அ.குணசேகரன், வழக்கறிஞர், புவனகிரி, கடலுார் மாவட்டத்தில் இருந்து அனுப்பிய, 'இ - மெயில்' கடிதம்: இந்திய அரசியலில், எந்தவொரு ஊழல் குற்றச்சாட்டுகளுக்கும் ஆளாகாமல், கொள்கை பிடிப்புடன் தங்கள் அரசியல் பயணத்தை நடத்தும் ஒருசிலர் உள்ளனர் என்றால், நிச்சயம் அவர்கள் கம்யூனிஸ்ட் கட்சியின் தலைவர்களாகத் தான் இருப்பர்.அந்த வரிசையில், தற்போது காலமான மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் பொதுச்செயலர் சீதாராம் யெச்சூரியும் ஒருவர். இளம் வயதிலேயே இந்திய மாணவர் அமைப்பில் இணைத்துக் கொண்டார். அதன்பின், 1975ல் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியில் தன்னை இணைத்துக் கொண்டவர், இந்திராவால் கொண்டு வரப்பட்ட அவசரநிலை காலத்தில், அதற்கு எதிராக போராடி சிறை சென்றவர்.கட்சியில் எப்படி படிப்படியாக ஒருவர் பதவியை அடைய வேண்டும் என்பதற்கு சீதாராம் யெச்சூரி ஒரு உதாரணம். 1978ல் கம்யூனிஸ்ட் கட்சியின் இந்திய மாணவர் கூட்டமைப்பின் தலைவர், 1984ல் மத்தியக் குழு உறுப்பினர், 1992ல் பொலிட் பீரோ உறுப்பினர் என, படிப்படியாக உயர்ந்தார்.கடந்த, 2005 - 17 வரை ராஜ்யசபா எம்.பி.,யாக இருந்து, தன் மொழி புலமையால் அனல்பறக்கும் விவாதங்கள் செய்வதில் வல்லமை படைத்தவர் ஆனார். அவையில் தன் கட்சியின் கொள்கைகளுக்காவும், ஒட்டுமொத்த தேச நலனுக்காகவும் குரல் கொடுத்து சண்டை செய்பவர். அவைக்கு வெளியே வந்தவுடன், அனைவரிடமும் நட்புடன் பழகுவதில் சிறந்து விளங்கினார்.கடந்த 2015 முதல் உயிர் பிரியும், 2024 வரை, மார்க்சிஸ்ட் கட்சி பொதுச்செயலராக இருந்து காலமானார். இன்றைய சுயநல அரசியல் கட்சித் தலைவர்களுக்கு மேலும் ஒரு பாடத்தை கற்றுத் தந்து சென்றுள்ளார்...அதாவது, இன்றைய பல அரசியல் கட்சித் தலைவர்கள், தாங்கள் இறந்த பின் அவர்கள் உடலை அனைவரும் பார்த்து வணங்க வேண்டும் என்றும், அதை மாநகரில் முக்கிய இடத்தில் அடக்கம் செய்து, அதன் மீது பல கோடிகள் செலவு செய்து மணிமண்டபம் கட்ட வேண்டுகோள் வைப்பதை பார்த்து வருகிறோம்.ஆனால், சீதாராம் யெச்சூரி தனக்கு சிகிச்சை அளித்த டில்லி எய்ம்ஸ் மருத்துவமனைக்கே, தன் உடலை தானமாக வழங்கியுள்ளது மகிழ்ச்சி அளிக்கிறது. இதன் வாயிலாக, நாடு முழுதும் உள்ள கம்யூனிஸ்ட் தோழர்களுக்கு மட்டுமல்லாமல், ஒட்டுமொத்த அரசியல் கட்சித் தலைவர்களுக்கும் அவர் முன்னுதாரணமாக திகழ்ந்துள்ளார். அவருக்கு வீர வணக்கம் செலுத்துவோம். வன்மையாக கண்டிக்கத்தக்கது!
என்.கந்தசாமி,
மதுரையிலிருந்து அனுப்பிய, 'இ - மெயில்' கடிதம்: 'எங்க மதத்திற்கு வாங்க;
நல்லா படிக்கலாம், பட்டதாரி ஆகலாம். அப்பாவு கிறிஸ்துவராக இருப்பதால் தான்,
சபாநாயகர் பதவி அவருக்கு கிடைத்தது.இல்லை என்றால் அவர், கோவிலில்
மணி அடித்துக் கொண்டு தான் இருப்பார்' என, சட்ட சபை சபாநாயகராக இருக்கும்
அப்பாவுவை பாராட்டுவது போல், இழிவுபடுத்தி இருக்கிறார் பாதிரியார் ஜார்ஜ்
பொன்னையா.சபாநாயகர் அப்பாவு குறித்து இப்படி தரக்குறைவாக, ஹிந்து
மதத்தைச் சேர்ந்த பூசாரிகள் யாராவது விமர்சனம் செய்திருந்தால், திராவிடச்
செம்மல்கள் கொதித்து எழுந்து வசைபாடி இருப்பர்; ஹிந்து மதத் தலைவர்கள் மீது
அவதுாறு வழக்குகள் தொடர்ந்து, சிறையில் அடைத்திருப்பர்.சபாநாயகர் அப்பாவு தன்னை இழிவுபடுத்திய கிறிஸ்துவ பாதிரியார் மீது எந்த நடவடிக்கையும் எடுக்க மாட்டார் என்று நம்பலாம்ஒரு
கிறிஸ்துவராக இருந்து கொண்டு கிறிஸ்துவ பாதிரியார் மீது சட்டப்படி
நடவடிக்கை எடுக்க சபாநாயகர் அப்பாவுக்குத் துணிச்சல் வர வாய்ப்பே இல்லை.தி.மு.க.,
கூட்டணியில் இருக்கும் அரசியல் தலைவர்களும், சபாநாயகர் அப்பாவுவைத்
தரக்குறைவாகப் பேசிய பாதிரியாரைக் கண்டிக்க தயக்கம் காட்டுவர்.'முற்பிறவியில்
செய்த பாவங்களுக்காக இப்பிறவியில் பலன் அனுபவிக்கிறோம்' என்று பேசிய
ஆன்மிக சொற்பொழிவாளர் மகாவிஷ்ணு மீது வேகமாக நடவடிக்கை எடுத்தவர்கள்,
கிறிஸ்துவ பாதிரியார் மீது சட்டப்படி நடவடிக்கை எடுக்க யோசிப்பர். இதுதான்
இவர்கள் போற்றும் சமூக நீதி.'நாங்கள் ஹிந்துக்களை கிறிஸ்துவர்களாக
மத மாற்றம் செய்வோம். அதில் எங்களுக்கு எந்த தயக்கமோ, பயமோ இல்லை' என்று
துணிந்து பேசுகிறார் இந்தப் பாதிரியார்.கோவிலில் மணி அடித்துப்
பூஜை புனஸ்காரம் செய்யும் ஹிந்து பூஜாரிகள்எல்லாம் தாழ்ந்தவர்கள் என்றும்,
தேவாலயத்தில் மணி அடித்து பூஜை செய்யும் பாதிரியார்கள் உயர்ந்தவர்கள் என்ற
நினைப்பிலும் பேசும் பாதிரியார் ஜார்ஜ் பொன்னையாவின் பேச்சு, வன்மையாக
கண்டிக்கத்தக்கது. காங்.,கை எதிர்க்க வழிகாட்டும் ராகுல்!
சுப்ரமண்யன்
அனந்தராமன்,நெய்வேலியிலிருந்து அனுப்பிய, 'இ - மெயில்' கடிதம்: காங்.,
தலைவர் ராகுல், அமெரிக்காவில் நம் நாட்டின் மானத்தை வாங்குவது போல பேசியது
குறித்து அங்கலாய்ப்பவர்களுக்கு ஒரு தகவல்...ராகுலின் பாட்டி,
முன்னாள் பிரதமர் இந்திரா, 1967-ல் காங்கிரஸ் கட்சியை பிளவுபடுத்தி,
இந்திரா- காங்கிரஸ் என்ற புதிய காங்கிரசின் எதேச்சதிகாரியாக வலம் வந்தார்.அந்த காலகட்டத்தில், ரஷ்யாவுக்கு பயணம் மேற்கொண்டார்; அப்போதைய ரஷ்ய அதிபர் பிரஷ்னேவைச் சந்தித்தார்.அப்போது,
நம் நாட்டு தேச பக்தர்களான, மொரார்ஜி தேசாய், அடல்பிஹாரி வாஜ்பாய், லால்
கிருஷ்ண அத்வானி, ஜெயப் பிரகாஷ் நாராயண், பெருந்தலைவர் காமராஜர் ஆகியோர்
குறித்து, அவதுாறான புகார்களை வெளியிட்டார்.முன்பு, பாட்டி
இந்திராரஷ்யாவில் செய்ததையே, இப்போது பேரன் ராகுல், அமெரிக்காவில்
செய்திருக்கிறார். அப்போது பழைய காங்கிரஸ், சுதந்திரா கட்சி, ஜனசங்க கட்சி,
பாரதீய லோக் தள். பிரஜா சோஷலிஸ்டு கட்சி ஆகியவை, ஜெயபிரகாஷ்
நாராயண் அறிவுரையை ஏற்று, தங்கள் கட்சிகளின் தனிப்பட்ட அடையாளங்களைத்
தியாகம் செய்து, 'ஜனதா கட்சி' என்ற பெயரில், ஒரே குடையின் கீழ் ஒன்றிணைந்த
கால கட்டம் அது.அக்கால கட்டத்தை நோக்கி, அதாவது காங்கிரசை
எதிர்த்து மீண்டும் அனைத்து கட்சிகளும் ஒன்றிணையும் நிலைக்கு
வழிகாட்டுகிறார் ராகுல்; அவ்வளவு தான்!