உள்ளூர் செய்திகள்

/ தினம் தினம் / இது உங்கள் இடம் / முதலைகள் எப்படி பிடிபடும்?

முதலைகள் எப்படி பிடிபடும்?

ஆர்.எஸ்.சுப்பிரமணி, விருதுநகரில் இருந்து அனுப்பிய, 'இ - மெயில்' கடிதம்: திருவண்ணா மலை மாவட்டத்தைச் சேர்ந்த சுதாகர், கோபாலகிருஷ்ணன், கோபிஉட்பட ஆறு பேர் சென்னை உயர் நீதிமன்றத்தில் ஒரு மனு தாக்கல் செய்துள்ளனர். ரயில்வே துறையில், வேலை வாங்கி தரு வதாக கூறி தர்மபுரியை சேர்ந்த ஸ்ரீகாந்தன் , பிரபாகரன் மற்றும் திருவண்ணாமலை மாவட்டத்தைச் சேர்ந்த தீபன், பழனி உள்ளிட்டோர் லட்சக்கணக்கில் பணம் பெற்று, போலி நியமன தேர்வு நடத்தி, பணி ஆணைகளையும் வழங்கி உள்ளனர். ஆனால், இவர்கள் நடத்திய தேர்வும் போலி, கொடுத்த பணி ஆணைகளும், 'டுபாக்கூர்' என்று தெரியவந்ததும், பாதிக்கப்பட்ட அனைவரும், 2015ல் மாவட்ட குற்றப்பிரிவில் புகார் அளித்துள்ளனர். இது தொடர்பான வழக்கு, மாவட்ட நீதிமன்றத்தில் நடந்து வந்துள்ளது. ஆனால், 10 ஆண்டுகளாக இந்த வழக்கில் ஒரு சென்டி மீட்டர் கூட முன்னேற்றம் இல்லை. அதாவது, போலீசார் இதுவரை இந்த வழக்கில் குற்றப் பத்திரிகையே தாக்கல் செய்யவில்லையாம். குற்றஞ்சாட்டப்பட்ட அனைவரும் அரசியல் பின்புலம் உள்ளவர்கள் போலும்! இவ்வழக்கை விசாரணைக்கு எடுத்து கொண்ட, சென்னை உயர் நீதிமன்ற நீதிபதி வேல்முருகன், 'சம்பவம் நடந்து, 10 ஆண்டுகள் கடந்த பின்பும் விசாரணை முடிவடையவில்லை. குற்றப்பத்திரிகையும் தாக்கல் செய்யப்படவில்லை. குற்றஞ் சாட்டப்பட்ட நபர்களுக்கு நீதிமன்றம் வழங்கிய ஜாமினை ரத்து செய்த போதும், அந்த உத்தரவை போலீசார் அமல்படுத்தவில்லை. 'குற்றஞ்சாட்டப்பட்டவர்கள் சுதந்திர மாக நடமாடுகின்றனர். இது, சிறிய தவறு அல்ல; குற்றவியல் சட்டத்தின் நோக்கத்திற்கு ஏற்பட்ட தோல்வி. 'கடமையில் இருந்து தவறும் அதிகாரிகள் அதற்கு பொறுப்பேற்கப்படுவர் என்பதை, பொதுமக்கள் அறிந்து கொள்ள வேண்டும். 'எனவே, குற்றப்பத்திரிகை தாக்கல் செய்யாத திருவண்ணாமலை மாவட்ட குற்றப்பிரிவு காவல் நிலையத்தில் பணியில் இருந்த அதிகாரிகளுக்கு எதிராக, துறை ரீதியான நடவடிக்கையை, டி.ஜி.பி., எடுக்க வேண்டும். பாதிக்கப்பட்ட மனுதாரர்களுக்கு அரசு இழப்பீடாக, 10 லட்சம் ரூபாயை சமமாக பிரித்து வழங்க வேண்டும். 'இந்த இழப்பீட்டு தொகையை சம்பந்தப்பட்ட காவல் நிலைய அதிகாரிகளின் ஊதியத்தில் இருந்து பிடித்தம் செய்ய வேண்டும்...' என்று உத்தரவிட்டுள்ளார். ஒரு சாதாரண ஏமாற்று பேர்வழிகளே காவல் துறையின் துணையோடு, சட்டத்தின் ஓட்டையை பயன்படுத்தி, தண்டனையிலிருந்து தப்பி இத்தனை ஆண்டுகளாக சுதந்திரமாக இருந்துள்ளனர் என்றால், முன்னாள் அமைச்சர் செந்தில் பாலாஜி போன்ற அரசியல் முதலைகள் எப்படி சட்டத்திற்குள் சிக்கி கூண்டுக்குள் அடைபடுவர்? சட்டமும், தண்டனையும் எளியவர்களுக்கு மட்டும் தான் என்பது எத்தனை நிதர்சனமாக உள்ளது!  பொதுமேடை அல்ல பார்லிமென்ட்! கே.ஆர்.பிரேம்குமார், பெங்களூரில் இருந்து அனுப்பிய, 'இ - மெயில்' கடிதம்: அரசியலமைப்பு ரீதியாக செயல்படும் மூன்று அமைப்புகளில் ஒன்றான தேர்தல் ஆணையத்திற்கு எதிரான, 'இண்டியா' கூட்டணியின் போராட்டம், ஜனநாயகத்தை கேலி செய்வதாக உள்ளது. ஓட்டுப் போடாமலா எதிர்க்கட்சியில் இத்தனை பேர் எம்.பி.,க்களாக உள்ளனர்? தொகுதி பிரச்னைகளை பேசி, அதற்கு தீர்வு காணுவர் என்று எண்ணி ஓட்டளித்து இவர்களை பார்லிமென்ட்டுக்கு அனுப்பினால், தேர்ந்தெடுத்த வாக்காளர்களையே அவமதிக்கின்றனர். அதிகார பீடத்திற்கு வர முடியவில்லையே என்ற இயலாமையிலும், மோடி மீதான பொறாமையிலும் காங்., - எம்.பி., ராகுல், பார்லிமென்டை தெரு மேடையாக பாவித்துக் கொண்டு இருக்கிறார். லோக்சபா தேர்தல் முடிந்து ஓராண்டுக்கும் மேல் ஆகிவிட்டது. இவர்களில் எத்தனை பேர் தொகுதி முன்னேற்றத்திற்காக லோக்சபாவில் குரல் கொடுத்துள்ளனர்? ஒன்று சபையை முடக்கு வது அல்லது வீதியில் இறங்கி போராடுவது இதற்குத் தானா இவர்களை எம்.பி.,க்களாக தேர்ந்தெடுத்தனர்? 'தேர்தல் முறைகேடு ஏதும் நடக்கவில்லை, நடக்க வாய்ப்பும் இல்லை' என தேர்தல் ஆணையம் பலமுறை விரிவாக விளக்கி விட்டது. அப்படியே முறைகேடு நடந்திருந்தால், அதுகுறித்த விசாரணைக்கு நீதி மன்றத்தை நாட வேண்டுமே தவிர, இப்படி தொ ழிற் சங்கங்கள் போல், வீதிகளில் போராட்டம் நடத்தி, ஜனநாயகத்தையும், ஓட்டளித்த மக்களையும் அவமதிக்கக் கூடாது! கற்பனை கதைகளை எல்லாம் கட்டவிழ்த்து, அரசியல் செய்ய பார்லி மென்ட் ஒன்றும் பொது மேடை அல்ல; தொகுதி பிரச்னைகளை பேசத்தான் , மக்கள் உறுப்பினர்களை தேர்ந்தெடுத்து அனுப்பியுள்ளனரே தவிர, அரசியல் லாபத்திற்காக எம்.பி.,க்கள் செய்யும் அலப்பறைகளை கண் டுகளிக்க அல்ல!  மாற்றமே முன்னேற்றம்! எஸ்.சித்ரா, பழனிசெட்டி பட்டி, தேனியில் இருந்து எழுதுகிறார்: வரும் 2026 சட்டசபை தேர்தலுக்கான ஓட்டு அறுவடைக்கு கட்சிகள் தயாராகி விட்டன. இனி இலவச அறிவிப்புகள், கலர் கலராக வாண வேடிக்கை காட்டும்! 'பாருங்கள் எங்கள் ஆட்சியை... பெண்களுக்கு இலவச பஸ் பயணம். மாணவ - மாணவியருக்கு மாதாந்திர உதவித்தொகை என அனைத்தும் இலவசமாக தரும் இது அல்லவோ பொற்கால ஆட்சி! 'காமராஜர் என்ன பெரிதாக சாதித்து விட்டார்... முதல்வர் ஸ்டாலின், தமிழகத்தை உலகின் நம்பர் ஒன் மாநிலமாக மாற்றியுள்ளார். அந்த காமராஜருக்கே, 'டப்' கொடுக்கும், வாழும் காமராஜர் எங்கள் ஸ்டாலின்...' என்று வீதிதோறும், 'மைக்' போட்டு பேசுவர் தி.மு.க.,வினர். தி.மு.க., ஆட்சியில் அமர்ந்த இந்த நான்கரை ஆண்டுகளில் லஞ்சம் - ஊழல் ஆறாக ஓடவில்லை; மாறாக, கடலாகவே மாறி விட்டது. பணம் இல்லாமல் எதுவும் நடப்பதில்லை. பிறப்பு முதல் இறப்பு வரை பணம் தான்! சட்டம் - ஒழுங்கோ கோமாவில் விழுந்து குப்புறக்கிடக்க, போதைப் பொருட்கள் ஆரஞ்சு மிட்டாய் போல் பெட்டிக் கடைகளில் கூட தாராளமாக கிடைக்கிறது. டாஸ்மாக் கடைகளில், சிறுவனுக்கும், 80 வயது பெரியவருக்கும் சண்டை... யார் முதலில் மது பாட்டிலை வாங்குவது என்று! இதுதான், இரண்டு திராவிட கட்சிகளின் ஆட்சியில் தமிழகத்தில் நிகழ்ந்துள்ள மாற்றம்! காங்., - கம்யூ., - வி.சி., போன்ற தி.மு.க., கூட்டணி கட்சிகளோ, மக்கள் பிரச்னை களுக்கு மவுனம் சாதிப்பதும், தி.மு.க.,வின் அராஜகத்திற்கு ஜால்சாப்பு சொல்லி ஜால்ரா போடுவதும் என, தங்கள் ஜனநாயக கடமையை செவ்வனே ஆற்றி வருகின்றன. பாவம் அவர்கள் என்ன செய்வர்? கூட்டணியை பகைத்துக் கொண்டால், சீட்டு, நோட்டும் பெற்று பெட்டியை நிரப்ப முடியாதே! எனவே, மக்கள் தான் இந்த அரசியல் வியாபாரிகளிடம் விழிப்புணர்வுடன் இருக்க வேண்டும். கட்சி பாராமல், தொகுதிக்கு நல்லது செய்பவர் எவர் என்று ஆராய்ந்து பார்த்து ஓட்டளிக்க வேண்டும்! மாற்றமே முன்னேற்றத் திற்கான அடித்தளம் என்பதை மக்கள் நினைவில் கொள்ள வேண்டும்! 


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

வாசகர்கள் கருத்துகள் ( 1 )

D.Ambujavalli
ஆக 20, 2025 17:01

நாளை நம் தொகுதியிலும் இத்தகைய வாக்காளர் பட்டியல் பெயர் இணைப்பு, அழிப்பு நடத்திதான் வெற்றி பெறப்போகிறார்கள் தேர்தல் ஆணையத்திடம் நேர்மையான பதில் இல்லை ஆனால் ராகுல், தெருவில் கூச்சலிடாமல், கோர்ட்டுக்குப் போயிருக்கலாம் தான் ஆனால் நீதிபதிகளின் நேர்மையே கேள்விக்குறியாக உள்ள நிலையில் உண்மை எப்படி வெளிவரும்


அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை