உள்ளூர் செய்திகள்

/ தினம் தினம் / இதப்படிங்க முதல்ல / முன்னாள் காதலி குறித்து 1,886 கேள்வி கேட்ட வாலிபருக்கு தகவல் ஆணையம் கண்டனம்

முன்னாள் காதலி குறித்து 1,886 கேள்வி கேட்ட வாலிபருக்கு தகவல் ஆணையம் கண்டனம்

சென்னை: முன்னாள் காதலி, எத்தனை பேரை காதலித்துள்ளார் என்பது உட்பட, 1,886 கேள்விகளுக்கு, தகவல் கேட்ட வாலிபருக்கு, மாநில தகவல் ஆணையம், கடும் கண்டனம் தெரிவித்துள்ளது.விழுப்புரம் மாவட்டத்தை சேர்ந்த, சந்தோஷ் என்பவர், 2021 - 24ல் கல்லுாரியில் படித்தபோது, உடன் படித்த பெண்ணை காதலித்துள்ளார். சந்தோஷின் நடத்தை காரணமாக, அப்பெண் அவரிடமிருந்து விலகி உள்ளார். ஆனால் அவர், மொபைல் போன் மற்றும் கடிதம் வாயிலாக, தொந்தரவு செய்துள்ளார். அதைத் தொடர்ந்து, அப்பெண் தற்கொலைக்கு முயற்சித்துள்ளார்.இந்நிலையில், கடலுார் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் அலுவலகத்தில் உள்ள பொதுத் தகவல் அதிகாரிக்கு, தகவல் உரிமை சட்டத்தின் கீழ், கேள்விகள் கேட்டு சந்தோஷ், 97 விண்ணப்பங்கள் அனுப்பினார். அதில், தன்னுடைய முன்னாள் காதலி, தற்போது யாரை காதலிக்கிறார்; இதற்கு முன் எத்தனை பேரை காதலித்துள்ளார்; அவருக்கு திருமணம் ஆகிவிட்டதா; உயிரோடு இருக்கிறாரா என்பது உட்பட, 1,886 கேள்விகளுக்கு பதில் கேட்டிருந்தார்.அதன்பின் தனக்கு தகவல் வழங்கவில்லை என, கடலுார் மாவட்ட போலீஸ் எஸ்.பி.,க்கு எதிராக, மாநில தகவல் ஆணையத்தில் மேல்முறையீடு செய்தார். இந்த மனுவை விசாரித்த ஆணையர் வி.பி.ஆர்.இளம்பரிதி, தகவல் உரிமை சட்டத்தின் நோக்கத்தை சிதைக்கும் விதமாக, மனு தாக்கல் செய்யப்பட்டுள்ளது. அத்துடன், அரசு ஊழியர்களுக்கு, தேவையற்ற பணிச்சுமையை ஏற்படுத்தும் வகையில், பொதுநலன் இல்லாமல் செயல்பட்டுள்ளதாக, சந்தோஷுக்கு கண்டனம் தெரிவித்தார்.இதையடுத்து அவர் பிறப்பித்த உத்தரவு: சந்தோஷ் கோரிய எந்த தகவலையும் வழங்க முடியாது. தகவல் உரிமை சட்டத்தின் கீழ், மனு தாக்கல் செய்ய, அவருக்கு ஓராண்டு தடை விதிக்கப்படுகிறது. அத்துடன் சந்தோஷுக்கு மாவட்ட சுகாதாரத்துறை சார்பில், மன நல ஆலோசனை வழங்க வேண்டும். இவ்வாறு, உத்தரவில் கூறப்பட்டுள்ளது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

வாசகர்கள் கருத்துகள் ( 4 )

ahmed
நவ 07, 2026 10:06

காதல் வளர்த்தேன்.... காதல் வளர்த்தேன்....


Barakat Ali
நவ 07, 2026 08:20

அபராதம் போட்டிருக்கலாம் ......


Mani . V
நவ 07, 2026 05:42

"தற்போது யாரை காதலிக்கிறார் இதற்கு முன் எத்தனை பேரை காதலித்துள்ளார்?" இந்த ரெண்டு கேள்விகளுக்கு மட்டுமாவது பதில் சொல்லியிருக்கலாம்.


Lana
நவ 07, 2026 16:21

யார் பதில் சொல்ல வேண்டும் தகவல் அறியும் உரிமை சட்டம் அரசு ஆவணங்கள் இல் உள்ள தகவல்களை மட்டுமே வழங்க முடியும் யார் யார் பின்னால் அலைகிறார்கள் என்பதை சொல்வது அல்ல அபராதம் விதிப்பது தான் சரி