உள்ளூர் செய்திகள்

/ தினம் தினம் / இது உங்கள் இடம் / கல்லெறிய வேண்டாம்!

கல்லெறிய வேண்டாம்!

டி.ஆர்.ஷியாம் சுந்தர், மதுரையில் இருந்து அனுப்பிய, 'இ - மெயில்' கடிதம்: பா.ஜ., - அ.தி.மு.க., கூட்டணி குறித்து, 'பொருந்தா கூட்டணி' என்றும், 'ஊழல் கூட்டணி, தமிழகத்திற்கு துரோகம்' என்பது போன்ற விமர்சனங்களை முன்வைத்து வருகின்றன, தி.மு.க.,வும், அதன் கூட்டணி கட்சிகளும்!இந்தியாவில் சமீபகாலத்தில், இந்த அளவு எந்த கூட்டணியும் விமர்சிக்கப்பட்டதாக தெரியவில்லை.'குல்லுக பட்டர், குள்ள நரி' என்று மிக கடுமையாக ராஜாஜியை விமர்சித்த தி.மு.க., அதே ராஜாஜியுடன், 1967ல் கூட்டணி அமைத்து போட்டியிட்டு ஆட்சியை பிடித்தது. பின் அவர், 'மூதறிஞர்' ஆகி விட்டார்!'சேலை கட்டிய ஹிட்லர், பாப் வெட்டிய பாப்பாத்தி' என்று இந்திராவை விமர்சித்த தி.மு.க., பின், காங்கிரஸ் கட்சியுடன் கூட்டணி வைத்து,'நேருவின் மகளே வருக; நிலையான ஆட்சி தருக' என்று சிவப்பு கம்பள வரவேற்பு அளித்ததுடன், அதை, 'லட்சிய கூட்டணி' என்று சிலாகித்து, 1980ல் சட்டசபை தேர்தலில் சரிசமமான தொகுதிகளை வழங்கியது.கடந்த 1997ல் ராஜிவ் கொலைக்கு தி.மு.க.,வை கைகாட்டிய ஜெயின் கமிஷனின் இடைக்கால அறிக்கையை காரணம் காட்டி, குஜ்ரால் அமைச்சரவையில் இருந்து, தி.மு.க.,வை நீக்க வேண்டும் என்று இரண்டு வாரங்கள் பார்லிமென்ட்டை முடக்கியது, காங்கிரஸ். பின், 2004ல் வாஜ்பாய் அரசுக்கு அளித்து வந்த ஆதரவை, தி.மு.க., விலக்கி, சோனியா தலைமையிலான, காங்., கூட்டணியில் தன்னை இணைத்துக் கொண்டது.இப்படி தமிழகத்தில் மட்டுமல்ல... பிற மாநிலங்களிலும் எதிர்மறை கொள்கைகள் கொண்டுள்ள கட்சிகள் கூட்டணி அமைத்துள்ளன. உத்தர பிரதேசத்தில் பா.ஜ., - பகுஜன் சமாஜ் கட்சியுடன் கூட்டணி அமைத்து, மாயாவதி எனும் தலித் பெண்மணியை முதல்வர் ஆக்கியது. முன்னாள் பிரதமர் தேவகவுடாவின், ஜே.டி.எஸ்., கட்சி, மத்தியில் மோடி அரசிலும், கேரளாவில் பினராயி விஜயன் அரசிலும் அங்கம் வகிக்கிறது!சமீபத்தில் மதுரையில் நடந்த, சி.பி.எம்., அகில இந்திய மாநாட்டில், 'பா.ஜ.,வும், காங்கிரஸ் கட்சியும் ஒன்று தான்; அதனால், இனி, காங்., கட்சியுடன் கூட்டணி இல்லை' என்று தீர்மானம் நிறைவேற்றியுள்ளது, மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி. அதேநேரம், தமிழகத்தில் சி.பி.எம்., - காங்., ஒரே கூட்டணியில் உள்ளன. எனவே, பா.ஜ., - அ.தி.மு.க., கூட்டணியும், முழுக்க முழுக்க அரசியல் கூட்டணியே!அக்கூட்டணியை தைரியமாக எதிர் கொள்ள வேண்டுமே தவிர, அதை விடுத்து, கண்ணாடி வீட்டில் உட்கார்ந்து கொண்டு கல் எறியக் கூடாது!

வெற்றுப்பேச்சு வேண்டாம்!

ஆர்.வைத்தியநாதன், சென்னையில் இருந்து அனுப்பிய, 'இ - மெயில்' கடிதம்: வக்ப் வாரிய திருத்த சட்டத்தை திரும்பப் பெற வலியுறுத்தி, வி.சி., கட்சியினர் ஆர்ப்பாட்டம் செய்தனர். அதில் பேசிய திருமாவளவன், 'வக்ப் வாரிய திருத்த சட்டத்தை அறிமுகம் செய்த போது, 'இண்டியா' கூட்டணியை சேர்ந்த கட்சிகள் கடுமையாக எதிர்த்தன; ஆனாலும், அச்சட்டத்தை நிறைவேற்றி விட்டனர். ஒரு மதத்திற்கு ஆதரவாகவோ, எதிராகவோ அரசு செயல்படக் கூடாது என்பது தான் மதச்சார்பின்மை' என்று விளக்கமும் அளித்துள்ளார். அப்படி என்றால், 1954ல் மத்தியில் ஆட்சியில் இருந்த காங்கிரஸ் கட்சி, வக்ப் வாரிய சட்டம் கொண்டு வந்தது, இஸ்லாம் மதத்திற்கு ஆதரவாகவா, எதிராகவா?அதே காங்., ஆட்சியில் ஹிந்து அறநிலையத்துறை சட்டம் கொண்டு வந்தது, ஹிந்து மதத்திற்கு ஆதரவாகவா, எதிராகவா?ஹிந்து கோவில்களின் உண்டியல் பணம் முஸ்லிம்கள் ஹஜ் யாத்திரை செல்வதற்கும், சுவாமிக்கு சாற்றப்படும் தங்கம் மற்றும் வைர நகைகளை வங்கிகளில் முதலீடு செய்து, அதன்வாயிலாக கிடைக்கும் வட்டி தொகையை, அரசு கருவூலத்தில் வரவு வைத்து கொள்வதற்கு பெயர் தான் மதச்சார்பின்மையா? ஏழை - எளிய இஸ்லாமியர்களுக்காக கொண்டுவரப்பட்ட வக்ப் வாரிய சட்டம். அதன் சொத்துக்களை, நாடு முழுதும், 200- - 300 பேர் மட்டுமே அனுபவித்து வருகின்றனரே... இதை, வி.சி., கட்சி ஆதரிக்கிறதா? ஹைதராபாதில் மட்டும் 5,000 கோடி ரூபாய் மதிப்புள்ள சொத்துக்களை, ஏ.ஐ.எம்.,கட்சி தலைவர் அசாதுதீன் ஒவைசி முழுங்கி ஏப்பம் விட்டுள்ளதாக புகார் எழுந்துள்ளதே... இப்படி ஒரு சிலர் தங்கள் அதிகார பலத்தால் வக்ப் சொத்துக்களை அனுபவிப்பதை வரவேற்று, ஏழைகள் பயனடைந்து விடக்கூடாது என்பதற்காகத் தான், வி.சி., கட்சி ஆர்ப்பாட்டம் செய்கிறதா?திருத்தப்பட்ட இச்சட்டத்தை, தமிழ் மாநில முஸ்லிம் லீக் கட்சி முழு மனதுடன் வரவேற்பதாக அக்கட்சி தலைவர் ஷேக்தாவூத் கூறியுள்ளார். ஆரம்பத்தில் எதிர்ப்புக் காட்டிய, இண்டியா கூட்டணி கட்சியான, கேரளா மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் அரசே, புதிய வக்ப் சட்டத்தை இரண்டு மாதங்களில் நடைமுறைக்கு கொண்டு வரப்போவதாக அறிவித்துள்ளது.இஸ்லாமிய மக்களே அச்சட்ட திருத்தத்தை வரவேற்கும்போது, வக்ப் வாரியத்திற்கு கொஞ்சமும் சம்பந்தம் இல்லாத வி.சி., கட்சி வெற்று ஆர்ப்பாட்டம் நடத்துவது ஏன்?

மக்கள் ஏமாளிகள் அல்ல!

எஸ்.செபஸ்டின், சிவகாசியில் இருந்து அனுப்பிய, 'இ - மெயில்' கடிதம்: 'கடை தேங்காயை எடுத்து, வழிப் பிள்ளையாருக்கு உடைப்பது' போன்று, தி.மு.க., அரசு, மக்கள் வரிப்பணத்தில் மகளிர் உரிமைத் தொகை, மகளிர் விடியல் பயணம், விலையில்லா பொருட்கள் என வழங்கி வரும் நிலையில், நிதிநிலை சரியானபின், ஆண்களுக்கும் கட்டணமில்லா பேருந்தை விரிவுபடுத்தப் போவதாக அறிவித்துள்ளார், போக்குவரத்து துறை அமைச்சர் சிவசங்கர். பொதுவாக, யாசகம் கேட்பவர் என்றாலும், வயதானவர் மற்றும் மாற்றுத்திறனாளிகளாக இருந்தால் மட்டுமே மக்கள் பிச்சை இடுவர். உடல் ஆரோக்கியமாக இருந்தால், 'நன்றாகத் தானே இருக்கிறாய்... வேலைக்குப் போய் சம்பாதி' என்று சொல்லி, பிச்சையிட மாட்டார்கள். ஒருவேளை இத்திட்டம் நடைமுறைக்கு வந்தால், முதியோர் மற்றும் மாற்றுத்திறனாளிகளுக்கு மட்டும் பயண சலுகையை கொடுக்கலாம். அதைவிடுத்து, ஓட்டுக்காக ஆண்கள் அனைவருக்கும் கொடுத்தால், அது டாஸ்மாக் வருமானத்தை பெருக்கவே பயன்படும். பெண்களின் ஓட்டுகளைப் பெற மகளிர் உரிமைத் தொகை அளிப்பதுபோல், ஆண்களின் ஓட்டுகளைப் பெற, அவர்களுக்கு மூன்று வேளையும் அன்னதானம் வழங்கப்படும் என்று கூட அறிவிப்பர். என்ன... ஆண்கள் வேலைக்குப் போகாமல் வீட்டில் படுத்துவிட்டால், டாஸ்மாக் வருமானம் நின்று விடுமே என்பதால், அறிவிக்காமல் இருக்கின்றனர்!கடந்த சட்டசபை தேர்தலில், பொய்யான வாக்குறுதி கொடுத்து மக்களை ஏமாற்றியது போல், வரும் தேர்தலிலும் ஏமாற்ற நினைக்கின்றனர். ஆனால், மக்கள் எப்போதுமே ஏமாளிகளாக இருக்க மாட்டார்கள் என்பதை மறந்து விட்டனர்!


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

வாசகர்கள் கருத்துகள் ( 1 )

veeramani
ஏப் 16, 2025 09:07

திருமால்வளவன் அவர்களின் கூற்று ஏற்பு உடையது இல்லை. இந்திய குடி அரசில் அனைத்து மக்களும் சமம். வாக்குரிமை இந்துக்கள் முஸ்லிம்கள் கிறித்துவர்கள் சீக்கியர்கள் பயற்சி மக்கள் பௌத்தர்கள் அனைவருக்கும் ஒரே மதிப்புதான் அப்படி இருக்கையில் ஒருசாரார் அரசாங்க பலன்களை அனுபவிப்பது எப்படி சரியாகும். அப்படியென்றால் அரசு வேலைகளில். பள்ளிகளில் ஜாதி சார்ந்த இட ஒதுக்கீடு வேண்டாம் என இவர் சொல்லுவாரா எலெக்ஷனில்கூட ரி செர்வே தொகுதியில் போட்டியிடுபவர் பேசுவதற்கு மு ன் சிந்திக்கவேண்டு ம் .....


அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை