என்.மல்லிகை
மன்னன், மதுரையிலிருந்து அனுப்பிய, 'இ-மெயில்' கடிதம்: நம் நாட்டில்
இதுவரை, எத்தனையோ ரயில் விபத்துகள் நடைபெற்று விட்டன. ரயில் விபத்து
குறித்து விசாரிக்க எத்தனையோ விசாரணை கமிஷன்கள் அமைக்கப்பட்டு விட்டன. இருந்தும்
என்ன பிரயோஜனம்... ரயில் விபத்துகள் தொடர்ந்து நடந்தபடிதான் இருக்கின்றன.
ரயில் விபத்து நடந்தது என்று சொல்வதைவிட நடத்தப்பட்டது என்று சொல்வதுதான்
மிகப் பொருத்தமாக இருக்கும்.எந்த ரயிலும் தானாக சென்று இன்னொரு
ரயில் மீது மோதிக் கொள்வதில்லை; மனிதர்கள் செய்யும் தவறுகள் காரணமாகத்தான்
பெரும்பாலான ரயில் விபத்துகள் நடக்கின்றன.விஞ்ஞான வளர்ச்சி அடைந்த
இந்த காலத்தில் தான், ரயில் விபத்துகளும் அதிகம் நடக்கின்றன. ஒரு ரயில்
செல்லும் டிராக்கில் இன்னொரு ரயில் செல்வதைத் தவிர்க்க, சென்சார் கருவிகள்
கண்டுபிடித்தால்தான் இது மாதிரி மோசமான விபத்துகளைத் தவிர்க்க முடியும்.மனிதர்கள் தவறுகள் செய்வர்; இயந்திரங்கள் தவறு செய்ய வாய்ப்புகள் குறைவு.'உங்கள்
பயணம் இனிதாக அமையட்டும்' என்று, மக்களுக்கு ரயில்வே துறை வாழ்த்து
சொன்னால் மட்டும் போதாது; அதைச் செயலிலும் காட்ட வேண்டும்.கடந்த
1956, அரியலுாரில் நடைபெற்ற ரயில் விபத்துக்குப் பொறுப்பேற்று அன்று
ரயில்வே அமைச்சராக இருந்த லால்பகதுார் சாஸ்திரி தனது பதவியை உடனே ராஜினாமா
செய்தார். அவரைத் தொடர்ந்து 1999ல் நிதிஷ்குமார், 2000ல் மம்தா பானர்ஜி,
2017 ல் சுரேஷ் பிரபு ஆகியோர் ராஜினாமா செய்தனர்; இவர்களில், மம்தா
வினுடையது மட்டும் ஏற்றுக்கொள்ளப் படவில்லை.சமீப காலமாக ரயில்
விபத்துகள் அடிக்கடி நிகழ்கின்றன; நாசவேலைகளும் தொடர்கின்றன. எனவே,
'சிக்னல் கோளாறு' என்று சொல்லி இனிமேலும் தப்பித்துக்கொள்ள ரயில்வே
நிர்வாகம் முயற்சி செய்யக்கூடாது; போர்க்கால அடிப்படையில் நடவடிக்கை
எடுத்தே தீர வேண்டும்.அரசு சுதாரிப்பது நல்லது!
கு.அருண், கடலுாரிலிருந்து அனுப்பிய, 'இ-மெயில்' கடிதம்: சமீபத்தில் சென்னையில், பச்சையப்பன் கல்லுாரி மாணவர்கள், 'ரூட் தல' விவகாரத்தில், 'நீ பெரியவனா அல்லது நான் பெரியவனா?' என்று மாநிலக் கல்லுாரி மாணவர் சுந்தருடன் மோதியதில், சுந்தர் படுகொலை செய்யப்பட்டார். இந்தப் படுகொலைக்கு காரணமான பல மாணவர்கள், தற்போது கைது செய்யப்பட்டு சிறையில் உள்ளனர்.படிக்கும் மாணவர்கள் கையில் கத்தி, உருட்டுக்கட்டை வைத்துக் கொள்ளும் கலாசாரம் எப்படி உருவானது என்று நினைத்துப் பார்க்க வேண்டிய காலத்தில் நாம் உள்ளோம்.எம்.ஜி.ஆர்., சிவாஜி நடித்த காலங்களிலேயே காதல், சண்டைக் காட்சிகள் வந்துவிட்டன. அது தற்போது ரஜினி - கமல், அஜித் - விஜய் என்று தொடர்கிறது.தற்போதைய படங்களில், கைச்சண்டை மட்டுமல்லாமல், ஹீரோக்களே ரவுடிகளைப் போன்று, வில்லன்களை துப்பாக்கியால் சுட்டும், கத்தியால் வெட்டியும் தண்டனை கொடுப்பதாக திரைப்படங்களில் காட்டப்படுகிறது.தவறு செய்தவர்களை கைது செய்து, சிறையில் அடைத்து, நீதிமன்றத்தில் ஆஜர் செய்து, வழக்கை நடத்தி தண்டிப்பதாக, எந்தவொரு சினிமாவிலும் காட்சிகள் கிடையாது.ஹீரோக்கள் தானே மாணவர்களின் வழிகாட்டியாக உள்ளனர்! எனவே, அவர்களைப் பின்பற்றி பைக் சாகசம், கத்தியால் கேக் வெட்டி பிறந்த நாள் கொண்டாடுவது, தண்ணி - கஞ்சா அடிப்பது என, தங்களை, 'மேம்படுத்தி'க் கொள்கின்றனர்.பள்ளி, கல்லுாரிகளில் இப்போதெல்லாம் ஒழுக்கத்துடன் கூடிய கல்வியை போதிக்க முடிவதில்லை. நீதிபோதனை வகுப்புகள் முதல் நல்லொழுக்கத்தை போதிக்கக் கூடிய தேசிய மாணவர் படை மற்றும் சாரணர்வகுப்புகள், விளையாட்டு பயிற்சிகள் இல்லை. அரசு பள்ளிகள் மற்றும் அரசு கல்லுாரிகளில், ஆசிரியர்கள் கைகள் கட்டப்பட்டு விட்டதால், மாணவர்களுக்கு கண்டிப்புடன் பாடங்களை போதிக்க முடிவதில்லை.இன்றைய பள்ளி, கல்லுாரி மாணவர்களை வழிநடத்த, சிறந்த சமூக சூழ்நிலை இல்லை; நல்ல தலைவர்கள் இல்லை.அவர்களைச் சுற்றி ஒழுக்கமான நண்பர்கள், உறவினர்கள் என்று யாரும் இல்லாத காரணத்தால் அவர்கள் சினிமா ஹீரோக்களை தங்களது வழிகாட்டிகளாக நினைத்துக் கொண்டு, 'ரூட் தல' வரை வளர்ந்து விட்டனர்.இவர்களை மீட்டெடுக்க, தமிழக பள்ளிக்கல்வித்துறை மற்றும் தமிழக உயர் கல்வித்துறை, உடனடியாக ஒவ்வொரு பள்ளி, கல்லுாரியிலும், மாதம் இருமுறை அல்லது வாரம் ஒருமுறை பல்வேறு துறைகளில் சாதனை படைத்த அறிஞர்கள், கல்வியாளர்கள், ராணுவ வீரர்கள், விளையாட்டு வீரர்களை வரவழைத்து தன்னம்பிக்கை வகுப்புகள், அரங்கங்கள் நடத்த வேண்டும்.இல்லையெனில், ஒவ்வொரு பள்ளி, கல்லுாரி வாசலிலும் காவல் நிலையம் வைக்க வேண்டிய நிலை ஏற்படும். அரசு சுதாரிப்பது நல்லது!பவன் கல்யாண் சொல்வது சரியே!
எஸ்.ஜி.பிரபு கணேஷ், மதுரையிலிருந்து அனுப்பிய, 'இ-மெயில்' கடிதம்: நாடு முழுவதும் சனாதன அமைப்பு ஒன்றை அமைக்க வேண்டும் என்று, ஆந்திர துணை முதல்வர் பவன் கல்யாண் வலியுறுத்தி உள்ளார்; அவரது கருத்து முற்றிலும் வரவேற்கத்தக்கது.ஹிந்து மதம், தமிழகத்தை பொறுத்தவரை எடுப்பார் கைப்பிள்ளை ஆகிவிட்டது. இங்குள்ள போலி பகுத்தறிவுவாதிகளுக்கு, பெரும்பான்மையாக வசிக்கும் ஹிந்து மக்களின் உணர்வை கொச்சைப்படுத்தி பேசுவதே வாடிக்கை. அவர்களைப் பொறுத்தவரை, ஹிந்து மதத்திற்கு எவர் ஆதரவு கொடுத்தாலும் அவர்கள் சிறுபான்மை மத விரோதி.பவன் கல்யாண், சரியான போக்கில் செல்கிறார். அவர் கூறியபடி நாடு முழுதும் ஹிந்து மக்களை ஒருமைப்படுத்தும் இதுபோன்ற அமைப்புகள், மிக மிக அவசியம். இல்லையெனில் நேற்று சனாதன தர்மத்தை அழிப்பேன் எனக் கூறியவர்கள், நாளை ஹிந்து கோவில்களை இடிப்பேன் என்று கூறவும் தயங்க மாட்டார்கள்.