ஆர்.எஸ்.மாணிக்கம்,
சென்னையில் இருந்து எழுதிய, 'இ - மெயில்' கடிதம்: வங்கிகள் வழங்கும்
காசோலைகள் மற்றும் டிமாண்ட் டிராப்ட் ஆகியவைகள் கூட குறிப்பிட்ட
காலத்திற்கு பின் செல்லாது.ஆனால், மத்திய அரசு அச்சடித்து
வழங்கும் ரூபாய் நோட்டுக்களுக்கு காலாவதி தேதியே கிடையாது. இதனால்,
குறிப்பிட்ட சிலரிடம் கருப்பு பணம் அளவுகடந்து சேர்ந்து, நாட்டின்
பொருளாதாரத்தையே உரசிப் பார்க்கிறது.அதை ஒழித்துக் கட்ட, 2016ல்
500 மற்றும் 1000 ரூபாய் நோட்டுகள் செல்லாது என்று திடீரென்று அறிவித்தார்,
பிரதமர் மோடி. அதனால் கருப்பு பணத்தை பதுக்கி வைத்திருந்தோர், பணத்தை என்ன
செய்வதென்று தெரியாமல், பைத்தியம் பிடித்தது போலாயினர். தற்போது,
ஆந்திர முதல்வர் சந்திரபாபு நாயுடு,'நாட்டில் கருப்பு பணத்தை ஒழிக்க, 500,
1000 ரூபாய் நோட்டுகளை திரும்பப் பெறும்படி, கடந்த காலத்தில் மத்திய
அரசிடம் வலியுறுத்தினேன். 2016ல் அவற்றை திரும்பப் பெற்று, புதிதாக,500
மற்றும் 2000 ரூபாய் நோட்டுகளை அறிமுகம் செய்தது மத்திய அரசு. 'தற்போது,
2000 ரூபாய் நோட்டுகள் புழக்கத்தில் இல்லை. 'டிஜிட்டல்' பரிவர்த்தனைகள்
அதிகரித்து விட்டதால், அதிக மதிப்புடைய ரூபாய் நோட்டுகளுக்கு அவசியம்
ஏற்படவில்லை. இதை மனதில் கொண்டு, புழக்கத்தில் உள்ள, 500 ரூபாய்
நோட்டுகளையும் மத்திய அரசு திரும்பப் பெற வேண்டும். கருப்பு பணத்தை
ஊக்குவிப்பதை தெலுங்கு தேசம் கட்சி ஒருபோதும் ஆதரிக்காது' என்று அவரது
கட்சி மாநாட்டில் பேசியுள்ளார்.கருப்பு பணத்தை ஒழிக்க, மத்திய அரசு அவ்வப்போது ரூபாய் நோட்டுகளை திரும்பப் பெற வேண்டியதில்லை.தற்போது,
அரசு அச்சிட்டு வெளியிடும் நாணயங்கள் மற்றும் ரூபாய் நோட்டுகள்
அனைத்திலும், அவை தயாரான ஆண்டு பொறிக்கப்பட்டு வெளியிடப்படுகின்றன. அதன்
அடிப்படையில், ரூபாய் நோட்டை அச்சிடும் போதே, அது காலாவதி ஆகும் ஆண்டையும்
அறிவித்து விடலாம். குறிப்பிட்ட கால அவகாசத்திற்கு மேல் அந்த ரூபாய்
நோட்டுகள் செல்லுபடியாகாது என்பதால், அவை பதுக்கப்படுவதும், கருப்பு பணமாக
உருமாறுவதும் முற்றிலும் தவிர்க்கப்படும்.காலக்கெடு முடிவதற்குள்
அரசு அச்சிட்டு வெளியிட்ட அத்தனை ரூபாய் நோட்டுகளும், அரசுக்கே வந்து
சேர்ந்து விடும். நாட்டில் கருப்பு பண புழக்கமே இருக்காது. மத்திய அரசு ஆலோசிக்குமா? மக்கள் நலனில் காட்டுங்கள் அக்கறையை!
என்.ராமகிருஷ்ணன், பழனி யில் இருந்து எழுதுகிறார்:பொள்ளாச்சி பாலியல் குற்றவாளிகள் ஒன்பது பேருக்கு சாகும் வரை சிறை தண்டனை விதித்து தீர்ப்பளித்துள்ளது, நீதிமன்றம். முதல்வர் ஸ்டாலினோ, இந்த தீர்ப்பே இவரால் தான் கிடைத்தது போன்று பெருமைப்படுகிறார். ஒருவேளை குற்றவாளிகளுக்கு குறைந்தபட்ச தண்டனையோ, விடுதலையோ கிடைத்திருந்தால், அதற்கும் கூட உரிமை கொண்டாடியிருப்பார். நீதிபதிகளை தன் ஏவலாளிகளாக நினைத்துக் கொண்டார் போலும்!மேடைகளில் பெண் களை மிகவும் கேவலமாக பேசி வருபவர்கள் தான் தி.மு.க.,வினர். எதிர்க்கட்சி தலைவராக இருந்த ஜெயலலிதாவை சட்டசபையில் தாக்கியவர்கள், நடிகை குஷ்பூவை ஆபாசமாக பேசியவர்கள், இப்போது பெண்களுக்கு வக்காலத்து வாங்குகின்றனர். இதில் பொய் பேசுவது பழனிசாமிக்கு கைவந்த கலை என்கிறார், ஸ்டாலின். செந்தில் பாலாஜியின் தம்பி ஒன்றரை ஆண்டுகளாக தலைமறைவாக இருந்தபோது, அவருக்கு பாதுகாப்பு கொடுத்தது யார்? இப்போது எதற்காக சரணடைந்தார்? ஸ்டாலின் பதில் சொல்வாரா?பழனிசாமி டில்லிக்கு சென்றதை குறை கூறியவர், ரெய்டு நடந்த அடுத்தநாளே ஜெகத்ரட்சகன் எம்.பி.,யை அழைத்துக் கொண்டு நீர்வளத் துறை அமைச்சர் துரைமுருகன் டில்லி சென்றாரே... எதற்காக சென்றார்?இவரது மருமகன் சபரீசன் அடிக்கடி வெளிநாடு செல்கிறாரே... அந்த காரணத்தை வெளிப்படையாக ஸ்டாலின் கூறுவாரா? இல்லாதவனுக்கு வீடு தான் உலகம்; இவர்களை போன்ற உல்லாச பேர்வழிகளுக்கு உலகமே வீடு தான். அடுத்து கோடநாடு வழக்கு குறித்து பேசுகின்றனர். அந்த வழக்கை சந்திக்க தயார் என்று பழனிசாமி பலமுறை கூறி விட்டார். ஆறுமுகசாமி ஆணையம் அரசிடம் அறிக்கையை சமர்ப்பித்து இரண்டு ஆண்டுகள் ஆகிவிட்டன. இன்னும் ஏன் வழக்கை கிடப்பில் போட்டு உள்ளது தி.மு.க., அரசு? எனவே, மத்திய அரசை விமர்சிப்பதிலும், பழனிசாமியை பழி வாங்குவதிலும் காட்டும் அக்கறையில், ஒரு சதவீதமாவது மக்கள் நலனில் தி.மு.க., அரசு செலுத்தட்டும்! அதிரடி நடவடிக்கை வேண்டும்!
அ.குணசேகரன், வழக்கறிஞர், புவனகிரியில் இருந்து அனுப்பிய, 'இ - மெயில்' கடிதம்: இஸ்லாமிய நாடான குவைத்தில், சமீபத்தில், 26,000 பெண்கள் உட்பட மொத்தம், 37,000 பேரின் குடியுரிமையை, அந்நாட்டு மன்னர் ஷேக் மெஷால் அல் - அஹ்மத் அல் - சபா அதிரடியாக ரத்து செய்துள்ளார். மன்னரின் இந்த உத்தரவுக்கு முன் வரை, குவைத் தந்தைக்கு பிறந்தவர்களுக்கு, அரசியல், ஓட்டுரிமை என பல சலுகைகளை வழங்கி வந்தது, அந்நாட்டு அரசு. இதனால், பிற இஸ்லாமிய நாட்டு பெண்கள், குவைத் ஆண்களை மணந்து அந்நாட்டு பிரஜைகளாக மாறினர்.தற்போது, இவர்களின் குடியுரிமை ரத்து செய்யப்பட்டு, அவர்கள் நாட்டிற்கு திருப்பி அனுப்பப்படுகின்றனர்.'மண்ணின் மைந்தர்களுக்கு கிடைக்கும் வாய்ப்புகள், வந்தேறியவர்களால் பறிபோவதை இனியும் ஏற்றுக்கொள்ள முடியாது' என்று இந்த அதிரடிக்கு காரணம் கூறுகிறார் மன்னர். ஆனால், நம் நாட்டிலோ சட்ட விரோதமாக குடியேறியுள்ள பல லட்சம் பாகிஸ்தான், ஆப்கானிஸ்தான் மற்றும் வங்கதேசத்தினர் போலி ஆவணங்கள் வாயிலாக, நம்மிடையே இரண்டறக் கலந்து வசித்து வருகின்றனர். நமக்கு கிடைக்க வேண்டிய வேலை வாய்ப்புகள், அரசின் சலுகைகள் இவர்களால் பங்கிடப்படுகின்றன. அத்துடன், சட்ட விரோதம் மற்றும் மத கலவரத்தை துாண்டும் குற்றச் செயல்களில் ஈடுபட்டு, அதில் குளிர் காய்கின்றனர். இதை கருத்தில் கொண்டே குடியுரிமை சட்ட திருத்த மசோதாவை மத்திய அரசு கொண்டு வந்துள்ளது. இந்நிலையில், பாகிஸ்தானுக்கு எதிரான சிந்துார் ஆப்பரேஷனுக்கு பின், நாடு முழுதும் போலி ஆவணங்கள் வாயிலாக, இங்கு வாழ்ந்து வரும் அண்டை நாட்டினரை கண்டறிந்து, வெளியேற்றி வருகிறது, மத்திய அரசு. ஆனால், இங்கு ஓட்டு வங்கி அரசியல் செய்வோர், அவர்களுக்கு ஆதரவாக குரல் கொடுப்பதும், அடைக்கலம் கொடுத்தும் வருகின்றனர். அண்டை நாட்டினரை வெளியேற்ற ஒத்துழைப்பு கொடுக்க மறுத்தால், அரசியலமைப்பு சட்டம், 356யை பயன்படுத்தி, மாநில அரசை கலைக்கவும் மத்திய அரசு தயங்க கூடாது!