தக்க பதில் வரும்!
வி.முருகன், சென்னையில் இருந்து அனுப்பிய,'இ - மெயில்' கடிதம்: மதுபான ஊழல்வழக்கில் சிக்கி, நீதிமன்ற உத்தரவின்படி, முதல்வர் அலுவலக பணிகளை மேற்கொள்ளக் கூடாது என்ற நிபந்தனையில்ஜாமின் பெற்று, சிறையை விட்டு வெளியே வந்துள்ள, ஆம் ஆத்மி கட்சியின்டில்லி முன்னாள் முதல்வர் அரவிந்த் கெஜ்ரிவால், வழக்கம் போல, தன் சித்து வேலையை, ஜந்தர் மந்தர் பகுதியில் நடந்த பொதுக் கூட்டத்தில் காட்டி விட்டார்.இந்த கெஜ்ரிவால் முன்னாள் இந்திய ஆட்சிப் பணி அதிகாரியாக பதவியில் இருந்தவர் என்பதை, கடிதத்தை படிக்கும் அனைவரும் அவசியம் தெரிந்து கொள்ள வேண்டிய ஒரு முக்கியமான விஷயம்.ஏனெனில், ஒரு அரசு அதிகாரியாக பதவி வகித்துக் கொண்டிருந்தவருக்கு, அனைத்து சட்டங்களும் கரதல பாடமாக மனதில் பதிந்து இருக்காது என்றாலும், முக்கியமான சட்ட ஷரத்துக்கள் அனைத்தும், விரல் நுனியில் இருக்கும்; இருக்க வேண்டும்.ஜந்தர் மந்தர் பொதுக் கூட்டத்தில், என்னமோ பிரதமர் மோடி தான் இவரை கைது செய்து சிறையில் அடைக்க சொன்னதுபோல பில்டப் கொடுத்து, பிரதமர் மோடியை, சகட்டுமேனிக்கு தாக்கிப் பேசி,மன ஆறுதல் அடைந்து, ஆர்.எஸ்.எஸ்.,தலைவர் மோகன் பாகவத்திற்கு, ஐந்து கேள்விகளையும் கேட்டுள்ளார்.அவற்றில் முக்கியமானது, 'அத்வானி, முரளி மனோகர் ஜோஷி உள்ளிட்டோர், 75 வயதில் ஓய்வு பெற்றனர். பா.ஜ.,வின் இந்த விதி, மோடிக்கு பொருந்தாது என அமித் ஷா கூறியுள்ளார். இது குறித்து உங்கள் கருத்து என்ன?' என, வினா எழுப்பியுள்ளார்.நாட்டில் நிலவும் லஞ்சம் மற்றும் ஊழலை ஒழித்துக்கட்ட, 'லோக்பால் மசோதா'வை அமல்படுத்த வேண்டுமென,சமூக ஆர்வலர் அன்னா அசாரே நடத்திய உண்ணாவிரத போராட்டத்தின் வாயிலாக,அரசியல் சேற்றுக்குள் இறங்கியவர் தான், இந்த அரவிந்த் கெஜ்ரிவால். எந்த லஞ்சம் மற்றும் ஊழலை ஒழிக்க, லோக்பால் மசோதாவை அமல்படுத்தவேண்டுமென அன்னா அசாரே உண்ணாவிரத போராட்டம் நடத்தினாரோ, அதன் வாயிலாக அரசியலுக்கு வந்த இந்த கெஜ்ரிவால், அந்த லஞ்சம் மற்றும் ஊழல் சேற்றை தானும் பூசி, தன் கட்சிக்கும்பூசி விட்டிருக்கிறார். இவர் எப்படி மற்றவர் மீது குறை சொல்ல முடியும்?ஆர்.எஸ்.எஸ்.,சிடமிருந்து தக்க பதில் வரும் என எதிர்பார்ப்போம்!அடக்கி வாசிப்பது நல்லது!
என்.மல்லிகை மன்னன்,மதுரையில் இருந்து அனுப்பிய,'இ - மெயில்' கடிதம்: தமிழககாங்கிரஸ் தலைவர்செல்வப்பெருந்தகை தலைமையில் நடந்த ஆலோசனைக் கூட்டத்தில் பங்கேற்ற கதர்ச்சட்டைப் பேர்வழிகள், 'நடைபெறப்போகும் உள்ளாட்சி தேர்தலில், தி.மு.க.,விடம், 20 சதவீதம் இடங்கள் கேட்க வேண்டும். இதற்கு அவர்கள் சம்மதிக்காவிட்டால்,தனித்துப் போட்டியிட வேண்டும்' என்று, ரொம்பவே வீராவேசமாகப்பேசி இருக்கின்றனர்.நேரு காலத்தில், அகில இந்திய அளவில் காங்கிரஸ் கட்சி, தேர்தலில் தனித்துப் போட்டியிட்டு வெற்றி பெறும் நிலையில் இருந்தது என்னவோ உண்மை தான்.தமிழகத்திலும், 1967க்கு முன் காங்கிரஸ் கட்சி தேர்தலில் தலைவர் காமராஜர் தலைமையில் தனித்துப் போட்டியிட்டு வெற்றி பெற்ற வரலாற்றை நாம் மறக்க முடியாது. அதன் பின், நடந்த சட்டசபை தேர்தலில் தான், தி.மு.க., தலைவர் அண்ணாதுரை, கூட்டணித்தத்துவத்தை ஆரம்பித்தார்.செல்வாக்கு இல்லாத கட்சிகளுடன் கூட்டணி வைத்து, காங்கிரசைத் தோற்கடித்து ஆட்சியைப் பிடித்தார்.அதன் பின் காங்கிரசுக்கு,தி.மு.க.,வுடன் கூட்டணிவைக்க வேண்டிய கட்டாயம் ஏற்பட்டது.கூட்டணி இல்லாமலேயேதேர்தலில் வெற்றி பெற முடியும் என்று சாதித்து காட்டிய பெருமை,ஜெயலலிதாவுக்கு மட்டுமேஇருந்தது.இவ்வளவு பின்னணி கொண்ட காங்கிரஸ்தற்போது, கூட்டணி இல்லாமல் தேர்தலில் வெற்றி பெற வேண்டும் என்று, 'உதார்' விடுகிறது.டில்லி தலைவர்கள், ஸ்டாலினுடன் நெருக்கமாக இருக்கும் நிலையில், இங்கு செல்வப்பெருந்தகைதலைமையிலான கூட்டம், தி.மு.க.,வுக்கு எதிர்ப்பு தெரிவிக்கிறது.நடைபெற்ற லோக்சபா தேர்தலில், காங்கிரஸ் கட்சி, மற்ற மாநிலக் கட்சிகளுடன்தேர்தல் கூட்டணி வைக்காமல் தனித்துப் போட்டியிட்டிருந்தால், ஒரு இடத்தில் கூட வெற்றி பெற்றிருக்க முடியாது. 'இண்டியா' கூட்டணியில்காங்கிரஸ் இடம் பெற்ற காரணத்தால் தான்,ராகுல் பிரதமராக முடியா விட்டாலும், எதிர்க்கட்சித் தலைவர் என்றபதவியாவது அவருக்கு கிடைத்தது.நம் நாட்டில், எந்தக் கட்சியும் தேர்தலில் தனித்துப் போட்டியிட்டு வெற்றி பெறவே முடியாதுஎன்பது தான் நிதர்சனமானஉண்மை. இதைத் தமிழகத்தில் உள்ள கதர்ச்சட்டைப் பேர்வழிகள் உணர்ந்து, கொஞ்சம் அடக்கி வாசிப்பது நல்லது!நிஜமான ஹீரோக்களாக கொண்டாடலாம்!எஸ்.ரவிசங்கர் திராவிட், ஹைதராபாத், தெலுங்கானாமாநிலத்தில் இருந்து அனுப்பிய, 'இ - மெயில்' கடிதம்: சமீபத்தில், ரஜினி, கமல் உள்ளிட்ட நடிகர்கள் இணைந்து கலைநிகழ்ச்சி ஒன்றை நடத்தி, அந்த பணத்தில் நடிகர் சங்க கடனை தீர்க்க போவதாக பத்திரிகை செய்தியை படித்தேன். 'நடிகர் சங்கத்திற்கு கடன்' என்ற செய்தி, ஒவ்வொரு நடிகருக்கும், குறிப்பாக, 100 கோடிகளுக்கு மேல் சம்பளம் வாங்கும் நடிகர்களுக்கு அவமானம் என்பதை இவர்கள் உணர வில்லையா? இவர்களில் சிலர், அரசியல் ஆசையுடன் வேறு உள்ளனர்.தங்களுடைய கட்டடத்தையும், சங்கத்தையும் கடனில் வைத்திருப்பவர் கள், சமுதாயத்துக்கு என்ன செய்யப் போகின்றனர் என்பது மிகப் பெரிய கேள்விக்குறி.ஒவ்வொருவரும் கருப்பு பணமாக பல நுாறு கோடிகளை பதுக்கி வைத்துஉள்ளனர். தற்போதுள்ள சூழ்நிலையில் நாட்டின் முன்னணி நடிகர்களிடமும்,கிரிக்கெட் வீரர்களிடமும் உள்ள பணம், நம் நாட்டின் பட்ஜெட் தொகையைவிட அதிகமாக இருக்கும்.'ஆழ அமுக்கி முகக்கினும் ஆழ்கடல்நீர் நாழி முகவாது நால்நாழி - தோழி' என்ற அவ்வையார் வாக்கின்படி, கடல் நீரில் எவ்வளவு ஆழத்தில் குடுவையை முக்கி நீர் எடுத்தாலும், ஒரு குடுவை நீர் தான் உங்களுக்கு வரும். அதுபோல நீங்கள் எவ்வளவு கோடி சம்பாதித்தாலும் ஒரு சாண் வயிறு, ஒரு முழ ஆடை, ஆறடி நிலம்' என்ற வேதாந்த உணர்வை, இத்தகைய பிரபலங்கள்நினைத்துக் கொள்ள வேண்டும்.தங்களது தேவைக்கு மேல் வரும் ஒவ்வொருரூபாயும், இந்த சமுதாயத்திற்கு சொந்தம் என்ற உணர்வுடன், இந்த சமுதாயத்திற்கு திருப்பி செய்ய வேண்டியது, அவர்களுடைய கடமை மட்டுமல்ல; பொறுப்பும்கூட.உதாரணமாக, இவர்கள் அனைவரும் தாங்கள் வசிக்கும் மாநிலத்தில் முதற்கட்டமாக அவர்களுக்கு விருப்பமான ஒருகிராமத்தை தத்தெடுத்துக் கொள்ளலாம். அங்கு, இயற்கையுடன் ஒன்றிணைந்த உள்கட்டமைப்பு வசதிகளை ஏற்படுத்தலாம்.அங்கு இருக்கும் நீர் நிலைகளை மீட்டெடுக்கவும், பாதுகாக்கவும், பள்ளி கட்டடங்களின் தரத்தை சீரமைக்கவும், தேவை ஏற்பட்டால் புதிதாக கட்டித்தரவும் இவர்கள் முன்வரலாம்.இவற்றை எல்லாம் செய்தால், இவர்கள் தான் நிஜமான ஹீரோக்கள் என, நாம் கொண்டாடலாம்.