உள்ளூர் செய்திகள்

/ தினம் தினம் / இது உங்கள் இடம் / ஒரு மி.மீ., கூட தி.மு.க., மனமிரங்காது!

ஒரு மி.மீ., கூட தி.மு.க., மனமிரங்காது!

ஆர்.ஜான் தங்கமணி, சென்னையிலிருந்து அனுப்பிய, 'இ - மெயில்' கடிதம்: 'பழைய ஓய்வூதியத் திட்டம் உள்ளிட்ட நிதிசார் கோரிக்கைகளை நிறைவேற்ற வாய்ப்பில்லைஎன்று தெரிவித்துள்ளதன் மூலம், அரசு ஊழியர்கள், ஆசிரியர்களுக்கு, தமிழக அரசு துரோகம் இழைத்துள்ளது. இதைக் கண்டித்து,2025, பிப்ரவரி 20ம் தேதி ஒரு நாள், ஒட்டு மொத்த தற்செயல் விடுப்பு போராட்டம் நடத்த திட்டமிட்டுள்ளோம்' என, தமிழக அரசு ஊழியர்கள் சங்கம் அறிவித்துள்ளது.அரசு ஊழியர்கள் துணையுடன் ஆட்சிக்கு வந்த ஸ்டாலின், இப்போது பழைய ஓய்வூதியத் திட்டத்தை நடைமுறைப்படுத்த மறுப்பதன் வாயிலாக, உண்மை முகத்தைக் காட்டியுள்ளார்.லோக்சபா தேர்தலில் அரசு ஊழியர்களின் ஓட்டுகளை வாங்கி வெற்றி பெற்ற நிலையில், இனி ஒன்றரை ஆண்டுகளுக்கு, அவர்களின் தயவு தேவையில்லை என்பதால், இப்போது துணிச்சலாக பழைய ஓய்வூதியத் திட்டத்தை செயல்படுத்த வாய்ப்பில்லை என்று கூறி இருக்கிறார்.வரும் 2026 சட்டசபை தேர்தலின் போது, 'நாங்கள் ஆட்சிக்கு வந்தால், பழைய ஓய்வூதியத் திட்டத்தை செயல்படுத்துவோம்' என, மீண்டும் வாக்குறுதி அளிப்பார்.தி.மு.க., அரசிடம் தொடர்ந்து ஏமாறுவதற்கு,ஆசிரியர்களும், அரசு ஊழியர்களும் ஏமாளிகள் அல்ல. தி.மு.க., அரசின் தொழிலாளர் விரோத செயல்பாடுகளுக்கு பழிதீர்க்கும் வகையில், வரும் சட்டசபை தேர்தலில், அரசு ஊழியர்களும், ஆசிரியர்களும் சரியான பாடம் புகட்டுவர் என, பா.ம.க., நிறுவனர் ராமதாஸ், அறிக்கை விடுத்துள்ளார்.தமிழ்நாடு அரசு ஊழியர் சங்கத்திற்கும், ராமதாசுக்கும் ஒரு நினைவூட்டல்...தி.மு.க., இது போன்ற சலசலப்புக்குஎல்லாம் அஞ்சி நடுங்கி விடாது. ஓட்டுப்பதிவு நாளன்று, 1,000 அல்லது 2,000 ரூபாயை கொடுத்தால் ஓடி வந்து ஓட்டு போடுவர் என்ற மனோதைரியம் அதற்கு உண்டு.ஒட்டு மொத்தமாக அரசு ஊழியர்களை ஓவர் நைட்டில் பணி நீக்கம் செய்து வீட்டுக்குஅனுப்பிய ஜெயலலிதாவே, மீண்டும் ஆட்சியில் அமர்ந்து விடவில்லையா?எம்.ஜி.ஆரும், சாவித்திரியும் இணைந்து நடித்த, பரிசு என்ற திரைப்படத்தில் ஒரு பாடல் வரும்...'கூந்தல் கருப்பு; குங்குமம் சிவப்பு...' என துவங்கும் அந்த பாடலில் கடைசி சரணமாக, 'என்ன வந்தாலும் எது நடந்தாலும்இணைந்திருப்பேன் நான் உன்னுடனே!' என்றும், 'துன்பம் வந்தாலும் துயரம் வந்தாலும் தொடர்ந்திருப்பேன் நான் உன்னுடனே!' என்று, இருவரும் மாறி மாறி பாடுவர்.அதுபோல, காசு கொடுத்தாலும், கொடுக்காவிட்டாலும், சரக்கும், பிரியாணியும்போட்டாலும், போடாவிட்டாலும், தலைமுறை தலைமுறையாக தி.மு.க.,வுக்கு மட்டுமே ஓட்டளிக்கும் ஒரு கூட்டம் இங்கு உண்டு.அவர்கள் மனங்களை ஆட்டவோ,அசைக்கவோ முடியவே யாராலும் முடியாது.அதனால், அரசு ஊழியர்கள் மற்றும் ஆசிரியர்கள், ஒரு நாள் ஒட்டு மொத்த தற்செயல் விடுப்பு எடுத்தாலும் சரி; வேலை நிறுத்தமே செய்யத் துணிந்தாலும் சரி... தி.மு.க., தன் நிலையில் இருந்து, ஒரு மில்லி மீட்டர் கூட மனமிரங்காது. 

மாற் றி யோசிக்கலாமே நம் அரசு?

என்.மல்லிகை மன்னன், மதுரையிலிருந்து அனுப்பிய, 'இ - மெயில்' கடிதம்: 'அரசு திட்டங்களுக்கு கருணாநிதிபெயரை வைக்காமல், வேறுயார் பெயரை வைக்க வேண்டும்?' என்று கேட்கிறார் துணை முதல்வர்உதயநிதி.தலைவர்களின் பெயர்களுக்கு பஞ்சம் ஏற்பட்டதுபோலவும், வேறு வழிஇல்லாமல் தான் கருணாநிதிபெயரை அரசு திட்டங்களுக்கு வைக்க வேண்டியகட்டாயம் ஏற்பட்டது போலவும் இருக்கிறது உதயநிதியின் பதில்.கருணாநிதி பெயரில் பஸ்நிலையம், நுாலகம், மருத்துவமனை, பெண்களுக்கான உரிமைத் தொகை... இப்படிகருணாநிதி பெயரில் அரசு கட்டடங்கள் மற்றும் திட்டங்கள் எல்லாவற்றுக்கும் பெயர் வைத்து மகிழ்ந்துவிட்டது திராவிட மாடல் அரசு.பெருந்தலைவர் காமராஜர்காலத்தில், எந்த அரசு திட்டங்களுக்கும் அவர் பெயர் சூட்டப்படவில்லை.முதன் முதலில் குழந்தைகளுக்கு மதிய உணவு வழங்கும் திட்டத்தை, காமராஜர் அமலுக்கு கொண்டு வந்தபோது, அதைதன் பெயரில் வைத்து மகிழவில்லையே? சாலைகள், அரசு கட்டடங்கள், பஸ் நிலையங்கள், விமான நிலையங்கள்,பல்கலைக் கழகங்களுக்கு,தலைவர்கள் பெயரை வைக்கும் கலாசாரம், தி.மு.க.,ஆட்சியில் தானே துவங்கியது!பிரதமர் மோடி, தான் துவக்கும் திட்டங்களுக்கு,தன் பெயரை வைத்துக் கொள்வதில்லை. 'பி.எம்., கேர்ஸ், பிரதான் மந்திரி ஆவாஸ் யோஜனா' என, பிரதம மந்திரி சொல்லைத் தான் பயன்படுத்துகிறார். பிரதமர் பதவியில் இருப்பவர் அனைவருக்கும் அது பெருமை சேர்க்கும்.பரந்த சிந்தனை இருந்தால்,இப்படியும் யோசிக்கலாம் நம் மாநில அரசு!

ஒட்டகம் புகுந்த கூடாரமானதா வி.சி., கட்சி?

என்.ஏ.நாகசுந்தரம், குஞ்சன்விளை, குமரி மாவட்டத்தில் இருந்து அனுப்பிய, 'இ - மெயில்' கடிதம்: 'கூடாரத்தில் ஒதுங்க ஒட்டகத்துக்கு இடம் கொடுத்தவன், கூடாரத்தை விட்டு வெளியேறினான்' என்று கதை சொல்வர். அது போல் ஆகிவிட்டது,விடுதலை சிறுத்தைகள்கட்சித் தலைவர் திருமாவளவன் நிலை.நாற்பது ஆண்டு காலம் விடுதலை சிறுத்தைகள் கட்சியை வளர்த்து, மக்களுக்காக குரல் எழுப்பிவரும் திருமாவளவன், தி.மு.க.,வுடன் கூட்டணி சேர்ந்த பின், மத விரோத செயல்களால் பல தவறுகளை செய்து, ஹிந்து மக்கள் மத்தியில் வெறுப்பைபெற்று வருகிறார்.அதே வேளை, சமத்துவம்என பேசும் தி.மு.க., தலைவர்களை சந்தித்து திருமாவளவன் பேசும் போது, அவருக்குஇருக்கையை கூட சமமாகதி.மு.க.,வினர் தருவதில்லை. ஆனால், எத்தனை அவமானம், அசிங்கம் தி.மு.க., தந்தாலும்,கூட்டணி உறவை முறிக்க திருமாவளவன் தயாராக இல்லை.'வி.சி., பொறுப்பாளர்கள்,தலைவர் தகுதி உணர்ந்து நடக்க வேண்டும். நமக்கு ஆட்சி அதிகாரம் வேண்டும்.நாம் தனித்தன்மையோடு நடக்க வேண்டும்' என, கட்சியினர் பேசும்போது உள்ளம் குளிர்ந்து, சரி என தலையாட்டும் திருமாவளவன். தி.மு.க., தலைவர்களை சந்தித்து பேசும்போது, அக்கட்சிக்கு எந்த நிலையிலும் வி.சி., பக்கபலமாக நிற்கும் என பேசி, கட்சித் தொண்டர்களை குழப்புகிறார்.பணம் காய்ச்சி மரமான ஆதவ் அர்ஜுனா, வி.சி., கட்சியில் சேர்ந்ததும், ஆட்சியில் பங்கு என்ற முழக்கத்தை முன்னிறுத்துகிறார். அதை, திருமாவளவன்ரசித்தாலும், தி.மு.க., பேச்சை மீற முடியவில்லை.இதனால், ஆற்றில் ஒரு கால்; சேற்றில் ஒரு கால் என்ற நிலை. இப்படி இவர் திணறுவதால், கட்சிக்குள் திருமாவளவன்கோஷ்டி - ஆதவ் அர்ஜுனாகோஷ்டி என, இரு கோஷ்டிகள் உருவாகி விட்டன.தேன்கூடாக இருந்த வி.சி., கட்சியில், ஆதவ் வருகை, ஒட்டகம் புகுந்த கூடாரமாகி விட்டதோ என்று தான் நினைக்கத் தோன்றுகிறது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

வாசகர்கள் கருத்துகள் ( 7 )

Bhaskaran
நவ 18, 2024 10:00

அரசு ஊழியர்கள் தங்கள் நடவடிக்கைகளினால் மக்கள் விரோதத்தை சம்பாதித்து வைத்துள்ளனர் எனவே இவர்களுக்கு பழைய பென்ஷன் வழங்காவிட்டால் நாட்டில் புரட்சி ஏற்படாது.


Anantharaman Srinivasan
நவ 17, 2024 23:20

தேன்கூடாக இருந்த வி.சி., கட்சி ஒட்டகம் புகுந்த கூடாரமாகி பிளவு பட்டால் நல்லதுதான். தெளிவு கிடைக்கும்.


M S RAGHUNATHAN
நவ 17, 2024 11:21

திரு ராஜாஜி அவர்கள் முதல்வராக இருந்த்போது நந்தனம் குடி இருப்பு பகுதி உருவாக்கப் பட்டது. அதிகாரிகள் அந்த அபிவிருத்தி திட்டத்திற்கு City improvement program ராஜாஜியின் பெயரை வைக்க முடிவு செய்தனர். அப்போதைய முதல்வர் ஆக இருந்த ராஜாஜியிடம் அனுமதி கேட்டனர். கோபமுற்ற ராஜாஜி வேறு பெயர் உங்களுக்கு கிடைக்க வில்லையா என்று சொல்லி அப்போதைய தமிழ் வருடமான "நந்தன" என்ற பெயரை சூட்டினார். சுதந்திர போராட்டத்தில் தீவிரமாக கலந்து கொண்டு, பிற்காலத்தில் கவர்னர் ஜெனரல் ஆக மிக உயரிய பதவி வகித்தவருக்கு தமிழ் நாட்டில் உரிய நினைவு சின்னம் கிடையாது. இப்போதைய திமுக பதவிக்கு வருவதற்கு வழி போட்டு கொடுத்தவர் அவர். இதெல்லாம் உதயநிதிக்கு எடுத்துச் சொல்ல யாரும் இல்லை. தெரிந்து கொள்ள அவருக்கும் அறிவு இல்லை. ராஜாஜி மறக்கப் பட்டது, மறைக்கப் பட்டது அவர் ஒரு பிராமணர் என்ற ஒரே காரணம்.


தர்மராஜ் தங்கரத்தினம்
நவ 17, 2024 09:00

அரசு ஊழியர்கள் தங்களால் அமைந்த அரசுதான் இந்த திமுக அரசு என்று பெருமைப்பட முடியுமா? அரசு ஊழியர்களையும், அவர்களது குடும்ப உறுப்பினர்களையும் சேர்த்தால் கூட மொத்த வாக்காளர்களில் அவர்கள் எத்தனை சதவிகிதம் இருப்பர்? அலுவலகத்திலும், வாழிடத்திலும் அரசு ஊழியர்களின் நடத்தை எப்படி ????


தர்மராஜ் தங்கரத்தினம்
நவ 17, 2024 08:54

அடிமைகளுக்கு சொர்க்க வாழ்வே இனிக்கும் ........ விசிகவுக்கு அறிவாலயமே சொர்க்கபுரி .......


தர்மராஜ் தங்கரத்தினம்
நவ 17, 2024 08:52

திராவிட மாடல் குறுகிய எண்ணம் படைத்தது என்று மல்லிகை மன்னன் அவர்களுக்குத் தெரியாதா ????


VENKATASUBRAMANIAN
நவ 17, 2024 08:24

மக்கள் திருந்தாத வரை எதையும் மாற்ற முடியாது. மக்களை இரண்டு கழகங்களும் இப்படி ஆக்கிவிட்டார்கள்.இதுதான் திராவிட மாடல். இதை உடைக்க வேண்டும். எத்தனை காலம்தான் ஏமாற்றுவார்கள் இந்த நாட்டிலே.


அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை