எஸ்.ஸ்ரீனிவாசன், சென்னையில் இருந்து அனுப்பிய, 'இ - மெயில்' கடிதம்: தமிழகத்தில் உள்ள ஒரு மருந்து ஆலையிலிருந்து தயாரிக்கப்பட்ட குழந்தைகளுக்கான இருமல் மருந்தை குடித்து, மத்திய பிரதேசத்தை சேர்ந்த, 23 குழந்தைகள் உயிரிழந்துள்ளனர். இந்த மருந்து ஆலை, தமிழக சுகாதாரத் துறையினரால் சரியாக ஆய்வு செய்யப் படாத காரணத்தினாலேயே உயிரிழப்புகள் ஏற்பட்டுள்ளன. இதற்கு பொறுப்பேற்க வேண்டிய சுகாதார துறை அமைச்சரோ, இந்த ஆலைக்கு, அ.தி.மு.க., ஆட்சிக் காலத்தில் லைசன்ஸ் கொடுக்கப்பட்டதாக கூறுகிறார். எவருடைய ஆட்சிக் காலத்தில் ஆலை துவங்கப்பட்டிருந்தாலும், அதை ஆய்வு செய்ய வேண்டியது சுகாதாரத் துறையின் வேலை தானே? தன் கடமையை சரிவர செய்ய தவறியதுடன், தன் தவறுக்கு அடுத்தவரை பொறுப்பாளி ஆக்குவது எந்த வகையில் சரியாகும்? அதேபோன்று, ஏழை நெசவுத் தொழிலாளர்களின் வறுமையை பயன்படுத்தி, அவர்களது கிட்னி திருடப்பட்ட போதும், சம்பந்தப்பட்டவர்கள் மீது நடவடிக்கை எடுப்பதற்கு பதில், 'இது கிட்னி திருட்டு அல்ல; கிட்னி முறைகேடு' என்று பொருள் விளக்கம் கூறுகிறார், சுகாதார துறை அமைச்சர். இப்படி அர்த்தம் அற்ற விளக்கம் கூறுவ தற்கும், தன் தவறை திசை திருப்புவதற்கும் தான் திராவிட மாடல் அரசு, சுகாதார துறை அமைச்சர் பதவியில் சுப்பிரமணியத்தை அமர்த்தி உள்ளது போலும்! சுகாதார துறை தான், இப்படி கோமா நிலையில் இருக்கிறது என்றால், தொழில்துறையோ நாளொரு மேனியும் பொழுதொரு வண்ணமுமாக பொய்யில் திளைத்துக் கொண்டிருக்கிறது. 'பாக்ஸ்கான்' என்ற கம்பெனி தமிழகத்தில், 15,000 கோடி ரூபாய் முதலீடு செய்ய உள்ளதாகவும், அதன் வாயிலாக, ஆயிரக்கணக்கான இளைஞர்களுக்கு வேலைவாய்ப்பு கிடைக்கும் என்று கூறினார், தொழில் துறை அமைச்சர் ராஜா. ஆனால், அக்கம்பெனியோ, 'நாங்கள் அப்படி எந்த புதிய முதலீடும் தமிழகத்தில் செய்ய பேச்சுவார்த்தை நடத்தவில்லை' என்று கூறிவிட்டது. இது குறித்து எதிர்க்கட்சிகள் கேள்வி கேட்டவுடன், 'இது அந்த கம்பெனி அல்ல; அதை சார்ந்து இயங்கும் வேறொரு கம்பெனி' என்று காற்றில் கம்பு சுற்றுகிறார், தொழில் துறை அமைச்சர். 'அப்படியெனில், தமிழகத்திற்கான தொழில் முதலீடுகள் குறித்து வெள்ளை அறிக்கை வெளியிடுங்கள்...' என்று எதிர்க்கட்சி தலைவர் கேட்டால், ஒரு வெள்ளை காகிதத்தை காட்டி, 'இதுதான் வெள்ளை அறிக்கை...' என்று கூறி, எதிர்கட்சித் தலைவரை கேலி செய்கிறார். இந்த கேலிக் கூத்தை எல்லாம் மக்கள் பார்த்துக் கொண்டிருக்கின்றனர் என்ற எண்ணம் இல்லாமல், சபையின் மாண்பை இப்படி சந்தி சிரிக்க வைக்கின்றனர், தி.மு.க., அமைச்சர்கள். பத்து ஆண்டுகள் வனவாசம் இருந்ததை மறந்து, ஆட்சியில் இருக்கும் ஆணவத்தில் ஆடுகின்றனர், தி.மு.க., அமைச்சர்கள். காலையில் கிழக்கே உதிக்கும் சூரியன் தான், இரவானதும் மறைந்து விடுகிறது. எனவே, இதுபோன்ற ஆணவமான செயல்கள், நிரந்தர வனவாசத்திற்கு கொண்டு சென்று விடும் என்பதை திராவிட மாடல் அரசு மறந்து விடக் கூடாது! மக்கள் செல்வாக்கு எப்படி கிடைக்கும்? பி.என்.கபாலி, சென்னையில் இருந்து
அனுப்பிய, 'இ - மெயில்' கடிதம்: 'தமிழ் மாநில காங்கிரஸ் கட்சி
பொதுக்கூட்டம் நடத்த ஓர் அறையே போதுமானது...' என்று கூறி, அக்கட்சியை கேலி
செய்திருந்தார், தமிழக நீர்வளத் துறை அமைச்சர் துரைமுருகன். இதற்கு கடும் எதிர்ப்பு தெரிவித்திருந்தனர், த.மா.கா., கட்சியினர். பெரும்பாலும் தி.மு.க., மூத்த தலைவர்கள், வாய் கொழுப்பு, ஆணவம்
மிக்கவர்கள். அதனால், துரைமுருகன் இப்படி நக்கலாக பேசியதில் எந்த
ஆச்சரியமும் இல்லை. அதேநேரம், த.மா.கா., மக்கள் செல்வாக்கற்ற கட்சி என்பதை எவராலும் மறுக்க முடியாதே! காங்கிரசிலிருந்து ஒரே சமயத்தில் பிரிந்த கட்சிகள், த.மா.கா., மற்றும் மே.வங்கத்தில் திரிணமுல் காங்கிரஸ் கட்சி! ஆங்கில எழுத்துக்களில், டி.எம்.சி., என்று பொது பெயர் கொண்டவை. ஆனால்,
வங்காள, டி.எம்.சி., மிகப்பெரிய வளர்ச்சி கண்டு, 15 ஆண்டுகளாக ஆட்சி
செய்து வருகிறது. தமிழக டி.எம்.சி.,யோ ஒரு 'லெட்டர் பேடு' கட்சியாக சுருங்கிப் போனது. காரணம், இக்கட்சிகளை துவக்கியவர்களின் தலைமைப் பண்பில் இருந்த வேறுபாடுதான். திரிணமுல் காங்., தலைவி மம்தா பானர்ஜி வீரமும், போராட்ட குணமும், அரசியல் தெளிவும், சாணக்கியத்தனமும் நிறைந்தவர். கடந்த 1977 முதல், 30 ஆண்டுகளுக்கும் மேலாக மே.வங்கத்தில் கோலாச்சிய
மார்க்சிஸ்ட்களை தோற்கடித்தது மட்டுமின்றி, வேரோடு பிடுங்கியும் எறிந்து
விட்டார். அதே சமயம், தமிழகத்தில் கட்சி ஆரம்பித்த
ஜி.கே.மூப்பனாரோ, எந்த அரசியல் சாமர்த்தியமும், தொலை நோக்கும், போராட்ட
குணமும் இல்லாதவராக, 'வழவழ கொழகொழ'வென்று கட்சி நடத்தினார். எதற்காக, கட்சி ஆரம்பித்தார் என்றே தெரியவில்லை. காரணம், எந்த காங்கிரஸ்
கட்சியை எதிர்த்து, 1996ல் புதிதாக கட்சி துவக்கினாரோ, அக்கட்சியுடன் தான்
ஒட்டிக்கொண்டு திரிந்தார். மத்தியில், வாஜ்பாயின் பா.ஜ., அரசு
ஆட்டம் கண்டபோது, 'பா.ஜ., மதவாத கட்சி' என்ற அர்த்தமற்ற வாதம் பேசி,
அ.தி.மு.க., - காங்., கட்சிகளுடன் சேர்ந்து வாஜ்பாய் அரசை கவிழ்த்தார். அப்போது, வாஜ்பாய் அரசை காப்பாற்றி இருந்தால், தன் கட்சியை முன்னேற்ற பாதையில் கொண்டு சென்றிருக்க முடியும். அதேநேரம், மம்தா பானர்ஜியோ, பா.ஜ., அரசில் சேர்ந்து, ரயில்வே துறை
அமைச்சராகி, மேற்கு வங்கத்திற்கு பல திட்டங்களை கொண்டு வந்து, அதன் வாயிலாக
மக்களின் மனதில் இடம் பிடித்து, தான் அதிகாரத்திற்கு வந்தால்
மே.வங்கத்திற்காக என்னவெல்லாம் சாதித்துக் காட்ட முடியும் என்று
அவர்களுக்கு உணர்த்தினார். இந்த தெளிவெல்லாம் மூப்பனாருக்கு
இருந்ததே இல்லை. பா.ஜ., படிப்படியாக வளர்ந்து வருவதையும், காங்., தேய்ந்து
வருவதையும் கணிக்க தவறினார். அவர் நல்லவர் தான்; ஆனால், அரசியலில் வல்லவராக இல்லை. விளைவு... தமிழ் மாநில காங்கிரஸ் இன்று சவலை குழந்தையாக உள்ளது. எனவே, துரைமுருகன் அக்கட்சி குறித்து கூறியதில் எந்த தவறும் இல்லை. இன்று எண்ணற்ற லெட்டர் பேடு கட்சிகள் இருப்பது போன்று தான், த.மா.கா.,வும்! ஜி.கே.வாசன் மத்தியில் பதவி பெறுவதற்காகவே இயங்கிக் கொண்டிருக்கும் கட்சிக்கு மக்கள் செல்வாக்கு எங்கிருந்து வரும்?