வாசகர்கள் கருத்துகள் ( 1 )
கொலை, கொள்ளை, பாலியல் வன்முறை, வேங்கைவயல் போன்ற அக்கிரமங்கள் எல்லாவற்றுக்கும் பதிலளிக்க திராணியில்லாமல், இந்த 'ஹிந்தி எதிர்ப்பு', பிரதமர் மீது வீண் பழி என்று பாமர மக்களுடன் விளையாடுகிறார்கள்
ஆர்.வித்யாசாகர், அருப்புக்கோட்டையில் இருந்து அனுப்பிய, 'இ - மெயில்' கடிதம்: 'தவளை தன் வாயால் கெடும்' என்பது போல், அபத்தமாகப் பேசி சிக்கலில் மாட்டிக்கொள்வதில் உதயநிதிக்கு நிகர் எவரும் இல்லை. சனாதனம் பற்றி துடுக்காகப் பேசி, இந்திய அளவில் அசிங்கப்பட்டதை மறந்து, பிரதமர் மோடி தமிழகத்திற்கு வந்தால், 'கெட் அவுட் மோடி' என்று சொல்வோம் என்றார். அத்துடன், தைரியமிருந்தால் அண்ணாமலை, அண்ணா சாலை பக்கம் வந்து பார்க்கட்டும் என்று மிரட்டும் தொனியில் சவாலும் விடுத்துள்ளார். அரசியலில் அனுபவக்குறைவும், பேச்சாற்றல் இல்லாமையும்தான் இதற்குக் காரணம். அண்ணாதுரையின் பெயரை வைத்ததால், அண்ணா சாலை அறிவாலயத்துக்கு சொந்தமாகிவிடுமா என்ன?ஒருவரை அச்சுறுத்தும் வகையில் மிரட்டல் விடுவது, இந்திய குற்றவியல் பிரிவு,- 503-ன்படி தண்டனைக்குரிய குற்றம் என்பதை உதயநிதி அறியவில்லையா?ஒரு மாநிலத்தின் துணை முதல்வர் என்ற பொறுப்பான பதவியில் இருந்துகொண்டு, நாட்டின் பிரதமரை, 'கெட் அவுட்' என்று சொல்ல முடியுமா? எதிர்க்கட்சியாக இருந்தபோது, 'கோ பேக்' சொல்லிவிட்டு, ஆட்சியில் அமர்ந்தவுடன், அதே மோடியை வெண்குடை ஏந்தி வரவேற்றதை மறந்துவிட்டாரா?நாட்டின் பிரதமர் அரசுமுறை பயணமாக, ஒரு மாநிலத்திற்கு வரும்போது அம்மாநிலத்தின் முதல்வர் கடைப்பிடிக்க வேண்டிய, 'புரோட்டோகால்' பற்றி இவர் கேள்விப்பட்டது இல்லையா?விமான நிலையத்திற்கு சென்றுமரியாதையுடன் வரவேற்பதில் துவங்கி, வழியனுப்புவது வரை, அவருக்கு முழுமையான பாதுகாப்பை வழங்குவது அம்மாநில முதல்வரின் கடமை என்பதையாவது அறிவாரா?ராமேஸ்வரம் புதிய பாம்பன் பாலத்தை திறந்து வைக்க, விரைவில் தமிழகம் வரவிருக்கும் பிரதமர் மோடிக்கு, மாநிலத்தின் துணை முதல்வராக உதயநிதி வரவேற்பு கொடுப்பாரா இல்லை 'கெட் அவுட் மோடி' என்ற பதாகையைக் கையில் ஏந்தி, தன் எதிர்ப்பைக் காட்டுவாரா என்பதை பொறுத்திருந்து பார்ப்போம்! அரசியல் சதுரங்கம் வேண்டாம்!
ஆர்.பாபு
கிருஷ்ணராஜ், கோவையில் இருந்து அனுப்பிய, 'இ - மெயில்' கடிதம்: தேசிய
கல்வி கொள்கையை ஏற்காத மாநிலங்களுக்கு நிதி ஒதுக்குவதை நிறுத்தி வைப்பதாக
அறிவித்துள்ளது, மத்திய அரசு. பல்வேறு மாநிலங்கள் மும்மொழி கொள்கையை ஏற்று,
செயல்படுத்தி வரும் நிலையில், தமிழகத்தில் ஹிந்தி எதிர்ப்பு எனும் வெற்று
நாடகத்தை அரங்கேற்றி வருகிறது, ஆளும் அரசு. திராவிட கட்சிகள்,
துவக்க காலத்தில், மக்களை ஓட்டு வங்கிகளாக மடைமாற்றம் செய்ய, ஹிந்தி
எதிர்ப்பு எனும் ஆயுதத்தை கையிலெடுத்து, ஆட்சி அதிகாரத்தை பிடித்தன.அன்றைய
சூழலில் மொழி ஆயுதம், சாதாரண மக்களிடம் ஒரு தாக்கத்தை ஏற்படுத்தியது
உண்மைதான் என்றாலும், இன்றைய விஞ்ஞான யுகத்தில், மாணவர்கள் பல
போட்டித்தேர்வுகளை சந்திக்கின்றனர்; பணி நிமித்தமாக, நாட்டின் பல்வேறு
பகுதிகளுக்கு செல்கின்றனர். அந்த போட்டியாளர்களைக் கேளுங்கள், மும்மொழி
தேவை குறித்து...தமிழகத்தில் தனியார் பள்ளிகளில் படிக்கும்
மாணவர்களை காட்டிலும், அரசு பள்ளி மாணவர்கள் ஆண்டுதோறும் கல்வித்திறனில்
பின்னுக்கு தள்ளப்பட்டு வருகின்றனர். 'ஹிந்தி வேண்டாம்' என கோஷம்
போடும் அரசியல்வாதிகளின் வாரிசுகள் அனைவரும், தனியார் பள்ளிகளில் ஹிந்தி,
பிரெஞ்சு, ஜெர்மன் என்று பல மொழிகளை படிப்பது மொழிப்புலமையை
வளர்ப்பதற்கல்ல; எதிர்கால தேசிய, உலகளாவிய வாய்ப்புகளை எளிதில் அடைவதற்கே!அப்படி இருக்கும் போது, சாமானியனுக்கு மட்டும் அவ்வாய்ப்புகள் மறுக்கப்படுவது, மிகப்பெரிய ஏமாற்று வேலை.வகுப்பறை
கட்டடங்கள் கட்டுவதும், இருவேளை உணவளிப்பது மட்டுமே அரசு பள்ளி
மாணவர்களின் கல்வித் தரத்தை உயர்த்தி விடாது; அவர்களை போட்டி யுகத்திற்கு
ஏற்ப தயார்படுத்த வேண்டும். அதனால், கூடுதலாக ஒரு மொழியை கற்கும் வாய்ப்பை தடுக்காமல், ஏழை மாணவர்களுக்கு அந்த வாய்ப்பை உருவாக்குவதே நியாயமான செயல்!இனியும்,
ஹிந்தி எதிர்ப்பு எனும் அரசியல் நாடகத்தை அரங்கேற்றாமல், தனியார் பள்ளி
மாணவர்களுக்கு தரும் வாய்ப்பை, அரசு பள்ளி மாணவர்களுக்கும் தாருங்கள்! முதல்வர் கனவு காணும் அறிவீலிகள்!
வெ.சீனிவாசன், திருச்சியிலிருந்து அனுப்பிய, 'இ - மெயில்' கடிதம்: தேசிய கல்வி கொள்கை, பி.எம்.ஸ்ரீ., போன்ற திட்டங்களை நிறைவேற்றாத காரணத்தால், தமிழக அரசுக்கு அத்திட்டத்திற்கான நிதியை விடுவிக்கவில்லை மத்தியஅரசு. இதை வைத்து ஆளும் அரசும், அதன் கூட்டணி கட்சிகளும் தரம்தாழ்ந்த அரசியல் செய்து வருகின்றன.தேசிய கல்வி கொள்கையை பின்பற்ற கொடுக்கப்படும் நிதிக்கும், ஆசிரியர்களுக்கு கொடுக்கும் சம்பளத்திற்கும் என்ன சம்பந்தம்? நிதியை காரணம் காட்டி, பழியை மத்திய அரசு மீது போட்டு, தாங்கள் தப்பித்துக் கொள்கின்றனர்!மும்மொழி கல்வி கொள்கையில், சமஸ்கிருதம் மற்றும் ஹிந்தி படித்தே தீர வேண்டும் என்று எந்தப் பக்கத்தில் வலியுறுத்தப்பட்டுள்ளது? எதற்காக பிற மொழியை துாற்ற வேண்டும்?தாய்மொழியை நேசியுங்கள்... அதற்காக பிற மொழிகளை துாற்ற நீங்கள் யார்? இன்னும் சில வாய்ச்சொல் வீரர்கள், 'மத்திய அரசு தமிழகத்திலிருந்து வரி வசூலித்துக் கொள்கிறது; ஆனால், நிதியை விடுவிக்க மறுக்கிறது. புயல், வெள்ள நிவாரணத்திற்கு கூட கேட்ட தொகையை கொடுக்கவில்லை, பட்ஜெட்டில் தமிழகத்திற்கு ஒன்றுமில்லை' என்றெல்லாம் கூறுகின்றனர்.'மத்திய அரசு இந்தந்த திட்டங்களுக்கு இவ்வளவு நிதியை விடுவித்துள்ளது... எதற்காக நிதி கொடுக்கப்பட்டதோ, அதற்காக அவை செலவு செய்யப்படவில்லை. அவ்வாறு செலவு செய்திருந்தால், அதற்கான வெள்ளை அறிக்கை கொடுங்கள்' என எதிர்க்கட்சிகள் கேட்கின்றனவே... கொடுக்க வேண்டியது தானே?அதைவிட்டு, எதற்கு இந்த திசை திருப்பும் பிரசாரங்கள்? இது, மத்திய அரசை சாமானிய மக்கள் வெறுக்க வேண்டும் என செய்யப்படும் குள்ளநரித்தனம்!வரி பகிர்வுகள், பிற உதவிகள் அனைத்தும் அவைகளுக்கென உள்ள வழிகாட்டுதல்களின்படியே செயல்படுத்தப்படுகின்றன. மத்திய அரசே நினைத்தாலும் அதில் பாரபட்சம் காட்ட முடியாது. இந்த உண்மை புரியாத ஒரு அரசியல் தலைவர்... 'மத்திய அரசுக்கு வரி செலுத்த முடியாது என, சட்டசபையில் ஒரு மசோதாவை நிறைவேற்ற வேண்டும்' என்று கூறுகிறார்.என்ன ஓர் அபத்தம்!இவரைப் போன்ற அறிவீலிகள் தான், முதல்வர் கனவு காண்கின்றனர்!
கொலை, கொள்ளை, பாலியல் வன்முறை, வேங்கைவயல் போன்ற அக்கிரமங்கள் எல்லாவற்றுக்கும் பதிலளிக்க திராணியில்லாமல், இந்த 'ஹிந்தி எதிர்ப்பு', பிரதமர் மீது வீண் பழி என்று பாமர மக்களுடன் விளையாடுகிறார்கள்