங்கள் பக்தர்களுக்கு அருள் பாலித்து நான்கு வீதிகளிலும் வீதியுலா வந்தனர். அப்போது, பெண்கள் முளைப்பாரி எடுத்து தங்களது நேர்த்திக்கடனை செலுத்தினர். பின்னர், பக்தர்கள் தங்களது நேர்த்திக்கடனை செலுத்தும் விதமாக தலையில் தேங்காய் உடைக்கும் நிகழ்ச்சி நடைபெற்றது. கோவில் முன்பு நேர்த்திக்கடன் செலுத்தும் பக்தர்களை வரிசையாக அமர வைத்து கோவில் பூசாரி பக்தர்களின் தலையில் தேங்காயை உடைத்தார். தொடர்ந்து, பக்தர்கள் தங்கள் மீது பேய், பில்லி சூனியம் உள்ளிட்டவை நீங்கி ஆரோக்கியமாக வாழ வேண்டும் என்பதற்காக பூசாரியிடம் சாட்டை அடியும் பெற்றுக் கொண்டனர். இதுபோன்ற வினோத வழிபாடு கடந்த பல ஆண்டுகளாக நடந்து வருவதாகவும் தலையில் தேங்காய் உடைக்கும் போதும், சாட்டையடி வழிபாடு நடக்கும்போதும் பக்தர்கள் ஒருவருக்கு கூட இதுவரை காயம் ஏற்பட்டது கிடையாது என்பது இதன் சிறப்பு என்று பக்தர்கள் தெரிவித்தனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

வாசகர்கள் கருத்துகள் ( 3 )

அப்பாவி
ஆக 05, 2026 16:34

இப்போ தெரியாது. பத்து இருபது வருஷம் கழிச்சு மெண்டல் ஆனா யாருக்கும் காரணம் தெரியாது


manian
ஆக 05, 2026 14:26

This practice will lead to severe brain problems will seriously interfere with brain function


சண்முகம்
ஆக 05, 2026 08:51

ஆயிரம் விவேக் வந்தாலும் உங்களுக்கு விடிவு கிடையாது.


அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை