உள்ளூர் செய்திகள்

/ தினம் தினம் / இதப்படிங்க முதல்ல / தமிழக காவல் துறையில் பணிபுரிந்ததே பெருமை; ஓய்வு பெற்ற டி.ஜி.பி.,க்கள் நெகிழ்ச்சி

தமிழக காவல் துறையில் பணிபுரிந்ததே பெருமை; ஓய்வு பெற்ற டி.ஜி.பி.,க்கள் நெகிழ்ச்சி

வாசிக்க நேரம் இல்லையா? செய்தியைக் கேளுங்கள்

Your browser doesn’t support HTML5 audio

சென்னை: 'வரலாற்று சிறப்பு மிக்க தமிழக காவல் துறையில் பணியாற்றியதை, மிகவும் பெருமையாக கருதுகிறோம்' என, பிரிவு உபசார விழாவில், டி.ஜி.பி.,க்கள் சங்கர் ஜிவால், சைலேஷ்குமார் யாதவ் ஆகியோர் பேசினர். தமிழக காவல் துறையின் படைத்தலைவர் மற்றும் சட்டம் - ஒழுங்கு டி.ஜி.பி., சங்கர் ஜிவால். காவலர் வீட்டு வசதி கழக டி.ஜி.பி., சைலேஷ்குமார் யாதவ். இவர்கள் இருவரும் நாளை ஓய்வு பெறுகின்றனர். இதையொட்டி, இருவருக்கும் நேற்று சென்னை எழும்பூர் ராஜரத்தினம் ஸ்டேடியத்தில் பிரிவு உபசார விழா நடந்தது. இந்நிகழ்ச்சியில், முதல் நபராக சைலேஷ்குமார் யாதவும், அதன்பின் சங்கர் ஜிவாலும், போலீசாரின் அணிவகுப்பு மரியாதையை ஏற்றனர். சென்னை மாநகர போலீஸ் கமிஷனர் அருண் வரவேற்றார். ஊர் காவல் படை டி.ஜி.பி., பிரமோத் குமார் வாழ்த்துரை வழங்கினார். விழாவில், சைலேஷ்குமார், சங்கர் ஜிவால் பேசியதாவது: சைலேஷ்குமார் யாதவ்: வரலாற்று சிறப்பு மிக்க, தமிழக காவல் துறையில் பணியாற்றியதை பெருமையாக கருதுகிறேன். மதுரை, திருச்சி கமிஷனர், தென்மண்டல ஐ.ஜி., என, முக்கிய பொறுப்புகளில் பணிபுரிந்துள்ளேன். ஜாதி கலவரத்தை கட்டுப்படுத்துதல், பெண்கள் மற்றும் குழந்தைகளுக்கு எதிரான குற்றங்களை தடுத்தல் போன்ற பணிகளுடன், நம் நாட்டு பொக்கிஷமான சிலைகளை கடத்தியவர்கள் மீதும் கடும் நடவடிக்கை எடுத்துள்ளேன். திருநெல்வேலியில் மாஞ்சோலை தோட்ட தொழிலாளர்கள் பேரணியை கட்டுப்படுத்தியது என, பல முக்கிய முடிவுகளை எடுக்க வேண்டிய பொறுப்புகளில் இருந்துள்ளேன். மனநிறைவுடன் ஓய்வு பெறுகிறேன். சங்கர் ஜிவால்: தமிழக காவல் துறையில், 35 ஆண்டுகள் பணியாற்றி உள்ளேன். வரலாற்று சிறப்பு மிக்க தமிழக காவல் துறையில், சென்னை மாநகர போலீஸ் கமிஷனர் மற்றும் காவல் துறையை வழி நடத்தும் படைத்தலைவர் என்ற பொறுப்புகளை வழங்கிய, முதல்வர் ஸ்டாலினுக்கு நன்றி. மற்ற துறைகளை காட்டிலும், மக்கள் எளிதில் அணுகி சேவை செய்யக்கூடிய காவல் துறை மிகச்சிறந்தது. போலீசார், இரவு, பகல் பாராது பணிபுரிந்து வருவதை பார்த்து ஆச்சரியப்பட்டு உள்ளேன். போலீசார், தங்களின் உடல் நலத்தையும் கவனித்துக் கொள்ள வேண்டும். என் பணிக் காலத்தில், கார் ஓட்டுநராகவும், எனக்கு பாதுகாவலர்களாக பணிபுரிந்த அனைத்து போலீசாருக்கும் நன்றி தெரிவிக்கிறேன். இவ்வாறு அவர்கள் பேசினர். தீயணைப்பு ஆணைய தலைவராக சங்கர் ஜிவால் நியமனம் 'தீயணைப்பு துறையில், உயிர் மீட்பு மற்றும் புதிய தொழில் நுட்பங்களை செயல்படுத்துவது, கட்டடங்களுக்கு தீ பாதுகாப்பு சான்றிதழ் வழங்குவது உள்ளிட்ட பணிகளை முறைப்படுத்த, ஆணையம் உருவாக்கப்படும்' என, 2022ல், சட்டசபையில் அறிவிப்பு வெளியிடப்பட்டது. அதன்படி அந்த ஆணையம் உருவாக்கப்பட்டு, அதன் தலைவராக, நாளை ஓய்வு பெற உள்ள, தமிழக டி.ஜி.பி., சங்கர் ஜிவால் நியமிக்கப்பட்டு உள்ளார். அதன் உறுப்பினர்களாக பொதுப்பணித்துறை முன்னாள் முதன்மை தலைமை பொறியாளர் சத்தியமூர்த்தி உள்ளிட்ட மூவரை நியமித்து, அரசாணை வெளியிடப்பட்டுள்ளது. செப்., 1 முதல் தீயணைப்பு ஆணையத்தின் தலைவராக சங்கர் ஜிவால் செயல்படுவார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

வாசகர்கள் கருத்துகள் ( 1 )

JeevaKiran
செப் 01, 2025 17:08

பணிநிறைவடைந்த இவர்களுக்கு கைநிறைய பென்ஷன் வரும். ஏன் மறுபடியும், ஒரு புதிய வேலை. நாட்டில் வேலை இல்லா திண்டாட்டம் கொடிகட்டி பறக்கும் இந்த நிலையில் புதியதாக ஒருவருக்கு இந்த வேலையை வழங்கலாம்?


அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை