உள்ளூர் செய்திகள்

/ தினம் தினம் / இது உங்கள் இடம் / மறந்து விடாதீர்கள்!

மறந்து விடாதீர்கள்!

ஜி.சூர்யநாராயணன், விழுப்புரத்தில் இருந்து அனுப்பிய, 'இ - மெயில்' கடிதம்: ஜனநாயகத்தில் எதிர்க்கட்சி என்பது எதிரி கட்சி இல்லை என்பதை, 'இண்டியா' கூட்டணிக்கு எவர் புரியவைக்க போகின்றனர் என தெரியவில்லை. ஹிந்துப் பெண்களின் நெற்றி குங்குமத்தை அழித்த பயங்கரவாதிகளை வேரறுக்க, 'ஆப்பரேஷன் சிந்துார்' என்ற பெயரில், பல அற்புதங்களை நிகழ்த்தியது, நம் ராணுவம். 'சர்வதேச போர் விதிமுறையின் படியே அனைத்து நடவடிக்கைகளும் எடுக்கப்பட்டன' என, நம் வெளியுறவுத் துறை அமைச்சர் ஜெய்சங்கர் தெளிவாக விளக்கிய பின்பும், மத்திய அரசை விமர்சிப்பதாக கருதி, ராணுவத்தை களங்கப்படுத்துகின்றனர், எதிர்க் கட்சியினர். பல இழப்புகளை சந்தித்த பாகிஸ்தான் அரசுக்கு, அங்குள்ள எதிர்க்கட்சிகள் ஆதரவாக உள்ளன. ஆனால், இங்குள்ளவர்களோ, நாட்டு பாதுகாப்பிலும் கீழ்த்தரமாக அரசியல் செய்யவே நினைக்கின்றனர். நாட்டு பற்று குறித்து பாகிஸ்தானியரிடம் இவர்கள் பாடம் கற்க வேண்டும். இதில், மெத்த படித்த மேதாவி முன்னாள் நிதியமைச்சர் சிதம்பரம், 'பயங்கரவாதிகள் பாகிஸ்தானியர்கள் தான் என்று எப்படி முடிவு செய்தீர்கள்?' என்று கொஞ்சம் கூட வெட்கம் இல்லாமல் கேட்கிறார். 'உன்னுடைய மதம் என்ன?' என்று கேட்டு, 26 பேரை சுட்டு கொன்றுள்ளனர். அவர்களை ஊக்குவிக்கும் பாகிஸ்தானிடம் பேச்சுவார்த்தை நடத்த வேண்டும்; தாக்க கூடாது என்றால், இது என்ன மாதிரியான மனநிலை? முன்னாள் பிரதமர் இந்திராவை, அவரது சீக்கிய பாதுகாவலர்கள் சுட்டுக் கொன்ற போது, படுகொலைக்கான காரணத்தை அலசி, சம்பந்தப்பட்டவர்களிடம் பேச்சு வார்த்தை நடத்தியிருக்க வேண்டியது தானே... ஏன் லட்சக்கணக்கான சீக்கியர்களை கொன்று குவித்தனர் காங்கிரசார்? எத்தனையோ தாக்குதல்களை நடத்தி விட்டு, சீனாவுடன் சேர்ந்து பாகிஸ்தான் பூச்சாண்டி காட்டிய போது, சீனாவிற்கு பயந்து, அரை நுாற்றாண்டுகளுக்கும் மேல், 'பேச்சுவார்த்தை' மட்டுமே நடத்தி வந்த கட்சி காங்.,! ஆனால், இப்போதுள்ளதோ முதுகெலும்பு உள்ள, தன் திறமையான ஆட்சியால், உலக அரங்கில் வலுவாக உள்ள அரசு. இப்போதும் ஏன் அஞ்ச வேண்டும்? எதிர்க்கட்சியினர் ஒன்றை நன்றாக புரிந்து கொள்ள வேண்டும்... உங்கள் பார்லி மென்ட் செயல்பாடுகளை கடைக்கோடி இந்தியனும் பார்த்துக் கொண்டிருக்கிறான் என்பதை மறந்து விடாதீர்கள்!  கொலை செய்வதிலும் கழகத்தின் கோட்பாடு! தேவ்.பாண்டே, செங்கல் பட்டில் இருந்து அனுப்பிய, 'இ - மெயில்' கடிதம்: சென்னை, கே.கே.நகரை சேர்ந்தவர் தி.மு.க., கவுன்சிலர் தனசேகரன்; இவர், 2006லும் தி.மு.க., ஆட்சியில் அதிகார பலத்துடன் வலம் வந்தார். இக்காலகட்டத்தில் தி.மு.க., மகளிர் அணியில் பால்மலர் என்பவர், இப்பகுதியில் அசுர வளர்ச்சி பெற்று, கட்சியினரிடையே பிரபலம் அடைந்து வந்தார். இந்நிலையில், 2008ல் சென்னை, தாம்பரத்திற்கு அருகில் உள்ள மணிமங்கலம் ஏரியிலிருந்து வயல்களுக்கு தண்ணீர் வெளியேறும் கால்வாயில், சாக்கு மூட்டைக்குள் ஒரு மனித சடலம் இருப்பதாக மணிமங்கலம் போலீசாருக்கு தகவல் கிடைத்தது. விசாரணையில் சாக்கு மூட்டைக்குள் இருந்த சடலம், பால்மலர் என்பது போலீசாருக்கு தெரியவந்தது. தன் மனைவியின் இறப்பில், தி.மு.க., பிரமுகர் தனசேகரன் மீது சந்தேகம் இருப்பதாக போலீசாரிடம் தெரிவித்தார், பால்மலர் கணவர். இக்கொலை வழக்கில் அப்போதும், இப்போதும் ஆட்சி அதிகாரத்தில் இருக்கும், அப்பகுதியை சேர்ந்த தி.மு.க., முக்கிய பிரமுகரின் தலையீட்டால், பால்மலர் கொலை வழக்கில் முன்னேற்றம் இல்லாமல் போனது. இதனால் விரக்தி அடைந்த பால்மலரின் கணவர், உயர் நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தார். நீதிமன்ற உத்தரவுபடி, சி.பி.சி.ஐ.டி., போலீஸ் விசாரணை நடத்தியது. பின், அவ்வழக்கின் நிலை என்னவானது என்று தெரியவில்லை. அந்த தனசேகரனின் மகள் வழிப்பேரன் சந்திரசேகர் தான், காதல் விவகாரத்தில் கல்லுாரி மாணவர் மீது காரை ஏற்றி கொலை செய்த வழக்கில் தேடப்பட்டு வந்தார். இது தொடர்பாக தகவல் அறிந்த முதல்வர் ஸ்டாலின், 'பேரனை போலீசில் ஒப்படையுங்கள்; மறுத்தால் கட்சியில் இருந்து டிஸ்மிஸ் செய்யப்படுவீர்கள்' என்று தனசேகரனை எச்சரிக்கவே, இரவோடு இரவாக பேரனை காவல் நிலையத்தில் சரணடையச் செய்தார். சந்திரசேகரிடம் போலீசார் பெற்றுள்ள வாக்குமூலத்தில், 'கொலை செய்ய வேண்டும் என்ற நோக்கத்தில் செயல்படவில்லை; காரை வேகமாக இயக்கினோம். கார் இரு சக்கர வாகனத்தில் மோதி இறப்பை ஏற்படுத்திவிட்டது' என்று ஒரு கொலையை, விபத்து வழக்காக சித்தரிக்க சாதுர்யமான வாக்குமூலத்தை போலீசார் அவரிடம் பெற்றுள்ளனர். இவ்வழக்கு நீதிமன்ற விசாரணையின்போது என்ன ஆகும் என்பது அனைவருக்கும் தெரிந்தது தான். அன்று, தாத்தா செய்த குற்றத்திற்காக தண்டிக்கப்பட்டிருந்தால், பேரனுக்கு கொலை செய்வதற்கான எண்ணம் தோன்றியிருக்காது. தாத்தாவை பார்த்து கிடைத்த அனுபவங்கள் பேரனுக்கு உதவியிருக்கிறது. பேரனின் பரம்பரை அனுபவங்கள், இனி அவனது கொள்ளுப்பேரனுக்கும் உதவலாம். 'அரசியலில் மட்டுமல்ல; அக்கிரமம் செய்வதிலும் நாங்கள் வாரிசு அடிப்படையில் இயங்குவோம்...' என்பது தான் கழகத்தின் கோட்பாடு போலும்!  தடை விதிக்கலாமே! எம்.ஆர்.ஜெயச்சந்திரன், திண்டுக்கல்லிலிருந்து அனுப்பிய, 'இ - மெயில்' கடிதம்: சிறார்கள் அதிகம் விரும்பி உண்ணும் தின்பண்டங்களான, ஜெல்லி மிட்டாய் மற்றும் செயற்கை சாயம் பூசிய மிட்டாய் வகைகள், ஜூஸ் வகைகள் உள்ளன. ஜெல்லி மிட்டாயில் ஒரு வகையான, 'சுவிங் கம்' போன்ற கரையாத ரப்பர் உள்ளது. இதை சாப்பிடும் குழந்தைகளுக்கு வயிற்று உபாதைகள் ஏற்படும் வாய்ப்பு அதிகம். முன்பெல்லாம், கடலை மிட்டாய், எள்ளு உருண்டை, முறுக்கு, சீடை போன்ற சத்தான தின்பண்டங்களை மட்டுமே வாங்கி சாப்பிட்டோம். ஆனால், இன்று பெரும்பாலும் ரசாயனம் கலந்த தின்பண்டங்களே அதிகம் விற்பனை செய்யப்படுகின்றன. இதனால், சிறார்கள் வயிற்று உபாதையால் அவதிப்படுவதை அடிக்கடி பார்க்க முடிகிறது. தமிழக அரசு நிறமூட்டிய பஞ்சு மிட்டாயை தடை செய்தது போல், ரசாயன கலவை நிறைந்த தின்பண்டங்களையும் தடை செய்யலாமே! 


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை