உள்ளூர் செய்திகள்

/ தினம் தினம் / இது உங்கள் இடம் / கொள்கை முக்கியம்!

கொள்கை முக்கியம்!

ஆர்.சுகுமாறன், திருத்தணி, திருவள்ளூர் மாவட்டத்தில் இருந்து அனுப்பிய, 'இ - மெயில்' கடிதம்:'மும்மொழி கல்வித் திட்டத்தை ஏற்காததால், தமிழகம் இழப்பது 5,000 கோடி ரூபாய்; எந்த மாநிலத்தின் மீதும் எந்த மொழியையும் திணிக்கவில்லை. கல்வியை அரசியலாக்கி அச்சுறுத்த வேண்டாம்' என, முதல்வர் ஸ்டாலினுக்கு எழுதியுள்ள கடிதத்தில் குறிப்பிட்டுள்ளார், மத்திய கல்வி அமைச்சர் தர்மேந்திர பிரதான்.தேசிய கல்விக் கொள்கை என்றால் என்னவென்று தெரியாத, தெரிந்து கொள்ள விழையாத, ஆட்சியாளர்களின் கையில், குரங்கு கை பூமாலையை போல், ஏழை மாணவர்களின் கல்வி சிக்கிக் கொண்டிருப்பதை நினைத்தால், மனம் வேதனையில் தவிக்கிறது.'மூர்க்கனும், முதலையும் கொண்டது விடா' என்ற சொலவடைக்கேற்ப, புதிய கல்விக் கொள்கையில் என்ன சொல்லப்பட்டுள்ளது என்பதை படித்துப் பார்க்காமலேயே, எதிர்க்கின்றனர்.மாணவர்களின் எதிர்காலம் எக்கேடு கெட்டாலும், ஆட்சியாளர்களுக்கு அவர்களது கொள்கை முக்கியம்.'கொள்கை என்பது கழகத்தினருக்கு இடுப்பு வேட்டி போன்றது; பதவி என்பது தோளில் தொங்கும் துண்டு போன்றது' என, சமீபத்தில் உதயநிதி இதற்கு விளக்கம் கொடுத்து இருந்தார்.ஹிந்தி மொழியை மூலதனமாக்கி, தமிழக மாணவர்கள் முன்னேற்றம் அடைந்து விடக்கூடாது என்பதற்காக, இடுப்பு வேட்டி இல்லாமல் நின்றாலும் நிற்போமே தவிர, தோளில் அணிந்திருக்கும் துண்டை ஒரு போதும் விலக்க மாட்டோம் என்பது போல் உள்ளது ஆட்சியாளர்களின் செயல்பாடுகள்!மும்மொழி கல்வித் திட்டத்தில், மூன்றாவதாக இந்தியாவின் எந்த மொழியையும் விருப்பப் பாடமாக தேர்ந்தெடுக்கலாம் என்று கூறப்பட்டுள்ள நிலையிலும், அரண்டவன் கண்களுக்கு இருண்டது எல்லாம் பேயாக தெரிவது போல், தெலுங்கு, மலையாளம், கன்னடம், மராத்தி, ஒடியா, துளு, பஞ்சாபி, அசாமி போன்ற அத்தனை மொழிகளும் கழகத்தின் கண்களுக்கு, 'ஹிந்தி'யாகவே தெரிகிறது போலும்!அதுதான் இடுப்பு வேட்டியை இறுகக் கட்டிக் கொண்டு, எதிர்க்க புறப்பட்டுள்ளனரோ!

நிலைத்து நிற்பது உறுதி!

என். மல்லிகை மன்னன், மதுரையில் இருந்து அனுப்பிய, 'இ - மெயில்' கடிதம்: மத்திய அரசின் மும்மொழிக் கொள்கையை ஏற்க மறுத்ததால், தமிழகத்திற்கு, 5,000 கோடி ரூபாய் இழப்பு ஏற்பட்டுள்ளது.மூன்றாவது மொழியாக இந்திய மொழிகளில் எதையாவது ஒன்றை மாணவர்கள் படிக்க வேண்டும் என்று தானே சொல்கிறது புதிய கல்விக் கொள்கை?அது ஹிந்தி மொழியாகத்தான் இருக்க வேண்டும் என்று கட்டாயப்படுத்த வில்லையே! அந்நிய மொழியான ஆங்கிலத்தை விரும்பி படிக்கும்போது, இந்திய மொழிகளில் ஒன்றான ஹிந்தியை படிப்பதால் குடியா மூழ்கி விடும்? கவிச்சக்கரவர்த்தி கம்பருக்கு, சமஸ்கிருதம் தெரியாமல் போயிருந்தால் ராமாயணம் என்ற காவியத்தை அவரால் எழுதி இருக்க முடியுமா?பிரதமர் மோடி ஹிந்தியை திணிக்கிறார் என்றால், அவர் செல்லும் இடம் எல்லாம் ஏன் திருக்குறளின் பெருமையை எடுத்துச் சொல்கிறார்? தி.மு.க.,வினருக்கு ஹிந்தி பிடிக்கவில்லை என்றால், அவர்கள் பிள்ளைகள் மட்டும் தனியார் பள்ளிகளில் ஹிந்தி மொழியை படிப்பது ஏன்? தங்கள் பிள்ளைகள் படிக்கும்போது மட்டும் மனம் குளிர்கிறது; ஏழை பிள்ளைகள் படித்தால் எரிகிறதா?தி.மு.க., கட்சிக் கொள்கைகளை, தங்களுடன் வைத்துக் கொள்ளாமல் ஓட்டுப் போட்ட பாவத்திற்கு, ஏழை பெற்றோரின் பிள்ளை களை தண்டிப்பது எந்த வகையில் நியாயம்?சர்க்கரை வியாதிக்காரன் இனிப்பு சாப்பிட முடியாமல் தவிக்கிறான் என்பதற்காக, மற்றவர்களும் இனிப்பு சாப்பிடக்கூடாது என்று சொல்வது போல் இருக்கிறது தமிழக அரசின் நிலைப்பாடு! 'நாங்கள் வரி கொடுக்க மாட்டோம் என்று கூற ஒரு நொடி போதும்' என்கிறார் முதல்வர்.இவர் வரி கொடுக்காவிட்டால், மத்திய அரசுக்கு பெரிதாக நஷ்டம் இல்லை; அதேநேரம், தமிழக அரசுக்குத்தான் பல வழிகளில் நஷ்டமும், கஷ்டமும் ஏற்படும் என்பதை எப்படி மறந்தார்? பக்கத்து மாநில மாணவர்கள் எல்லாம் மூன்றாவது மொழியை விரும்பி படிக்கும்போது, தமிழக அரசுப் பள்ளி மாணவர்களுக்கான வாய்ப்பைத் தட்டிப் பறிப்பது, அவர்களுக்கு செய்யும் பச்சைத் துரோகம் இல்லையா?ஹிந்தி எதிர்ப்பு போராட்டம் எப்படி நிலைத்து நிற்கிறதோ, அதேபோன்று, தற்போது, அரசுப் பள்ளி மாணவர்களுக்கு தி.மு.க., அரசு செய்யும் இந்த துரோகமும், கால கல்வெட்டில் நிலைத்து நிற்கப் போவது உறுதி!

கடமை என்று உணர்வது எப்போது?

எஸ்.நந்தகோபன், திருவள்ளூரில் இருந்து அனுப்பிய, 'இ - மெயில்' கடிதம்: பள்ளிகளில், காலை சிற்றுண்டி உண்ணும் குழந்தைகள், 'அப்பா' என்று தன்னை அழைப்பதாக பெருமைப்படுகிறார், முதல்வர் ஸ்டாலின்.உணவுக்கு வழியில்லாததால், பிள்ளைகள் பள்ளிக்கு வருவதில்லை என்பதை அறிந்த காமராஜர், தன் ஆட்சிக்காலத்தில், பள்ளிகளில் மதிய உணவு வழங்கினார். அத்திட்டம், எம்.ஜி.ஆர்., ஆட்சி காலத்தில், குழந்தைகள் மற்றும் முதியோருக்கும் உணவு கிடைக்கும் வகையில், முதலமைச்சரின் சத்துணவு திட்டமாக விரிவுபடுத்தப்பட்டது.இதற்காக எம்.ஜி.ஆர்., பெருமைப்பட்டதில்லை!ஜெயலலிதா ஆட்சியில், ஏழை மக்கள் அனைவரும் பசியாறும் பொருட்டு, காலையில் சிற்றுண்டி, மதியம் - சாம்பார் சாதம், தயிர் சாதம் போன்றவை, மிகக் குறைந்த விலையில், 'அம்மா உணவகம்' வாயிலாக தரப்பட்டது. இதுகுறித்து ஜெயலலிதாவும் பெருமைப்பட்டதாக தெரியவில்லை!சென்னை - திருவல்லிக்கேணி அயோத்தி குப்பத்தில், 1860ல் பிறந்து, சட்டம் படித்து, தமிழ், ஆங்கிலம், ஹிந்தி, உருது, ஜெர்மன் மொழிகளை கற்ற பன்மொழி வித்தகர் சிங்காரவேலர், சென்னை மாநகராட்சி கவுன்சிலராக இருந்த போது, பள்ளிகளில் மதிய உணவுதிட்டத்தை முதன்முதலில் துவக்கி வைத்தார். இதற்காக, சிங்காரவேலர் பெருமிதம் அடைந்ததாக வரலாறு இல்லை.அவர் துவக்கிய இத்திட்டம் இடையில் கைவிடப்பட்டாலும், மாணவர்களின் பசிப்பிணியை கருத்தில் கொண்டு, அத்திட்டத்தை மாநிலம் முழுதும் செயல்படுத்தினார் காமராஜர். இதுகுறித்து எந்த ஒரு தருணத்திலும் காமராஜர் பெருமிதம் அடைந்ததில்லை.காரணம், இவர்கள் எல்லாம் மக்கள் பணி செய்வதை தங்கள் கடமையாக நினைத்தனர்; அதை விளம்பரப்படுத்தி ஓட்டு அரசியல் செய்ய நினைக்கவில்லை!ஆனால், முதல்வர் ஒவ்வொரு சிறு செயலையும் விளம்பரப்படுத்தி, அதை ஓட்டாக அறுவடை செய்ய நினைக்கிறார். எப்போது, அதையெல்லாம் தன் கடமை என்று அவர் உணர்வாரோ?


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

வாசகர்கள் கருத்துகள் ( 2 )

D.Ambujavalli
மார் 01, 2025 06:52

என்னவோ கைக்காசையும், கட்சிக் காசையும் போட்டு பசியாற்றும் வள்ளலாக, குழந்தைகள் எல்லாம் தங்கள் தகப்பனெல்லாம் கையாலாகாதவர்கள் என்று இவரை அப்பா என்கிறார்கள் என்று பீற்றிக்கொள்கிறார்


Anantharaman Srinivasan
மார் 01, 2025 01:22

அற்பனுக்கு வாழ்வு வந்தால் அர்த்த ராத்திரியில் குடை பிடிப்பான் என்று சொல்வதுண்டு. கருணாநிதியே ஒரு. விளம்பர பிரியர். அவர் வழியில் ஆட்சி நடத்துபவர் வேறென்ன செய்வார்?. பட்டிதொட்டி என்று எங்கு இடம் கிடைத்தாலும் தன் போஸ்டர்முகத்தை காட்டி மக்ககளை முகம் சுளிக்க வைக்கிறார்.


அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை