கடும் நிதி நெருக்கடியில் காந்தி ஆசிரமம் மத்திய, மாநில அரசுகள் உதவ கோரிக்கை
நாமக்கல்: 'திருச்செங்கோடில், நிதி நெருக்கடியில் சிக்கி தவிக்கும் பழமையான காந்தி ஆசிரமத்தை காப்பாற்ற மத்திய, மாநில அரசுகள் உதவ வேண்டும்' என, கோரிக்கை எழுந்துள்ளது. நாமக்கல் மாவட்டம், திருச்செங்கோடில், விடுதலை போராட்ட பாசறையாகவும், கிராமிய பொருளாதாரத்தின் அடையாளமாகவும், 'காந்தி ஆசிரமம்' விளங்கி வருகிறது. ராஜாஜி, 1925 பிப்., 6ல் இந்த ஆசிரமத்தை தொடங்கினார். இதற்காக, ரத்தினசபாபதி என்ற ஜமீன்தார், நிலம் தானம் வழங்கினார். வேலைவாய்ப்பின்றி தவித்த ஆயிரக்கணக்கான மக்களுக்கு, கதர் நுால் நுாற்க செய்து வேலை வாய்ப்பு வழங்கியதுடன், அவர்கள் பசியை இந்த ஆசிரமம் போக்கியது. ராஜாஜி, 10 ஆண்டுகள் இங்கு தங்கி, மது ஒழிப்பு பணிகளை செய்தார். காந்தி, நேரு, படேல் உள்ளிட்ட முக்கிய தேச தலைவர்கள் இங்கு தங்கியுள்ளனர். வரலாற்று சிறப்புமிக்க காந்தி ஆசிரமம், தற்போது நிதி நெருக்கடியில் நலிவடைந்து வருகிறது. போதிய நிதி இல்லாததால், சோப்பு, கதர் ஆடைகள் தயாரிக்க தேவையான மூலப்பொருட்களை வாங்க முடியாமல், உற்பத்தி முடங்கியுள்ளது. கடந்த காலங்களில் ஆண்டுக்கு, 6 கோடி ரூபாய் வரை நடந்த விற்பனை, தற்போது வெகுவாக சரிந்துள்ளது. இதனால், இங்கு பணியாற்றி ஓய்வுபெற்ற தொழிலாளர்களுக்கு வழங்க வேண்டிய பணப்பலன்களை கூட வழங்க முடியாத நிலை உள்ளது. சோப்பு, தேன் போன்ற பொருட்களுக்கு, ஜி.எஸ்.டி., வரி விதிக்கப்பட்டுள்ளதால், விற்பனை கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளது. ஆசிரம தலைவர் சிதம்பரம் மற்றும் டிரஸ்டி பொன் கோவிந்தராஜ் கூறியதாவது: குஜராத் சபர்மதி ஆசிரமத்தை போல, திருச்செங்கோடு காந்தி ஆசிரமத்தையும் மத்திய, மாநில அரசுகள் பாதுகாக்க வேண்டும். முன்பு வழங்கி வந்த, 2 கோடி ரூபாய் மானியத்தை மீண்டும் வழங்க வேண்டும். ஆசிரமத்தில் தயாரிக்கப்படும் உயர்தர சோப்பு மற்றும் கதர் ஆடைகளை ராணுவம் மற்றும் அரசுத்துறைகள் நேரடியாக கொள்முதல் செய்ய வேண்டும். ஜி.எஸ்.டி., வரியிலிருந்து விலக்கு அளித்தால் மட்டுமே, திருச்செங்கோடின் அடையாளமான காந்தி ஆசிரமத்தை பாதுகாக்க முடியும். இவ்வாறு அவர்கள் கூறினர்.