உள்ளூர் செய்திகள்

/ தினம் தினம் / இது உங்கள் இடம் / வரலாற்றை மாற்றாதீர்கள்!

வரலாற்றை மாற்றாதீர்கள்!

முனைவர். வி.மீனாட்சி பட்டாபிராமன், மதுரையில் இருந்து அனுப்பிய, 'இ - மெயில்' கடிதம்: 'மஹான் ராமானுஜரை எவருமே அறிந்திராத நிலையில், அவர் குறித்து புத்தகங்கள் எழுதி, அதை தொலைக்காட்சி தொடராக வெளியிட்டவர் கருணாநிதி. இப்போது அந்நுாலை வெளியிட்டுள்ளவர் முதல்வர் ஸ்டாலின். இவர்களைத்தான் நாத்திகவாதிகள் என்று சொல்லி, ஆன்மிகவாதிகளிடம் இருந்து பிரித்து வைக்கின்றனர். இவர்கள், அனைத்து மதத்தினரையும்சமமாக கருதுபவர்கள்' என்று கூறியுள்ளார், சபாநாயகர் அப்பாவு. சமீபகாலமாக, தமிழக அமைச்சர்கள் போட்டி போட்டு, முதல்வரை பாராட்டி வருகின்றனர். அதில், தன் பங்குக்கு அப்பாவு கூறியது தான், மேற்கண்ட அபத்தமான உரை. கருணாநிதிக்கு முன் ராமானுஜர் குறித்து எவரும் அறிந்ததில்லையா? இல்லை தமிழ் இலக்கிய வரலாற்றில் அவர் குறித்து படித்ததுதான் இல்லையா?திருக்குறள் கூட கருணாநிதி, 'குறளோவியம்' எழுதியபின் தான் மக்களுக்கு தெரிந்து என்று கூறுவார் போல் உள்ளதே!அதிகாரத்திற்காக எந்த அளவுதான், 'ஜால்ரா' போடுவது என்று ஓர் அளவில்லையா? இனி வரும் காலத்தில், தொல்காப்பியமே, கருணாநிதியின் தொல்காப்பியப் பூங்கா தந்த கொடை என்று சொன்னாலும் சொல்வீர்கள் போலிருக்கிறதே!இதில் ஸ்டாலின், நுாலை வெளியிட்டதால் தான், ராமானுஜர் குறித்து அனைவரும் அறிந்து கொள்ள முடிந்தது என்று கூறுவது எத்தனை அபத்தம்!ஆயிரம் ஆண்டு பழமையான ஓர் ஆச்சாரியரை, சென்ற நுாற்றாண்டு மனிதர் தான் உலகுக்கு அடையாளம் காட்டினார் என்கிறீர்களே... இதைச் சொல்ல வெட்கமாக இல்லையா?ஆசைக்கும், தேவைக்கும், வாழ்வுக்கும், வசதிக்கும் பிறரின் வாலைப் பிடித்து தொங்குங்கள்... அதற்காக முழு பூசணிக்காயை சோற்றில் மறைத்து, வரலாற்றை திசை திருப்பாதீர்கள்!

ஓட்டம் எடுக்கும் கூட்டம் !

ஆர்.அகிலன், புதுச்சேரியில் இருந்து அனுப்பிய, 'இ - மெயில்' கடிதம்: 'நீட் தேர்வில், மது குறித்து கேள்வி கேட்டுள்ளனர். நம் கல்வி கொள்கையை கேள்விக்குறியாக்கி, அழிக்கும் திட்டம் தான் நீட் தேர்வு. இதனாலேயே இத்தேர்வை தமிழகம் எதிர்க்கிறது' என்று கூறியுள்ளார், சபாநாயகர் அப்பாவு. மது குறித்து கேள்வி கேட்டால், அது கல்வி கொள்கையை அழிப்பதாக அர்த்தமா?'களவும் கற்று மற' என்று கூடத்தான் பள்ளி பாடப் புத்தகங்களில் அச்சிடப்பட்டுள்ளது.அதனால், அது திருட்டு தொழிலை ஊக்குவிப்பதற்கான ஆலோசனை என்று எடுத்துக்கொள்ள முடியுமா?பேச்சால் ஆட்சியை பிடித்த கட்சியை சேர்ந்தவர்களுக்கு, இப்போதெல்லாம் பேச தெரியாமல், வாய்க்கு வந்ததை உளறி கொட்டுகின்றனர். நீட் தேர்வில் உண்மை தன்மை இல்லை என்றால், திராவிட மாடல் ஆட்சியில் உண்மை தன்மை உள்ளதா?ஆட்சிக்கு வருவதற்கு முன் எத்தனையோ வாக்குறுதிகளை வழங்கியது, தி.மு.க., அவைகளில் ஏதாவது ஒன்றையாவது உருப்படியாக நிறைவேற்றி உள்ளதா?'நீட் தேர்வில் விலக்கு வேண்டும் என்றால், அனைத்து தனியார் மருத்துவக் கல்லுாரிகளையும், அரசுடைமை ஆக்க வேண்டும்' என, மத்திய அரசு சட்டம் கொண்டு வந்தால் தான், ஓட்டுக்காக நீட் நாடகம் போடும் கூட்டம், ஓட்டம் பிடிக்கும்!

எம்.ஜி.ஆர்., மேல் சபையை கலைத்தது ஏன்?

டி.ஈஸ்வரன், சென்னையில் இருந்து அனுப்பிய, 'இ - மெயில்' கடிதம்: 'நடிகை வெண்ணிற ஆடை நிர்மலாவுக்காக மேல்சபைக்கு மூடு விழா நடத்தி விட்டார், எம்.ஜி.ஆர்.,' என்று இப்பகுதியில் வாசகர் ஒருவர் எழுதியிருந்தார். கடந்த 1986லிருந்தே இப்படி ஒரு கருத்து பேசப்பட்டு வருகிறது. அது தவறு!தமிழக மேல்சபை, 78 எம்.எல்.சி., பதவிகளை கொண்டது. அதில் அரசியல்வாதிகள் 26 பேரை, எம்.எல்.சி.,க்களாக, எம்.எல்.ஏ.,க்கள் ஓட்டு போட்டு தேர்வு செய்ய வேண்டும். அதேபோன்று, ஊராட்சி மன்றங்களின் பிரதிநிதிகள், 26 பேரையும், பட்டதாரி தொகுதிகளின் உறுப்பினர்கள், 6 பேரையும், ஆசிரியர் தொகுதிகளின் உறுப்பினர்கள், 6 பேரையும் எம்.எல்.சி.,க்களாக ஓட்டு போட்டு தேர்வு செய்ய வேண்டும். மீதி, 14 எம்.எல்.சி.,க்களை தன் தனி அதிகாரத்தை பயன்படுத்தி கவர்னர் தேர்வு செய்வார்.இதுதான் மேல்சபை எம்.எல்.சி.,க்களை தேர்வு செய்யும் விதிமுறை.இந்நிலையில், 1986ல் அப்போதைய சட்டசபை சபாநாயகர் பி.எச்.பாண்டியனை அழைத்து, 'கட்சியினர், ஆசிரியர், பட்டதாரி, ஊராட்சி மன்றத்தினர் மேல்சபைக்குள் நுழைய முடிகிறது. அதேபோல் நெசவாளர்கள், சலவை தொழிலாளர்கள், விவசாய கூலி தொழிலாளர்களும் மேல்சபைக்குள் நுழைய வேண்டும் என்றால், அதற்கு என்ன வழி?' என்று கேட்டார், எம்.ஜி.ஆர்., 'அது எளிதான காரியம் அல்ல; அதற்கு, அரசியல் அமைப்பு சட்டத்தில் திருத்தம் செய்ய வேண்டும். அதற்காக நிறைய வேலைகளை செய்தால்தான் முடியும்' என்றார், பாண்டியன். இதைக் கேட்டவுடன் எம்.ஜி.ஆருக்கு மேல்சபையின் மீது இருந்த ஆர்வம் குறைந்து விட்டது. இந்நிலையில் தான், 1986 ஏப்., மாதம் நடிகை வெண்ணிற ஆடை நிர்மலா, வழக்கறிஞர் என்.சி.ராகவாச்சாரி உட்பட, நான்கு பேர்களின் பெயர்கள், எம்.எல்.சி., பதவிக்காக கவர்னர் பரிந்துரைக்கு சென்றது. அதைத்தொடர்ந்து, கவர்னர் உத்தரவுப்படி, நான்கு பேரும் எம்.எல்.சி.,யாக நியமிக்கப்பட்டனர். அப்போது, வெண்ணிற ஆடை நிர்மலாவுக்கு மட்டும் அப்பதவியில் நீடிப்பதற்கு நீதிமன்றம் வாயிலாக ஒரு சட்டச் சிக்கல் ஏற்பட்டது.அதேநேரம், அவருக்கு பதில் வேறு ஒருவரை நியமனம் செய்ய வேண்டுமானால், அது உடனடியாக முடியும் காரியம் அல்ல. அதனால், ஏற்கனவே மேல்சபை சட்ட விதிகளில் ஆர்வம் காட்டாத எம்.ஜி.ஆர்., ஒட்டுமொத்தமாக, 1986 மே மாதம் மேல்சபையையே கலைத்து விட்டார். அதைத் தொடர்ந்து, பல மாநிலங்களில் மேல்சபை கலைக்கப்பட்டது. கடந்த 2006ல் மீண்டும் மேல்சபையை கொண்டுவர முயற்சி செய்தார், கருணாநிதி. ஆனால், தி.மு.க., 96 எம்.எல்.ஏ.,க்களுடன், காங்கிரஸ் உட்பட கூட்டணி கட்சியினர் ஆதரவுடன் ஆட்சி அமைத்திருந்தது. 61 எம்.எல்.ஏ.,க்களுடன் எதிர்க்கட்சியாக இருந்தது, அ.தி.மு.க.,!ஒரு சட்டத்திற்கான ஒப்புதல் பெற, சட்டசபையில் தீர்மானம் நிறைவேற்றி, அதை மேல்சபையில் ஒப்புதல் பெற வேண்டும். அங்கே அந்த சட்டம் தோல்வி அடைந்து விட்டால், மீண்டும் சட்டசபையில், அச்சட்டத்தை நிறைவேற்ற வேண்டும். அதற்கான காலமும், செலவினமும் அதிகம் என்பதுடன், அன்று, தி.மு.க., தனி மெஜாரிட்டியில் ஆட்சியில் இல்லை. அதனால், மேல்சபையை மீண்டும் கொண்டு வரும் முயற்சிக்கு முற்றுப்புள்ளி வைத்து விட்டார், கருணாநிதி.இந்த உண்மை புரியாமல், வெண்ணிற ஆடை நிர்மலா என்ற தனி நபருக்காக எம்.ஜி.ஆர்., மேல்சபையை கலைத்தார் என்று சொல்வது வரலாற்று தவறாகும்!


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

வாசகர்கள் கருத்துகள் ( 1 )

D.Ambujavalli
மே 18, 2025 04:04

ராமாநுஜரைப்பற்றி வெளிவராத நூல்களே இல்லை. தொலைகாட்சி நாடகம் இவையெல்லாம் வருமுன் அவரைப்பற்றி , மக்களுக்கு ஒன்றுமே தெரியாது பொழப்பேசும் இவர், அந்த நூலின் ஒரு சில பாராக்களையாவது முதல்வர் படிக்க முடியுமா என்று சொல்லட்டு ம் உளறுவதற்கும் ஒரு எல்லையில்லையா ?


முக்கிய வீடியோ