உலகிலேயே முதன் முறையாக கரடிக்கு செயற்கை மூட்டு: கர்நாடகாவில் சாதனை
வாசிக்க நேரம் இல்லையா?
செய்தியைக் கேளுங்கள்
பெங்களூரு: உலகிலேயே முதன் முறையாக, பன்னரகட்டா பூங்காவில் 10 வயது ஆண் கரடியின் பின்னங்காலில், செயற்கை மூட்டு பொறுத்தி சாதனை படைக்கப்பட்டுள்ளது. கர்நாடகாவின் பல்லாரியில், 2019ல் வேட்டைக்காரர்கள் வைத்த பொறியில், கரடி ஒன்று சிக்கியது. பொறியில் சிக்கியதால் அதன் பின்னங்கால் பலத்த காயமடைந்தது. மறுவாழ்வு மூட்டு மிகவும் பாதிக்கப்பட்டு, எலும்புகள் நொறுங்கியிருந்தன. கரடியை மீட்ட வனத்துறையினர், பெங்களூரு பன்னரகட்டா தேசிய பூங்காவில் உள்ள, கரகடிகள் மறுவாழ்வு மையத்துக்கு கொண்டு வந்தனர். இங்குள்ள 'வைல்டு லைப் எஸ்.ஓ.எஸ்.,' என்ற தன்னார்வ அமைப்பினர், கரடிக்கு 'வசீகரா' என்று பெயரிட்டு பராமரித்து வந்தனர். மூட்டு வலியால் அவதிப்பட்டு வந்த கரடி, மூன்று கால்களால் நடக்கவே சிரமப்பட்டது. இதனால் கரடிக்கு செயற்கை மூட்டு பொருத்த தன்னார்வ அமைப்பினர் முடிவு செய்தனர். இதற்காக அமெரிக்காவை சேர்ந்த 'விசர்ட் ஆப் பாவ்ஸ்' எனும் பாதங்களின் மந்திரவாதி என்று அழைக்கப்படும் விலங்குகள் எலும்பு முறிவு மருத்துவர் டெர்ரிக் கம்பனாவின் உதவியை நாடினர். அவரும் தனது குழுவினருடன் பெங்களூரு வந்தார். கரடியின் நடவடிக்கைகளை கண்காணித்தனர். செயற்கை மூட்டு பொருத்துவதற்காக, கால் அளவீடு செய்யப்பட்டது. பின், வசீகராவின் இயற்கையான நடவடிக்கைகளை தாங்கும் வகையில் வலிமையான செயற்கை மூட்டு ஒன்றை டெர்ரிக் கம்பனா வடிவமைத்தார். அறுவை சிகிச்சை மூலம் வெற்றிகரமாக கரடியின் இடது பின்னங்காலில் செயற்கை மூட்டு மாற்று அறுவை சிகிச்சை மேற்கொள்ளப்பட்டது. மகிழ்ச்சி அறுவை சிகிச்சைக்குப் பின், கரடி ஆரோக்கியமாக இருந்தது. தொடர் கண்காணிப்புக்குப் பின், வசீகரா மண்ணை தோண்டுவது, மரம் ஏறுவது, துளையிடுவது, உணவு தேடுவது என, தன் வழக்கமான நடவடிக்கைகளை தொடர்ந்தது. இதன் மூலம் உலகிலேயே முதன் முறையாக செயற்கை மூட்டு பொருத்தப்பட்ட கரடி என்ற பெருமையை வசீகரா பெற்றுள்ளது. செயற்கை மூட்டு தயாரித்த டெர்ரிக் கம்பனா கூறியதாவது: விலங்குகளுக்காக ஒவ்வொரு முறையும் நான் செய்யும் பணி, புதிதாக ஒன்றை கற்றுக் கொடுக்கிறது. ஆனால், வசீகராவின் நிலை அசாதாரணமானது. சோம்பல் கரடிக்கு செயற்கை கருவியை வடிவமைப்பது, மற்ற விலங்குகளை விட சவாலானதாக இருந்தது. ஆனால், கருவி பொருத்தப்பட்டு, வசீகரா எடுத்து வைத்த முதல் அடியை பார்த்தபோது, அதன் வாழ்க்கையை மீட்டுவிட்டோம் என்ற உணர்வை ஏற்படுத்தியது. வசீகராவின் பயணத்தில் நானும் ஒரு பகுதியாக இருப்பது மகிழ்ச்சி அளிக்கிறது. இவ்வாறு அவர் கூறினார்.