இன்றைய தினத்தை சிறப்பாக்க வேண்டும்
க டந்த காலத்தை நினைத்தால், கவலை வந்து ஒட்டிக் கொள்ளும். எதிர்காலத்தை நினைத்தால், பயம் அச்சுறுத்தும். இருக்கும் இன்றைய நாளை சிறப்பாக கொண்டாடுங்கள் என்று, பாலபாடம் சொல்லிக் கொடுக்கிறார், துடியலுாரை சேர்ந்த சுடர் கொடி. இவர், மசாலா வகைகளை தயாரித்து வழங்கி வருகிறார். வெற்றி என்று எதை நினைக்கிறீர்கள்?நீங்கள் ஒரு செயலை சிறப்பாக செய்தாலே, அது வெற்றி தான். துவக்கத்தில், தனியார் நிறுவனத்தில் பணியில் இருந்த எனக்கு, பிடித்த வேலையை செய்யலாமே என்று தோன்றியது. எனக்கு சமையல் நன்றாக வரும். இதற்கு பயன்படும் பொடி வகைகளை தயாரிக்க, கனரா வங்கியின் சுய வேலை வாய்ப்பு பயிற்சி நிலையம் வாயிலாக கற்றுக் கொண்டேன். எங்களிடம் மாவு மில் இருந்ததும் கை கொடுத்தது. சுடர் மசாலா என்ற பெயரில் பொடி வகைகள், ஜூட் பைகளை தயாரிக்கிறேன். வாழ்க்கைக்கு எது முக்கியம் என்று நினைக்கிறீர்கள்?இன்று என்பதை சிறப்பாக்கி கொள்ள வேண்டும். நாளை நிஜமல்ல என்பதை முடிவு செய்ய வேண்டும். தினமும் இப்படி செய்தால், வெற்றி உங்களை தேடி வரும். உங்களுக்கு தெரிந்த வித்தைகளை மற்றவர்களுக்கு கற்றுக்கொடுத்து, நாலு பேரை கரை ஏற்றி விட்டால் போதும். அந்த திருப்தி போதும் வாழ்க்கைக்கு. நம்மை விட உயரத்தில் இருப்பவர்களை பார்த்து, அந்த உயரத்தில் நாமும் அமர என்ன செய்யலாம் என்று யோசிப்பது முதல் படி. அதற்கு ஏற்ப செயல்படுவது இரண்டாவது படி. முயற்சி செய்... பயிற்சி செய்... என்பது உங்களுக்கான ஏணிப்படி.