உலகின் சிறந்த விஞ்ஞானிகள் பட்டியலில் ராமநாதபுரம் கல்லுாரி உதவி பேராசிரியர்
ராமநாதபுரம்: உலகின் சிறந்த விஞ்ஞானிகளின் பட்டியலில் ராமநாதபுரம் அண்ணா பல்கலை பொறியியல் கல்லுாரி உதவி பேராசிரியர் எம்.செந்தில் மணி ராஜன் இடம் பெற்றுள்ளார். அமெரிக்காவில் உள்ள ஸ்டான்போர்ட் பல்கலை மற்றும் எல்ஸ்வேர் நிறுவனம் இணைந்து உலகின் சிறந்த இரண்டு சதவீதம் விஞ்ஞானிகளின் பட்டியலை வெளியிட்டுள்ளனர். 2025 ஆக.,ல் வெளியான தரவரிசை பட்டியலில் 22 அறிவியல் துறைகள் மற்றும் 174 துணை துறைகளின் கீழ் உலகம் முழுவதும் 2 லட்சத்திற்கும் அதிகமான ஆராய்ச்சியாளர்களின் பெயர்கள் இடம் பெற்றுள்ளன. இந்தியாவில் இருந்து மட்டும் 3500 க்கும் மேற்பட்ட விஞ்ஞானிகள் அதில் உள்ளனர். இதில் ராமேஸ்வரம் அருகே பாம்பனை சேர்ந்த ஆராய்ச்சியாளர் எம். செந்தில் மணி ராஜன் இடம் பெற்றுள்ளார். இவர் ராமநாதபுரம் அண்ணா பல்கலை பொறியியல் கல்லுாரியில் இயற்பியல் துறை உதவி பேராசிரியர் மற்றும் துறை தலைவராக பணிபுரிகிறார். இவர் தனது ஆராய்ச்சியில் ரத்தம் இல்லாமல், மனிதனின் உமிழ்நீரை பரிசோதனை செய்வதன் மூலமாக கேன்சரை முன்கூட்டியே அறிந்து கொள்வது தொடர்பாக பல அயல்நாட்டு ஆராய்ச்சியாளர்களுடன் இணைந்து ஆப்டிகல் பைபர் பயன்படுத்தி பயோ சென்சார் பிரிவில் ஆராய்ச்சி செய்து வருகிறார். ஏராளமான ஆராய்ச்சி கட்டுரைகளை வெளியிட்டுள்ளார். இதன் காரணமாக தொடர்ந்து நான்காவது முறையாக உலகின் தலைசிறந்த விஞ்ஞானிகள் பட்டியலில் இடம் பிடித்துள்ளார். இவரை சென்னை அண்ணா பல்கலை உயர்மட்ட நிர்வாகக் குழுவினர் மற்றும் ராமநாதபுரம் அண்ணா பல்கலை பொறியியல் கல்லுாரி முதல்வர் உதயகுமார், கண்காணிப்பாளர் ராஜ்குமார், பேராசிரியர்கள் பாராட்டினர்.