கரை சேர முடியாது!
வெ.சீனிவாசன், திருச்சியில் இருந்து அனுப்பிய, ‘இ – மெயில்’ கடிதம்: தமிழக சட்டசபை தேர்தலில், தி.மு.க., தோற்றவுடன், அதன் வெகுநாள் கூட்டாளியான காங்கிரஸ், தி.மு.க.,வை கைகழுவி, த.வெ.க.,வுக்கு ஆதரவு கரம் நீட்டி, இரண்டு அமைச்சர் பதவிகளை பெற்றுள்ளது. இதை தாங்க முடியாத தி.மு.க., தேசிய அரசியலில் காங்கிரசை தனிமைப்படுத்த, காங்கிரஸ் அல்லாத, ‘இண்டி’ கூட்டணி கட்சிகளை ஒன்றிணைத்து, மூன்றாவது அணி அமைக்க நினைத்தது. இதற்காக, தி.மு.க., – எம்.பி., கனிமொழி, மே.வங்க திரிணமுல் காங்கிரஸ் தலைவி மம்தா பானர்ஜி, தேசியவாத காங்., சுப்ரியா சூலே, சிவசேனா கட்சி தலைவர் உத்தவ் தாக்கரே, சமாஜ்வாதி கட்சி அகிலேஷ் யாதவ் போன்றோரை சந்தித்து பேச்சு நடத்தினார். அவர்கள் நிர்தாட்சண்யமாக மறுத்து விட்டனராம். காரணம், தி.மு.க.,வின் ஹிந்து விரோத செயல்பாடுகளும், சனாதன எதிர்ப்பு பேச்சுகளும் தான்! ஹிந்து விரோத அரசியல் தமிழகத்திற்கு வெளியே எடுபடாது என்பதற்கு, மூன்றாவது அணியை உருவாக்குவதில், தி.மு.க., விற்கு கிடைத்த இந்த தோல்வியே சான்று! இதிலிருந்து, தமிழகத்திற்கு வெளியே, சனாதன தர்மத்தை, ஹிந்துக்களை அவமதித்து விட்டு, அவ்வளவு எளிதாக தேசிய அரசியலில் கோலோச்சி விட முடியாது என்பதை தி.மு.க., மறந்து விடக் கூடாது. இனியும் தன் பழைய நிலைப்பாட்டிலேயே இருந்தால், தி.மு.க., தமிழகத்தில் கூட கரை சேர முடியாது!