உள்ளூர் செய்திகள்

/ தினம் தினம் / இதப்படிங்க முதல்ல / சப்-கலெக்டர், தாசில்தாருடன் த.வெ.க., - எம்.எல்.ஏ., வாக்குவாதம்

சப்-கலெக்டர், தாசில்தாருடன் த.வெ.க., - எம்.எல்.ஏ., வாக்குவாதம்

துாத்துக்குடி: அனுமதியின்றி குளத்தில் மண் எடுத்த வாகனங்களை சப் - கலெக்டர் பறிமுதல் செய்த நிலையில், அவருடன் ஸ்ரீவைகுண்டம் த.வெ.க., -- எம்.எல்.ஏ., சரவணன் வாக்குவாதத்தில் ஈடுபட்டதால் பரபரப்பு ஏற்பட்டது. வடகிழக்கு பருவமழை தொடங்கிவிட்டதால், குளங்களில் இருந்து விவசாய பணிகளுக்கு மண் எடுக்கும் பணி நிறுத்தி வைக்கப்பட்டுள்ளது. இந்நிலையில், துாத்துக்குடி மாவட்டம், ஏரல் தாலுகா, ஆறுமுகமங்கலத்தில் உள்ள குளத்தில், நேற்று சிலர் அனுமதியின்றி, 20க்கும் மேற்பட்ட வாகனங்களில் கரம்பை மண் அள்ளும் பணியில் ஈடுபட்டனர். சம்பவ இடத்திற்கு சென்ற திருச்செந்துார் சப் - கலெக்டர் கவுதம், ஏரல் தாசில்தார் சீனிவாசன் ஆகியோர், மண் அள்ளிய மூன்று பொக்லைன் இயந்திரங்கள், ஒரு டிராக்டரை பறிமுதல் செய்தனர். அப்போது, அதிகாரிக ளுக்கும், மண் அள்ளியவர்களுக்கும் வாக்குவாதம் ஏற்பட்டது. சம்பவ இடத்திற்கு வந்த ஸ்ரீவைகுண்டம் தொகுதி த.வெ.க., -- எம்.எல்.ஏ., சரவணன், அவரது ஆதரவாளர்கள், சப் - கலெக்டர் கவுதம் மற்றும் அதிகாரிகளுடன் வாக்குவாதத்தில் ஈடுபட்டனர். 'மக்களுக்காக பணியாற்ற வந்துள்ளேன். இதுவரை குளத்தை துார்வார எந்த நடவடிக்கையும் ஏன் எடுக்கவில்லை? விவசாயிகள், தங்கள் தேவைக்காக மண் எடுக்க ஏன் தடை விதிக்கிறீர்கள்?' என, சரவணன் கேள்வி எழுப்பினார். பருவமழை துவங்கி உள்ளதால், குளத்திற்கும், அதன் கரைகளுக்கும் பாதிப்பு ஏற்படுவதை தடுக்கும் வகையில், மண் அள்ள நீர்வளத்துறை தடை விதித்துள்ளதாக, சப் - கலெக்டர் தெரிவித்தார். தொடர்ந்து, அங்கிருந்து புறப்பட்ட சப் - கலெக்டர், தாசில்தார் வாகனங்களை, மக்கள் முற்றுகையிட்டனர். போலீசார், அவர்களை அப்புறப்படுத்தி, வாகனங்களை அனுப்பி வைத்தனர். இதனால், சிறிது நேரம் பரபரப்பு ஏற்பட்டது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

வாசகர்கள் கருத்துகள் ( 2 )

Sivaprakasam Chinnayan
அக் 17, 2026 14:11

இதுக்கெல்லாம் ஒரு அல்ல கையும் எழுத மாட்டானுங்க ஏன்னா 200 ரூபாய் கொடுக்க மாட்டாங்க


KRISHNAN R
அக் 17, 2026 06:52

ஆக இப்போ என்ன சொல்றது வடிவேல் சினிமா டயலாக்


புதிய வீடியோ