உள்ளூர் செய்திகள்

/ தினம் தினம் / இதப்படிங்க முதல்ல /  துாக்கத்தில் 10வது மாடியில் இருந்து தவறி விழுந்தவர் உயிர் பிழைத்தார்

 துாக்கத்தில் 10வது மாடியில் இருந்து தவறி விழுந்தவர் உயிர் பிழைத்தார்

சூரத்: குஜராத்தின் சூரத் நகரில் துாக்கத்தில் 10வது மாடியில் இருந்து தவறி விழுந்த நபர், ஜன்னல் கிரில் கம்பியில் கால் சிக்கியதால், உயிர் பிழைத்தார். குஜராத் தின் சூரத் நகரில் உள்ள ஜஹாங்கிர்புராவில், 'டைம்ஸ் கேலக்சி' எனும் அடுக்குமாடி குடியிருப்பு உள்ளது. இதில், 10வது மாடியில் உள்ள வீட்டில் நிதின்பாய் ஆதியா, 57, தன் குடும்பத்தினருடன் வசித்து வருகிறார்.

அதிர்ச்சி

இவர், தன் வீட்டில் உள்ள கம்பிகள் இல்லாத ஜன்னலை ஒட்டிய பகுதியில், நேற்று முன்தினம் காலை துாங்கிக் கொண்டிருந்தார். காற்றுக்காக ஜன்னலை திறந்து வைத்திருந்ததாக கூறப்படுகிறது. காலை 8:00 மணிக்கு புரண்டு படுத்த போது, ஜன்னல் வழியாக தவறி கீழே விழுந்தார். வீட்டின் 10வது மாடியில் இருந்து விழுந்த நிதின்பாயின் கால், எட்டாவது மாடியில் இருந்த வீட்டு ஜன்னலின் மேற்புற தகட்டை ஒட்டிய கிரில் கம்பியில் சிக்கிக் கொண்டது. இதனால், கீழே விழாமல் அந்தரத்தில் தலைகீழாக தொங்கியபடி நிதின்பாய் அலறினார். சத்தம் கேட்டு வந்த நிதின்பாய் குடும்பத்தினர் மற்றும் குடியிருப்புவாசிகள், அவரை காப்பாற்ற முயன்றனர். எதுவும் பலன் அளிக்கவில்லை.

பத்திரமாக மீட்பு

இதற்கிடையே, நிதின்பாய் கீழே விழுந்தால் அடிபடாமல் இருக்க, தரைத்தளத்தில் பெரிய வலை விரிக்கப்பட்டது. தீயணைப்பு படையினர் வந்து, வீட்டு ஜன்னல் வழியாக அவரை பத்திரமாக மீட்டனர். நிதின்பாய் அருகில் உள்ள மருத்துவமனையில் சேர்க்கப்பட்டுள்ளார். துாக்கத்தில், 10வது மாடியில் இருந்து கீழே விழுந்தாலும், அதிர்ஷ்டவசமாக நிதின்பாய் உயிர்பிழைத்தது சூரத்திலும், சமூக வலைதளத்திலும் பேசுபொருளாக மாறியுள் ளது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்









புதிய வீடியோ