சுக.மதிமாறன், நத்தத்தில் இருந்து அனுப்பிய, 'இ - மெயில்' கடிதம்: ஓய்வு பெறும் ஆசிரியர்களுக்கு, அவர்கள் சார்ந்த தணிக்கைத் துறையில், தடையில்லா சான்று பெற லஞ்சம் கொடுக்க வேண்டி உள்ளதாகவும், அதை தடுக்க வேண்டும் என, முதல்வர் மற்றும் துறையின் அமைச்சருக்கு ஆசிரியர் சங்க பொறுப்பாளர்கள் கோரிக்கை வைத்துள்ளனர். சமீபகாலமாக ஆசிரியர்கள் மீது பாலியல் குற்றங்கள் சுமத்தப்பட்டு, கைது நடவடிக்கைகள் அடிக்கடி நிகழ்ந்து வருகின்றன. ஒருசில ஆசிரியர்களின் செயல்களால், பெரும்பான்மை ஆசிரியர் சமூகம் வெட்கி தலை குனிகிறது.அதேநேரம், சக ஆசிரியர்கள் செய்யும் இதுபோன்ற தவறுகளை சங்கங்கள் தட்டிக்கேட்பது இல்லை. ஓய்வு பெறும் ஆசிரியர்கள் பாதிக்கப்படுகின்றனர் என்றவுடன், கோரிக்கை வைக்கும் இச்சங்கம், குற்றச் செயல்களில் ஈடுபடும் ஆசிரியர்களை கண்டித்து உள்ளதா? சமீபத்தில், புதுக்கோட்டையில் மாணவியரிடம் பாலியல் சேட்டை புரிந்த ஆசிரியரை போலீசார் கைது செய்த போது, ஊடகங்கள் அவரை புகைப்படம் எடுத்துவிடக் கூடாதே என்று, சக ஆசிரியர்கள் துண்டைக் கொடுத்தும், சூழ்ந்து நின்றும் அவரை மறைத்தனர். இச்செயலை ஆசிரியர் சங்கம் வரவேற்கிறதா? அவர்களை ஏன் கண்டிக்கவில்லை? ஒரு சிலர் செய்யும் தவறுகளால் ஒட்டுமொத்த ஆசிரியர்களுக்கும் அவப்பெயர் உண்டாகிறது. இதனால், நேர்மையான, ஒழுக்கமான ஆசிரியர்கள் மீதும் சந்தேகப் பார்வை வீசப்படுகிறது. ஒவ்வொரு பள்ளியிலும் யார் தவறு செய்கின்றனர் என்பது அங்கு பணிபுரிவோருக்கு நிச்சயம் தெரியும். ஆனாலும், நமக்கு எதற்கு வம்பு என்பது போல் வாய்மூடி இருக்கின்றனர்.ஒரு தவறை எந்தச் சூழ்நிலையிலும் சகித்துக் கொள்ளக் கூடாது; தைரியமாக எதிர்க்க வேண்டும் என்று மாணவர்களுக்கு கற்றுக் கொடுக்க வேண்டிய ஆசிரியர்களே, சக ஆசிரியர்கள் தவறு செய்யும் போது, அதை கண்டும், காணாமலும் நகர்ந்து விடுவது, ஆசிரியர் தொழிலுக்கே இழுக்கு!இதுபோன்ற சமயங்களில் ஆசிரியர் சங்கம் என்ன செய்கிறது? குற்றவாளிகள் மீது கடுமையான நடவடிக்கை எடுப்பதற்கு பதில், குற்றத்தில் இருந்து அவர்களை எப்படி தப்பிக்க வைப்பது என்று யோசிக்கிறது. இதுவரை எண்ணற்ற பாலியல் அத்துமீறல்கள் நடந்துள்ளன... 'ஒழுக்கமாகவும், நேர்மையாகவும் பணிபுரிய வேண்டும்; மீறினால், சம்பந்தப்பட்டவர்கள் மீது நடவடிக்கை எடுக்க, சங்கமே அரசுக்கு பரிந்துரைக்கும்' என்று எப்போதாவது தங்கள் உறுப்பினர்களுக்கு, அறிக்கை வெளியிட்டுள்ளதா? ஓய்வு பெறும் ஆசிரியர்களுக்கு தடையில்லா சான்று பெற லஞ்சம் கேட்கின்றனர் என்றதும், ஓங்கி குரல் கொடுக்கும் ஆசிரியர் சங்கம், பாதிக்கப்பட்ட மாணவியருக்கு ஏன் குரல் கொடுக்கவில்லை? எழுத்தறிவித்தவன் இறைவன்; அவன் ஒருபோதும் நடுநிலை தவறக் கூடாது! போரடிக்கிறது விஜய் உங்கள் அரசியல்!
ராம்
வெங்கட், 21 வயது, கல்லுாரி மாணவன், சென்னையிலிருந்து அனுப்பிய,
'இ-மெயில்' கடிதம்: அரசியல் என்பது என்ன? நாட்டு மக்களுக்குச் சேவை
செய்யும் மனப்பான்மை உள்ளவர்கள், அதற்காகவே தங்களை தயார்படுத்தி, அரசு
நிர்வாக சிக்கல்களைச் சமாளித்து, மக்களை நிம்மதியாக வாழ வைக்கும்
லாவகத்தைக் கற்றுக் கொள்வதே!இதில் முக்கியமான இரண்டு விஷயங்கள் உள்ளன. ஒன்று, முழுக்க முழுக்க சேவை மனப்பான்மை; மற்றொன்று, சுயநலமில்லாத நிர்வாகத் திறன்.சேவை
மனப்பான்மை என்றாலே சுயநலம் அற்றுப் போகும் என்பது இயல்பு. நிர்வாகத்
திறன் என்பது, கிடைக்கும் மூலதனங்களை வைத்து, இடர்களைக் களைந்து,
மக்களுக்கான நிம்மதியான வாழ்க்கையை, வசதியை ஏற்படுத்தித் தருவது.'நான்
உங்களுக்கு சேவை செய்ய ஆசைப்படுகிறேன்' எனச் சொல்வதற்கும், மக்களுக்கு
நம்மை அறிமுகப்படுத்திக் கொள்வதற்கும், கட்சி நடத்த வேண்டி இருக்கிறது.
மக்கள், நம்மை அங்கீகரிக்கின்றனர் என்ற வகையில், ஓட்டு போட வேண்டும்.அந்த
ஓட்டைப் பெறுவதற்காக, நாம் என்னவெல்லாம் செய்யலாம்... தெருக்களில்,
சாலைகளில் உள்ள பிரச்னைகளைச் சரிசெய்யலாம்; பசியால் வாடும் மக்களுக்கு பசி
போக்கும் வகையிலான உதவிகளைச் செய்யலாம்; அன்றாட வாழ்க்கையில் ஏற்படும்
இடர்களைக் களையலாம்; பேரிடர் காலங்களில், ராணுவத்துக்கு ஈடாக செயல்பட்டு
உதவி செய்யலாம்.மக்கள் பணம் சம்பாதித்து பொருள் ஈட்டும் வகையில்,
வேலை வாய்ப்பை ஏற்படுத்தித் தரலாம்; விலைவாசி உயர்வைத் தடுக்க, அறிவுத்
திறனுடன் சிந்தித்து, அதற்கான பணிகளை மேற்கொள்ளலாம்.ஆனால், இங்கு எல்லாமே நடிப்பு. சேவை மனப்பான்மை என்பது, எந்த அரசியல் கட்சிக்கும் இம்மி அளவு கூட இல்லை.வெறும்
ஒரு தண்ணீர் பந்தல் அமைப்பதற்கு கூட, 'மீடியா' வெளிச்சத்தில் செய்யும்
மனப்பான்மை. உச்சபட்சமாய், 'வேல் துாக்குகிறேன், குறுத்தோலை ஏந்துகிறேன்,
இப்தார் நோன்பு செய்கிறேன்' என, அப்பட்டமாய் நடிப்பது.ஏற்கனவே உள்ள
அரசியல் கட்சியினர் தான் இப்படி சிந்திக்கின்றனர் என்றால், நேற்று வந்த
விஜய் கூடவா? 'அமெச்சூரிஷ்'தனமாய், முதல் மாநாட்டை, ரோடு ேஷா போல
நடத்தினீர்கள். போனால் போகிறது என சகித்துக் கொண்டோம். உங்கள் பேச்சு...
அதிலும் நாடக நெடி தான் தலைதுாக்குகிறது.ஏன் விஜய், நீங்களும் நடிக்கிறீர்கள்? சம்பாதிக்கவா அரசியலுக்கு வந்திருக்கிறீர்கள்? ஆரம்பத்திலேயே போரடிக்கிறது உங்கள் அரசியல்... நியாயமான, நேர்மையான, புது, 'ரூட்' போடுங்கள்! கனிமொழியின் ஆசை!
ஆர்.சந்தனபூபதி,
புதுச்சேரியில் இருந்து அனுப்பிய, 'இ - மெயில்' கடிதம்: டில்லி
சட்டசபையில், பா.ஜ.,வென்று, ரேகா குப்தா முதல்வரானதில் இருந்து, தி.மு.க., -
எம்.பி., கனிமொழிக்கும் முதல்வர் ஆசை வந்து விட்டது. 'வாளால்
சண்டையிடும் ரேகா குப்தாவே டில்லி முதல்வராகி இருக்கும் போது, வாயால்
சண்டையிடும் நாம் முதல்வராக கூடாதா?' என்று நினைக்க ஆரம்பித்து விட்டார். அதன்
வெளிப்பாடாக, 'நாட்டில் ஆண்களே, 90 சதவீதம் முதல்வராக உள்ளனர்.
பெண்களுக்கு சமவாய்ப்பு வழங்கப்பட வேண்டும்' என, மகளிர் தின செய்தியாக,
அண்ணன் ஸ்டாலினுக்கு பூடகமாக தன் எண்ணத்தை வெளிப்படுத்தியுள்ளார். அதாவது,
'நீங்களும், உங்கள் மகனும் தான் முதல்வர், துணை முதல்வர் பதவிகளை
அலங்கரிப்பீர்களா... நானும் கருணாநிதியின் மகள் தானே, எனக்கும் ஒருமுறை
முதல்வர் ஆகும் வாய்ப்பை தாருங்கள்' என்று மறைமுகமாக கேட்டுள்ளார். அவரது
கோரிக்கைக்கு முதல்வர் ஸ்டாலின் செவி சாய்ப்பாரா அல்லது கட்சியில் இருந்து
தன் அண்ணன் அழகிரியை கழற்றி விட்டது போல், தங்கை கனிமொழிக்கும் ஆப்பு
அடிப்பாரா என்பதை பொறுத்திருந்து பார்ப்போம்!