வாசகர்கள் கருத்துகள் ( 2 )
வாழ்த்துக்கள், வாழ்க, வளர்க.
வாழ்த்துகள்
மதுரை: மதுரையைச் சேர்ந்த டேக்வாண்டோ தம்பதிகளின் 7 வயது மகள் சம்யுக்தா உலகின் இளம்வயது டேக்வாண்டோ பயிற்சியாளராக கின்னஸ் உலக சாதனை படைத்துள்ளார்.மதுரை சின்னசொக்கிகுளத்தில் ஸ்ருதி, நாராயணன் தம்பதி, மதுரை டேக்வாண்டோ அகாடமி நடத்தி வருகின்றனர். முழங்கையை மடக்கி பயிற்சி செய்து ஏற்கனவே கின்னஸ் சாதனை படைத்துள்ளார் ஸ்ருதி. நாராயணன் 34 முறை உலக சாதனை படைத்துள்ளார். தம்பதியராக சேர்ந்து 2020ல் தற்காப்பு கலை (கிக்) பயிற்சியில் உலக சாதனை படைத்தனர். அகாடமி மாணவர்களுக்கு பெற்றோர் பயிற்சி அளிப்பதை பார்த்து சுயமாக கற்றுக் கொள்ள ஆரம்பித்த சம்யுக்தா 3 வயதில் முறையான பயிற்சி பெற்று 7 வயதில் டேக்வாண்டோ பயிற்சியாளராகி கின்னஸ் சாதனை படைத்துள்ளார்.மகளின் சாதனை குறித்து நாராயணன் கூறியதாவது: சம்யுக்தா 3 வயதிலேயே டேக்வாண்டோ கற்றுக் கொள்ள ஆரம்பித்தாள். 2024 ஆகஸ்டில் டேக்வாண்டோ பிளாக் பெல்ட் தேர்வை முடித்தார். டேக்வாண்டோ உலக அகாடமியின் தலைமையகம் கொரியாவில் (குக்கிவான்) உள்ளது. அங்கிருந்து தான் பிளாக் பெல்ட் அங்கீகாரமும் சான்றிதழும் தருவர். மூன்று முதல் மூன்றரை ஆண்டுகள் தொடர்ந்து பயிற்சி பெற்றால் 'பிளாக் பெல்ட்' தேர்வில் பங்கேற்கலாம். சம்யுக்தா அதே காலகட்டத்தில் பயிற்சி பெற்று பிளாக் பெல்ட் பெற்றாள்.இளம் வயது டேக்வாண்டோ (16 வயதுக்கு கீழ்) பயிற்சியாளருக்கான கின்னஸ் சாதனைக்கு அறிவிப்பு வந்ததை பார்த்தேன். சம்யுக்தா பிளாக்பெல்ட் வாங்கி மாணவர்களுக்கு பயிற்சியும் அளித்து வருவதால் முயற்சி செய்து பார்க்கலாம் என விண்ணப்பித்தேன்.டேக்வாண்டோ பாடத்திட்டத்தின் படி பயிற்சி செய்து காட்டவேண்டும், சிமென்ட் பிளாக் பிரேக்கிங், போர்டு பிரேக்கிங், பஞ்ச், கிக்ஸ் செய்து அதை வீடியோவாக அனுப்பினேன். மாணவர்களுக்கு குறைந்தது 30 மணி நேரம் பயிற்சி அளித்திருக்க வேண்டும். 'அப்பர் பஞ்ச், மிடில் பஞ்ச், லோயர் பஞ்ச், டபுள் பஞ்ச், பிரெண்ட் கிக், பேக் கிக், அட்வான்ஸ் ஜம்பிங் செய்தார். டெமோ போர்டை எட்டி உதைத்தும் 2 இன்ஞ் சிமென்ட் பிளாக்கை உடைத்ததையும் வீடியோவாக பதிவு செய்து கின்னஸ் சாதனைக்கு அனுப்பினேன்.ஏற்கனவே தினமும் மாலை 4:30 முதல் இரவு 8:00மணி வரை இளம் வயது மாணவர்களுக்கு பயிற்சி அளிக்கும் போது என்னுடனேயே இருப்பார். 'வார்ம் அப்', டேக்வாண்டோ பயிற்சி, 'வார்ம் டவுன்' பயிற்சிகள் சம்யுக்தாவுக்கு எளிதாக செய்ய முடிந்தது. எல்லாவற்றையும் வீடியோவாக ஆவணப்படுத்தி அனுப்பியதால் கின்னஸ் சாதனையை பதிவு செய்தனர். மிக இளம் வயதில் செய்ததால் அவளது சாதனையை அங்கீகரித்து நவம்பரில் சான்றிதழ் பெற்றோம்.சமீபத்தில் சம்யுக்தாவின் சாதனையை மீண்டும் பாராட்டி பேஸ்புக், இன்ஸ்டாகிராமில் கின்னஸ் நிறுவனத்தினர் வெளியிட்டனர். ஜனவரியில் கின்னஸ் நேர்முகத்தேர்வு நடத்தி அதை சாதனை புத்தகத்திலும் பதிவு செய்தனர். சம்யுக்தா மதுரை மகாத்மா பள்ளியில் மூன்றாம் வகுப்பு படிக்கிறாள் என்றார்.
வாழ்த்துக்கள், வாழ்க, வளர்க.
வாழ்த்துகள்