உள்ளூர் செய்திகள்

/ தினம் தினம் / இது உங்கள் இடம் / சரோஜா தேவியை மறக்கலாமா?

சரோஜா தேவியை மறக்கலாமா?

டி.ஈஸ்வரன், சென்னையில் இருந்து அனுப்பிய, 'இ - மெயில்' கடிதம்: 'கன்னடத்து பைங்கிளி' என்று ரசிகர்களால் அன்போடு அழைக்கப்பட்ட நடிகை சரோஜா தேவி மறைந்த செய்தி, எம்.ஜி.ஆரின் தொண்டர்களுக்கு மிகவும் வேதனையாக இருந்தது. பெங்களூரு சென்று அவருக்கு இறுதி அஞ்சலி செலுத்த முடியாத ஏக்கத்தை, 'தினமலர்' நாளிதழ் தீர்த்து வைத்தது. கடந்த 1958ல் வெளியான, நாடோடி மன்னன் திரைப்படத்தின் பிற்பகுதியில் எம்.ஜி.ஆருக்கு ஜோடியாக அறிமுகமான சரோஜா தேவி, 1967ல் வெளியான, அரச கட்டளை திரைப்படத்தின் -முற்பகுதியில் மட்டும் எம்.ஜி.ஆருக்கு ஜோடியாக நடித்து, தன் கலைப் பயணத்தை முடித்துக் கொண்டார். இப்படி, 26 திரைப்படங்களில், எம்.ஜி.ஆருக்கு ஜோடியாக நடித்த சரோஜா தேவிக்கு, இறுதி அஞ்சலி செலுத்த அ.தி.மு.க.,வினர் எவரும் செல்லாதது வருத்தமே! கட்சி பொது-ச்செயலர் பழனிசாமி இரங்கல் செய்தியுடன் முடித்துக் கொண்டார். தற்போதுள்ள அ.தி.மு.க.,வினருக்கு எம்.ஜி.ஆரின் எண்ணங்கள் எத்தகையது என்பது தெரியாது என்றாலும், சென்னை முன்னாள் மேயர் சைதை துரைசாமி போன்றோருக்குமா தெரியாது? ஒருவர் கூட இறுதி அஞ்சலியில் பங்கேற்கவில்லையே? எம்.ஜி.ஆர்., இரண்டாவது முறை உடல் பரிசோதனைக்காக அமெரிக்கா சென்றிருந்த சமயம், சரோஜா தேவியின் கணவர் ஹர்ஷா காலமானார். சென்னை வந்தவுடன் இச்செய்தி அறிந்த எம்.ஜி.ஆர்., பெங்களூரு செல்ல தயாரானார். மருத்துவர்கள் தடுத்தபோது, 'எனக்கு எது நடந்தாலும் பரவாயில்லை; நான் உடனே பெங்களூரு செல்ல வேண்டும். அதற்கு ஏற்பாடு செய்யுங்கள்' என உத்தரவிட்டார். அதன்படி, பெங்களூரு சென்று சரோஜா தேவிக்கு ஆறுதல் கூறினார். 'ஒருகாலத்தில் தன்னோடு கதாநாயகியாக நடித்தவர் அவ்வளவுதான்' என்று நினைக்கவில்லை, எம்.ஜி.ஆர்., தன்னோடு நடித்தவர் ஒரு துன்பத்தில் இருக்கும்போது, ஆறுதல் சொல்வது தன் கடமை என்று நினைத்தார். இதுமட்டுமல்ல... கடந்த 1979ல் எம்.ஜி.ஆர்., முதல்வராக இருந்த சமயம், ஓர் அரசு நிகழ்ச்சியில் பங்கேற்க, மதுரை வழியாக காரில் பயணமானார். அவர் காருக்குப் பின், காவல் வாகனத்தில் பயணம் செய்த எம்.ஜி.ஆரின் மேக்கப் மேனும், உதவியாளருமான சபாபதி விபத்தில் படுகாயமடைந்தார். திண்டுக்கல் அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்கு அனுமதிக்கப்பட்ட அவர் இறந்தார். செய்தியறிந்த எம்.ஜி.ஆர்., உடனே அரசு நிகழ்ச்சிகளை ரத்து செய்து, திண்டுக்கல்லுக்கு விரைந்தார். சபாபதியின் உடலை கொண்டு வந்து, சென்னை ராயப்பேட்டை தலைமை அலுவலகத்தில் வைத்து, பொதுமக்கள் மற்றும் உறவினர்கள் அஞ்சலி செய்ய ஏற்பாடு செய்தார். அத்துடன், மயானத்திற்கு சபாபதி உடலை எடுத்துச் சென்றபோது, கட்சி அலுவலகத்தில் இருந்து மயானம் வரை நடந்தே சென்றார். அவரது குடும்பத்துக்கு நிதியுதவியும் செய்தார். எம்.ஜி.ஆரைப் போன்று இப்போது இருப்பவர்களும் நடந்து கொள்ள வேண்டும் என்று எதிர்பார்க்கவில்லை. அதேநேரம், எம்.ஜி.ஆரின் மனிதாபிமானத்தை போற்றும் விதமாக, சரோஜா தேவியின் புகைப்படத்தை கட்சி அலுவலகத்தில் வைத்து, அஞ்சலி செலுத்தியிருந்தால் எம்.ஜி.ஆரின் ஆத்மா சாந்தியடைந்து இருக்கும். அ.தி.மு.க., தலைமைக்குத்தான் இந்த எண்ணம் இல்லை என்றாலும், எம்.ஜி.ஆரோடு பயணித்த ஒருவருக்கு கூட இல்லையே-!  வாய் கூசவில்லையா? ஜி.சூர்ய நாராயணன், விழுப்புரத்தில் இருந்து அனுப்பிய, 'இ - மெயில்' கடிதம்: இனவாதம் என்ற பொய்யின் அஸ்திவாரத்தில் கட்டப்பட்டது தான், திராவிடர் கழகம். அதில் இருந்து பிரிந்த தி.மு.க., பொய்யை மட்டுமே மூலதனமாக கொண்டது. மொழி, மனு தர்மம், ஜாதி ஒழிப்பு குறித்த உணர்வு ரீதியான பொய்களில் இருந்து, கச்சத் தீவு, மீத்தேன், நீட் விலக்கு, பெட்ரோல் விலை குறைப்பு, மதுவிலக்கு, பழைய ஓய்வூதிய திட்டம் என ஓட்டுக்காக கொடுக்கும் பொய்கள் வரை, இவர்களது பொய்மை நீண்டு கொண்டே போகும்! இதில், போலி கவுரவத்திற்காக வரலாற்றை திரித்துக் கூறும் பொய்கள் இருக்கிறதே... இதில், தி.மு.க.,வினருக்கு முனைவர் பட்டமே கொடுக்கலாம்! அந்த அளவுக்கு வரலாற்றை திரித்து, ஈ.வெ.ரா., அண்ணா துரை, கருணாநிதி குறித்து வாய்க்கு வந்த பொய்களை எல்லாம் அள்ளிவிடுவர். அவற்றில் ஒன்று தான் காமராஜர் குறித்து, தி.மு.க., - எம்.பி., சிவா கூறிய பொய்! 'ஏசி' இல்லாமல் காம ராஜர் உறங்க மாட்டாராம். இறக்கும்போது, கருணாநிதியின் கைகளை பிடித்துக் கொண்டு, 'நீங்கள் தான் இந்த நாட்டையும், ஜனநாயகத்தையும் காப்பாற்ற வேண்டும்' என்று கேட்டுக் கொண்டாராம்! பொய் கூறலாம்... அதற்காக இப்ப டியா ஏக்கர் கணக்கில் கூறுவர்? காமராஜர் இறக்கும் போது, அவரிடம் சொத்தாக இருந்தது நாலு கதர் ஆடைகளும், சில நுாறு ரூபாய்கள் மட்டுமே! அத்தகைய நேர்மையாளர், நாட்டுப் பற்றாளர், சர்க்காரிய கமிஷன் எள்ளி நகையாடிய விஞ்ஞான ஊழல் சக்கரவர்த்தியிடம், 'இந்த நாட்டை காப்பாற்ற வேண்டும்!' என்று கூறினாராம்... இதை நாட்டு மக்கள் நம்ப வேண்டுமாம்! தமிழக மக்களை எந்த அளவு முட்டாள்களாக நினைத்திருந்தால், இப்படி ஒரு பொய்யை துணிந்து கூறியிருப்பார் சிவா! நாட்டுக்காக திருமணத்தை துறந்து, தமிழக நலனுக்காக சிந்தித்து, மக்களுக்காக வாழ்ந்து மறைந்த ஒப்பற்ற தலைவர் குறித்து இப்படி பேச வாய் கூசவில்லையா?  தி.மு.க.,வின் பிரசாரம் செல்லுபடியாகுமா? மகிழ்நன், கடலுாரில் இருந்து அனுப்பிய, 'இ - மெயில்' கடிதம்: 'ஓரணியில் தமிழ்நாடு' என்ற புதிய பிரசாரத்தை சென்னையில் துவங்கி, தமிழகம் முழுதும், வீடு வீடாகச் சென்று பிரசாரம் செய்ய துவங்கி விட்டனர் தமிழக முதல்வரும், அமைச்சர்களும்! எதற்காக? தமிழக மண், மானம், மொழியை காக்கப் போகின்றனராம்! 'ஸ்டாலின் தான் வர்றாரு... விடியல் தரப் போறாரு...' என்ற கடந்த சட்டசபை தேர்தல் பிரசாரத்திற்கான பலன், தமிழகம் இன்னும் விடியாமல் கிடக்கிறது. இதில் மண், மானம், மொழியை காக்க பிரசாரம் செய்ய புறப்பட்டு விட்டனர்! முதலில், தமிழகத்தில் சட்டம் - ஒழுங்கு, லஞ்சம் - ஊழல், அதிகார துஷ்பிரயோகம், கனிமவளக் கொள்ளை, வாரிசு அரசியல் போன்றவற்றில் சீர்திருத்தம் செய்து விட்டு, பின் வீதிக்கு வாருங்கள் பிரசாரத்திற்கு! 


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

வாசகர்கள் கருத்துகள் ( 1 )

D.Ambujavalli
ஜூலை 23, 2025 17:17

மக்களிடம் சட்ட மீறலாக otp வாங்கி உறுப்பினராக மட்டும் ஆக்குவார்களா, அந்த otp விவரங்கள் எந்தெந்த கிரிமினல் வேலைகளுக்கு உபயோகப்படுத்துவார்களா என்று ஏற்கெனவே மாட்டிக்கொண்டவர்கள் கதி கலங்கி உள்ளார்கள் திராவிட மாடல் என்றாலே, எந்தெந்த வகையில் மக்களை ஏமாற்றலாம் என்பதில் முத்துமுகிணைவர் பட்டம் பெற்றவர்கள் என்று பொருளாயிற்றே


அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை