அ.சேகர்,
கடலுாரில் இருந்து அனுப்பிய, 'இ - மெயில்' கடிதம்: மாணவர்களுக்கு
ஒழுக்கத்துடனான கல்வியை போதிக்க முடியாமல், ஆசிரியர்களின் கைகள் என்று
கட்டப்பட்டதோ, அன்று முதல் மாணவர்களின் ஒழுக்கம் கேள்விக்குறியாக
மாறிவிட்டது. அதிலும், அரசுப் பள்ளி மாணவர்களின் பொது ஒழுக்கம் மிகவும் மோசமான நிலையில் சென்று கொண்டிருக்கிறது. இதற்கிடையே தற்போது ஜாதிய உணர்வும் தலை துாக்கியுள்ளது. தங்கள் ஜாதியை
அடையாளம் காட்டும் விதமாக, கைகளில் வண்ணக் கயிறுகளை கட்டிக் கொண்டு
பள்ளிக்கு வருகின்றனர். இதனால், இரண்டு பிரிவாக பிரிந்து, பள்ளி
வளாகத்திலேயே ஒருவரை ஒருவர் அடித்துக் கொள்கின்றனர். சில நேரங்களில்,
அச்சண்டை உயிர் பலியில் முடிந்து விடுகிறது. இப்படி ஒருபுறம் ஜாதிய எண்ணங்களாலும், மற்றொருபுறம் போதையாலும் அரசு பள்ளி மாணவர்கள் சீரழிகின்றனர். சமீபத்தில், தஞ்சாவூர் மாவட்டம் பட்டீஸ்வரம் அரசு மாதிரி
மேல்நிலைப்பள்ளியில், பிளஸ் 2 மாணவர் கவியரசனை, பிளஸ் 1 மாணவர்கள்
கட்டையால் தாக்கியதில், அம்மாணவர் பலியானார். இறந்த மாணவனின்
தாயார், அப்பள்ளி அருகே கஞ்சா விற்பனை நடப்பதாகவும், அவரது மகனை கொலை செய்த
மாணவர்கள் கஞ்சா பழக்கம் உள்ளவர்கள் என்றும் கூறியுள்ளார். இன்று
ஒவ்வொரு குடும்பத்திலும் குறைந்தபட்சம் ஒருவர், குடிப்பழக்கத்திற்கு
அடிமையாகி விட்ட நிலையில், தற்போது, மாணவர்களும் பலிகடாவாகி வருகின்றனர். அதிலும், மாணவர்கள் வாங்கி உபயோகப்படுத்தும் வகையில், குறைந்த விலையில்
பள்ளி அருகிலேயே போதைப் பொருட்கள் கிடைப்பதால், மாணவர.ேகள் எளிதாக
போதைக்கு அடிமையாகி விடுகின்றனர். அதனால் தான், அரசுப் பள்ளி
மாணவர்களுக்கு அரசு பல்வேறு சலுகை அறிவித்து செயல்படுத்தினாலும்,
பெரும்பாலான பெற்றோர், தாங்கள் கஷ்டப்பட்டாலும் பரவாயில்லை; தங்கள்
பிள்ளைகள் நல்லதொரு சூழ்நிலையில் கல்வி பயில வேண்டும் என்று எண்ணி, தங்கள்
சக்திக்கு மீறி செலவு செய்து தனியார் பள்ளிகளில் படிக்க வைக்கின்றனர். இதனால், ஆண்டுதோறும் அரசு பள்ளியில் சேரும் மாணவர்களின் எண்ணிக்கை வெகுவாக குறைந்து வருகிறது. அரசும், மாணவர் சேர்க்கை இன்மையை காரணம் காட்டி, பள்ளிகளுக்கு மூடுவிழா நடத்தி வருகிறது. எனவே, இனியாவது மாணவர்கள் விஷயத்தில் திராவிட மாடல் அரசு, அரசியலை
திணிக்காமல், நீதி போதனை, யோகா வகுப்புகளையும், விளையாட்டு, என்.சி.சி., -
என்.எஸ்.எஸ்., பயிற்சிகளை கட்டாயமாக்க வேண்டும். பள்ளி ஆரம்பிக்கும்போது இறை வணக்கமும், பள்ளி முடியும் போது தேசியகீதமும் பாட வேண்டும். பள்ளிகள் ஏட்டுக் கல்விக்கு கொடுக்கும் முக்கியத்துவத்தை விட, நற்பண்பு
நிறைந்த மாணவர் சமுதாயத்தை உருவாக்குவதில் கவனம் செலுத்த வேண்டும்.
ஆசிரியர்களின் முயற்சிக்கு பெற்றோரும், அரசும் முழு ஒத்துழைப்பு தந்தால்
மட்டுமே, கவியரசன் போன்ற மாணவர்கள், சக மாணவர் களால் கொலையாவது
தடுக்கப்படும்!இவர்கள் ஒப்பனை செய்வது யாருக்காக?
கே.ரங்கராஜன், சென்னையில் இருந்து அனுப்பிய, 'இ - மெயில்' கடிதம்: 'உள்துறை அமைச்சர் அமித் ஷா மீதான பயத்தை போக்கத்தான், பழனிசாமி, 'மேக்கப்' போட்டு திரிகிறார்' என்று கூறியுள்ளார், தி.மு.க., அமைப்பு செயலர், ஆர்.எஸ்.பாரதி. 'துாண்டில் போட்டால், தக்கை மேலேயே கண்ணு இருக்கணும்' என்பது போல், தமிழகத்தில் இருந்து, தி.மு.க., ஆட்சியை அகற்ற, மேக்கப் போட்டு காரியம் சாதிக்க நினைக்கிறார், பழனிசாமி. அவராவது காரியம் சாதிக்கத் தான் மேக்கப் போடுகிறார்; ஆனால், தி.மு.க., முதல்வர் ஸ்டாலினோ, தன் ஆட்சியின் மோசமான நிர்வாகத் திறனை மறைக்க அல்லவா மேக்கப் போட்டு, போட்டோ ஷூட் நடத்துகிறார்! கடந்த சட்டசபை தேர்தலுக்கு முன், கிராமம்தோறும் கூட்டம் போட்டு, மோடி மஸ்தான் வித்தைக்காரர் போல், 'மக்களே... உங்கள் புகார்களை எல்லாம் இந்த பெட்டியில் போட்டால், நான் ஆட்சிக்கு வந்த, 100 நாட்களில் அத்தனையும் தீர்க்கப்படும்' என்று வித்தை காட்டினார், ஸ்டாலின். அதுமட்டுமா... 'தி.மு.க., உறுப்பினர் அட்டையுடன், எவர் தயவுமின்றி, நேராக கோட்டையில் வந்து என்னை சந்திக்கலாம்' என்று, 'நேக்காக' பேசி, தி.மு.க., உறுப்பினர் எண்ணிக்கையை அதிகரிக்க போட்டாரே ஒரு நாடகம்... அதைவிடவா பழனிசாமி நடித்து விடப் போகிறார்? அதைவிட, ஏழை பங்காளன் போன்று, சாலை யோரத்தில் விற்கப்பட்ட பதநீரை ப ருகி, 'இனிப்பாக இருக்கிறதே... இதில் சர்க்கரை போடுவீர்களா?' என்று கேட்டு, நடிப்பின் உச்சத்தையே ஸ்டாலின் தொட்டு நின்றதை ஆர்.எஸ்.பாரதி மறந்து விட்டாரா? முதல்வர் ஒப்பனை செய்து கொள்வதில் மக்களுக்கு எந்த பிரச்னையும் இல்லை; அதே நேரம், அவர் ஒப்பனையில் மட்டும் கவனம் செலுத்தாமல், தமிழக நலனினும் கவனம் செலுத்தினால் நல்லது!
மத்திய அரசு நடவடிக்கை எடுக்குமா?
ஸ்ரீனிவாச சர்மா,ஹைதராபாதில் இருந்து அனுப்பிய, 'இ - மெயில்' கடிதம்: மலைகளை வணங்கி, காடுகளை பாதுகாக்கும் கலாசாரத்தைக் கொண்டது ஹிந்துக்களின் சனாதன தர்மம். அந்நியர்கள் நம் நாட்டை ஆட்சி செய்த போது, ஹிந்து தர்மத்தின் பல மரபுகள் திட்டமிட்டே அழிக்கப்பட்டன. எதிரிகள் செய்த பணியை இப்போது தி.மு.க., அரசு செய்து வருகிறது. அதன் முதல்படிதான் கோவில்களை அழிப்பது! தி.மு.க., ஆட்சிக்கு வந்த நான்கரை ஆண்டுகளில், 200க்கும் மேற்பட்ட கோவில்களை இடித்துள்ளது. அவர்களால் அழிக்க முடியாத கோவில்களை அறநிலையத் துறை என்ற பெயரில் கைப்பற்றி, கோவிலின் ஆகம விதிகளையும், அதன் தொன்மையையும் அழித்து வருகின்றனர். கோவில் திருப்பணிக்காக பக்தர்கள் கொடுக்கும் நிதியையும், உண்டியல் பணத்தையும் சுரண்டி, கோவில் காரியங்களை தவிர்த்து, அனைத்து வகையிலும் செலவு செய்கின்றனர். பல கோவில்கள் ஒரு வேளை பூஜைக்கும் வழியற்று, பூட்டிக் கிடக்கையில், இவர்கள், கோவில் பணத்தில் சொகுசு காரில் பவனி வருகின்றனர். இப்போது, திருப்பரங்குன்றம் தீபத்துாணில் தீபம் ஏற்றலாம் என்று உயர் நீதிமன்றம் உத்தரவிட்டும், அதை செயல்படுத்த மறுத்து மேல் முறையீடு செய்துள்ளது, அறநிலையத் துறை. சாதாரண மக்களின் கடைசி புகலிடம் நீதிமன்றம். ஆனால், இங்கு நீதிபதியின் தீர்ப்பிற்கே மரியாதை இல்லை எனும் போது, பாதிக்கப்படும் மக்கள் நீதி வேண்டி எங்கே செல்வர்? தீபத்துாணில் தீபம் ஏற்றலாம் என்று தீர்ப்பு வழங்கியதற்காக, நீதிபதியை பதவி நீக்கம் செய்ய துடிக்கும் தமிழக அரசை, எல்லாருக்குமான அரசாக எப்படி ஏற்க முடியும்? எனவே, தங்களுக்கு சாதகமாக தீர்ப்பு வழங்காத நீதிபதியை பதவி நீக்கம் செய்ய தி.மு.க., நினைப்பது போல், மாநிலத்தின் பெரும்பான்மை ஹிந்து மக்கள், இந்த ஆட்சியை கலைக்க வேண்டும் என்று விரும்புகின்றனர். மத்திய அரசு நடவடிக்கை எடுக்குமா?