உள்ளூர் செய்திகள்

/ தினம் தினம் / இது உங்கள் இடம் / செல்வப்பெருந்தகை ஒப்பாரி வைக்க வேண்டாம்!

செல்வப்பெருந்தகை ஒப்பாரி வைக்க வேண்டாம்!

வெ.சீனிவாசன், திருச்சியில் இருந்து அனுப்பிய, 'இ - மெயில்' கடிதம்: பருவ மழையின் காரணமாக, காஞ்சிபுரம் மாவட்டம், செம்பரம்பாக்கம் ஏரியின் பாதுகாப்பு கருதி, சமீபத்தில், அதன் மதகு வழியே, 500 கன அடி நீர் திறந்து விடப்பட்டது. இவ்விஷயம் அறிந்து, தமிழக காங்கிரஸ் தலைவர் செல்வப்பெருந்தகை, 'ஏரி நீர் திறந்து விடுவது குறித்து எனக்கு ஏன் முன்னமே தெரிவிக்கவில்லை. பொறியாளர்களே அனைத்தையும் பார்த்துக் கொள்வது என்றால், மக்கள் பிரதிநிதிகளுக்கு என்ன வேலை...' என்று, அதிகாரிகளை கடிந்து கொண்டுள்ளார். 'அணை நிரம்பியிருந்தால், விவசாயத்திற்கு நீர் திறந்து விடும் போது, முதல்வர் உள்ளிட்ட மக்கள் பிரதிநிதிகளை அழைப்பது உண்டு. மற்றபடி அதுபோன்று அழைப்பது நடைமுறையில் இல்லை...' என்று கூறியுள்ளார், நீர்வளத் துறை அமைச்சர் துரைமுருகன். உடனே, சங்ககால நுால்களை துணைக்கு துாக்கி கொண்டு வந்து விட்டார், செல்வப்பெருந்தகை. அதாவது... நீர் நிறைந்த குள விழா, நீர் நிறைந்த ஏரி விழா என்று சங்க காலத்தில் கொண்டாடினராம். அதனால், ஏரி, குளம், கண்மாய் என்று எங்கு நீர் நிறைந்து இருந்தாலும், அதை விழாவாக எடுத்து, அதில், செல்வப்பெருந்தகை போன்றவர்களை அழைத்து, மாலை மரியாதை செய்ய வேண்டுமாம்... அதுதான் தமிழ் மரபாம்... பாவம் இரவெல்லாம் பல புத்தகங்களை படித்து, ஆய்வு செய்து, துரைமுருகனுக்கு விளக்கம் கொடுத்துள்ளார். சாதாரண மழைக் காலங்களில் ஏரி, குளம், குட்டை, கண்மாய்கள் நிறைந்து, அதற்காக மக்கள் மகிழ்ச்சியாக விழா எடுத்து கொண்டாடுவதற்கும், வெள்ளக் காலத்தில், பேரிடர் ஏற்படும் விதமாக நீர்நிலைகள் நிறைந்து போவதற்கும் உள்ள வித்தியாசம் தெரியாத இவரைப் போன்ற ஆட்கள் காங்கிரசில் இருந்தால், அக்கட்சி எப்படி உருப்படும்? அதிகாரிகள் அவர்கள் வேலையை செய்யக்கூட, அரசியல்வாதிகளிடம் அனுமதி கேட்க வேண்டும் என்பது என்ன வகை மனநிலை? 'இவனுங்க எல்லாம் தண்ணிய தொடக்கூடாது என்ற ஜாதி வெறி... அயோக்கிய பய... இந்த துறையே ஜாதி வெறிபிடித்துப் போய் கிடக்கிறது' என்று நீர்வளத் துறை அதிகாரியை வசைபாடியுள்ளார். நீரை திறந்து விடுவது தான் பொறியாளர் களின் வேலை. இதில் ஜாதி எங்கே வருகிறது? ஓடும் நீரையும், தேக்கி வைத்த ஏரி நீரையும் பட்டியலின ஜாதியினர் தொடாமல், கும்பிடு போட்டு கையில் வாங்கியா விவசாயம் செய்கின்றனர்? இப்படித்தான், சில மாதங்களுக்கு முன், ஒரு கோவில் கும்பாபிஷேகத்தின் போது, தன்னை சிறப்பாக கவனிக்கவில்லை என்றும், அதற்கு, தன் ஜாதி ஒரு காரண மாக இருக்கலாம் என்றும் கூறினார் செல்வப்பெருந்தகை. ஜாதி பார்த்து இவரை ஒதுக்கியிருந்தால், இன்று, தமிழக காங்கிரஸ் தலைவராகி இருப்பாரா? அக்கட்சியின் பிற ஜாதி உறுப்பினர்கள் இவரை தலைவராகத் தான் ஏற்றிருப்பரா? எனவே, செல்வப்பெருந்தகை முதலில், தான் எவருக்கும் தாழ்ந்தவர் இல்லை என்பதை மனதில் இருத்திக் கொண்டால், எவரைப் பார்த்தாலும், எந்த செயல்கள் இயற்கையாக நடந்தாலும், அதற்கு தன் ஜாதி தான் காரணமோ என்ற தாழ்வு எண்ணம் தோன்றாது! நேர்மை, நாணயம், சிந்தனை செயல்பாடுகள் தான், ஒருவரை நல்லவரா, கெட்டவரா, உயர்ந்தவரா, தாழ்ந்தவரா என்று வேறுபடுத்திக் காட்டும். எனவே, மற்றவர்கள் செல்வப்பெருந்தகையை மதிக்க வேண்டும் என்றால், இந்த நற்பண்புகளை முதலில் வளர்த்துக் கொள்ளட்டும். அதைவிடுத்து, எப்போது பார்த்தாலும், தாழ்ந்த ஜாதி என்பதால் தான் இப்படி நடந்து கொள்கின்றனர் என்று ஒப்பாரி வைக்க வேண்டாம்! lll இந்த பெருமை போதுமா? ஆர்.ஆர்.கந்தவேல், சென்னையில் இருந்து அனுப்பிய, 'இ - மெயில்' கடிதம்: சென்னை நந்தம்பாக்கம் வர்த்தக மையத்தில், தமிழ்நாடு டாக்டர் எம்.ஜி.ஆர்., மருத்துவ பல்கலை சார்பில், 'எதிர்கால மருத்துவம், 2.0' என்ற பன்னாட்டு மாநாடு நடந்தது. அம்மாநாட்டை பார்வையிட்ட மக்கள் நல்வாழ்வு துறை அமைச்சர் சுப்பிரமணியம், 'டில்லி எய்ம்ஸ் மருத்துவ மனைகளில் உள்ள உபகரணங்கள், தமிழக அரசு மருத்துவமனைகளில் இடம் பெற்று உள்ளன. மருத்துவ சிகிச்சைக்கு இந்தியா வருவோரில், 25 சதவீதம் பேர் தமிழகம் வருகின்றனர். 'அதாவது, ஆண்டுக்கு, 15 லட்சம் பேர் சிகிச்சைக்கு வருகின்றனர்' என்று கூறி பெருமைப் பட்டுள்ளார். ஆனால், ஒவ்வொரு நாளும் நாளிதழ்களில், அரசு மருத்துவமனைகளில் போதுமான டாக்டர்கள், செவிலியர் இல்லை என்றும், போதுமான மருந்து மாத்திரைகள் கையிருப்பில் இல்லை, உள்நோயாளிகளுக்கு படுக்கை வசதி இல்லை என்பது போன்ற செய்திகள், பக்கம் பக்கமாக வந்து கொண்டிருக்கின்றன. அமைச்சரோ, டில்லி எய்ம்ஸ் மருத்துவமனைகளில் உள்ள உபகரணங்கள், தமிழக அரசு மருத்துவமனைகளில் இடம் பெற்றுள்ளதாக பெருமைப்படுகிறார். அமைச்சர் கூறியபடி, டில்லி எய்ம்ஸ் மருத்துவமனைகளில் உள்ளது போன்ற உபகரணங்கள், தமிழக அரசு மருத்துவமனைகளில் இருக்கலாம். ஆனால், அந்த உபகரணங்கள் இயங்கும் நிலையில் உள்ளனவா அல்லது உறங்கிக் கொண்டிருக்கின்றனவா என்பதும், அந்த உபகரணங்களை இயக்க டெக்னீஷியன்கள் இருக்கின்றனரா என்பதும் தானே இங்கு மிகப் பெரிய கேள்விக்குறியே! ஆண்டுக்கு, 15 லட்சம் பேர் சிகிச்சைக்கு தமிழகத்திற்கு வருகின்றனர் என்கிறார். அந்த, 15 லட்சம் பேர்களும், அரசு மருத்துவமனைகளில் சிகிச்சை எடுத்து கொள்கின்றனரா அல்லது தனியார் மருத்துவமனைகளில் சிகிச்சை எடுத்து கொள்கின்றனரா என்பதையும், அமைச்சர் கூறியிருக்கலாம்! சரி... அவர்களை விட்டுத் தள்ளுங்கள்... தி.மு.க., அமைச்சர்கள் எத்தனை பேர், அரசு மருத்துவமனைகளில் சிகிச்சை எடுத்துக் கொள்கின்றனர்; இருமல், தும்மல் வந்தால் கூட தனியார் மருத்துவமனைக்கு தானே ஓடுகின்றனர்! அப்படியிருக்கையில், வெளிநாடுகளில் இருந்து தமிழகத்திற்கு சிகிச்சைக்கு வருவோர் அரசு மருத்துவமனைக்குத் தான் வருகின்றனர் என்று எப்படி கூற முடியும்? தனியார் மருத்துவமனைகளின் உழைப்பிற்கு, திராவிட மாடல் அமைச்சர், தி.மு.க., ஸ்டிக்கரை ஒட்டி, சிலாகிக்கிறார். இப்படியே வெற்று பெருமை பேசியே நான்கரை ஆண்டுகளை கடத்தியாகி விட்டது. இன்னும் சில மாதங்கள் தானே... நடக்கட்டும் உங்கள் வெற்று பெருமை முழக்கங்கள்! lll


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

வாசகர்கள் கருத்துகள் ( 2 )

D.Ambujavalli
அக் 30, 2025 19:01

‘நாயை எங்கே அடித்தாலும், காலைதான் நொண்டும்’ என்பார்கள் அவசியம் இருகிறதோ, இல்லை, தன்னை கதாநாயகனாக நிறுத்தி கவுரவிக்க வேண்டும் என்று வெட்டியாக அலைந்து தன சுய கவுரவத்தையே இழக்கிறார் செல்வப்பொருந்தகை


Anantharaman Srinivasan
அக் 30, 2025 14:43

அம்பேத்கர் பெயர் இன்றும் நிலைத்திருப்பதற்கு காரணம் அவர் சார்ந்த ஜாதியல்ல என்பதை செல்வப்பெருந்தகை போன்ற ஜாதிப்போர்வையில் புகழ் தேடும் அரசியல்வாதிகள் தெளிவுபெற வேண்டும்.


அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை