உள்ளூர் செய்திகள்

/ தினம் தினம் / இது உங்கள் இடம் /  தீர ஆலோசிப்பது நல்லது முதல்வரே!

 தீர ஆலோசிப்பது நல்லது முதல்வரே!

ஜி.லட்சுமி ராஜ், கூத்தப்பாக்கம், கடலுாரில் இருந்து அனுப்பிய, 'இ - மெயில்' கடிதம்: பள்ளிகளில் சிக்கன் பிரியாணி வழங்கும் கோரிக்கை பரிசீலனையில் உள்ளதாக, பள்ளிக் கல்வித் துறை அமைச்சர் கூறியுள்ளார்.கிராமப்புற ஏழை மாணவர்களை பள்ளிக்கு வரவழைக்க உதவும் என்ற வகையில், இது வரவேற்கப்பட வேண்டிய திட்டம் தான் என்றாலும், இத்திட்டத்தை செயல்படுத்துவதில் பல நடைமுறை சிக்கல்களும், ஏன் ஆபத்தும் கூட உண்டு.பள்ளிகளில் முட்டை விநியோகத்திலேயே, ஆங்காங்கே அழுகிய முட்டைகள் வினியோகிக்கப்பட்டு, அதனால், மாணவர்கள் உடல் உபாதைக்கு ஆளாகும் செய்திகள் வெளிவந்து கொண்டிருக்கின்றன.அழுகிய முட்டையை சாப்பிட்டால், வாந்தி, பேதி, மயக்கத்துடன் முடிந்து விடும்; அதுவே கெட்டுப் போன கோழி இறைச்சியில் சமைத்த உணவு என்றால், உயிருக்கே ஆபத்தாகி விடும்.அப்படி ஓர் அசம்பாவிதம் ஏற்படாது என்று கூற முடியாது. ஏனெனில், பள்ளி சத்துணவு அமைப்பாளர்கள் பலர் மதிய உணவுக்கான காய்கறிகளை வாங்கும் போதே, விலை மலிவாக கிடைப்பதால், அழுகிய, சொத்தைக் காய்கறிகளை வாங்கி, அதற்காக அரசு கொடுக்கும் பணத்தை பதுக்குகின்றனர் எனும்போது, மாமிச உணவை எந்த அளவு தரத்துடன் தயாரிப்பர் என்பது மிகப் பெரிய கேள்விக்குறி!சத்துணவு அமைப்பாளர்களின் பேராசை மற்றும் சமைப்பவர்களின் அஜாக்கிரதையால் ஏதேனும் ஓர் அசம்பாவிதம் நடந்தால், அது, தமிழக வெற்றிக் கழக அரசுக்கு மிகப் பெரிய அவப் பெயரை ஏற்படுத்தி விடும்.இவை எல்லாவற்றிற்கும் மேலாக, சிக்கன் அதிகம் சாப்பிடுவதால், உடல் பருமன் பிரச்னையுடன், நான்காவது, ஐந்தாவது படிக்கும் போதே சிறுமியர் பூப்படையும் பிரச்னையையும் தற்போது சிறார்கள் சந்தித்து வருகின்றனர். இதையும் அரசு கவனத்தில் கொள்ள வேண்டும்.அத்துடன், கோழி எப்போது வெட்டப்பட்டது, கோழிக்கு தொற்று உள்ளதா, முறையாக பராமரிக்கப்பட்டதா என்பதை எல்லாம் கண்காணிக்க தவறினால், மிகப் பெரிய ஆபத்தில் முடிந்து விடும்.எனவே, முதல்வர் இத்திட்டத்தை செயல்படுத்தும் முன், தீர ஆலோசிப்பது நல்லது!

இயற்கை கொடுக்கும் கொடை போதுமே!

கு.அருண், கடலுாரில் இருந்து அனுப்பிய, 'இ - மெயில்' கடிதம்: தமிழகத்தில் கிட்டத் தட்ட, 1.06 லட்சம் நீர்நிலைகள் இருந்ததாக கூறப்படுகிறது. அவற்றில் 50,197 நீர்நிலைகள் இன்று காணாமல் போய் விட்டன. இருக்கும் நீர் நிலைகளும் பெரும்பாலும் ஆக்கிரமிப்புகள் செய்யப்பட்டும், துார்வாரப்படாமலும் கிடக்கின்றன; இதனால், மழைநீர், வீணாக கடலில் கலக்கிறது. அதை கைகட்டி வேடிக்கை பார்த்து விட்டு இன்று, நீர் தேவைக்கு அண்டை மாநிலங்களிடம் கையேந்தி நிற்கிறோம். தற்போது, கர்நாடகாவில் கனமழை பெய்து வருவதால், வேறு வழியின்றி அணையை பாதுகாத்துக் கொள்ள, கபினி அணையிலிருந்து வினாடிக்கு, 25,000 கன அடி உபரி நீரை வெளியேற்றி வருகிறது, அம்மாநில அரசு. இப்படி கிடைக்கும் நீரை கூட சேமிக்க தவறி விடுகிறோம். கடந்த 1961ல் காம ராஜர் ஆட்சியில், வெள்ளப் பெருக்கால் மேட்டூர் அணை நிரம்பி, உபரி நீர் கடலில் கலந்து வீணாகி வந்தது. அதனால், ஒகேனக்கல்லில் இருந்து, 18 கி.மீ., தொலைவில், கிருஷ்ணகிரி மாவட்டம், அஞ்செட்டி வனப்பகுதியில் ராசி மணல் என்ற இடத்தில் அணை கட்டவும், ஊட்டி மலையில் அணை கட்டி தண்ணீரை தேக்கி, மின் உற்பத்தி செய்யவும் திட்டம் தீட்டி அடிக்கல் நாட்டினார், அன்றைய முதல்வர் காமராஜர். அதற்கான பணிகளும் துவங்கப்பட்ட நிலையில், நிதி பற்றாக்குறை காரணமாக, அத்திட்டம் கிடப்பில் போடப்பட்டது. மறைந்த முன்னாள் முதல்வர் எம்.ஜி.ஆர்., ஆட்சிக்காலத்திலும் இத்திட்டத்தை செயல்படுத்த முயற்சி எடுக்கப்பட்டு, நின்று போனது. எனவே, காமராஜரை கொள்கை தலைவர்களில் ஒருவராக ஏற்று, ஆட்சி செய்து வரும் தமிழக முதல்வர் விஜய், இந்த அணையை கட்டினால், 50 முதல், 100 டி.எம்.சி., தண்ணீரை சேமிக்க முடியும். கூடவே, மழைநீர் கடலில் கலந்து வீணாவதை தடுக்க, தேவையான இடங்களில் தடுப்பணைகளை கட்ட வேண்டும்; இருக்கும் நீர்நிலைகளில் உள்ள ஆக்கிரமிப்புகளை அகற்றி, துார் வாரினால், விரைவில் வரவுள்ள வடகிழக்கு பருவமழையில் கிடைக்கும் நீரை சேமிக்க முடியும். இயற்கை நமக்கு கொடுக்கும் மழை எனும் கொடையை, நாம் இரு கரம் நீட்டி பத்திரப் படுத்தினாலே போதும்; பக்கத்து மாநிலங்களிடம் கையேந்தும் நிலை ஏற்படாது!

பகல் கனவு காண வேண்டாம் அன்புமணி!

பொ.ருக்மணி, கூடங்குளம், நெல்லை மாவட்டத்தில் இருந்து அனுப்பிய, 'இ - மெயில்' கடிதம்: 'நம் கட்சிக்கென்று தொலைநோக்கு பார்வை, கொள்கைகள் என்று, ஒரு தனித்துவம் இருக்கிறது. அந்த நம்பிக்கையுடன் கூறுகிறேன்... 2031ல் தமிழகத்தில், பா.ம.க., ஆட்சி அமைக்கும்' என்று கூறியுள்ளார், பா.ம.க., தலைவர் அன்புமணி. கடந்த 1980ல் வன்னியர் சங்கத்தை துவக்கிய டாக்டர் ராமதாஸ், இட ஒதுக்கீடு கேட்டு நடத்திய போராட்டத்தில் ஏகப்பட்ட மரங்களை வெட்டி வீழ்த்தினார். அப்போது ஏற்பட்ட கலவரத்தில், துப்பாக்கி சூட்டில் பலர் உயிர் இழந்தனர். அதையே காரணமாக வைத்து, வன்னியர் சங்கத்தை, பா.ம.க., என்ற அரசியல் கட்சியாக மாற்றினார், ராமதாஸ். அச்சமயம், 'நானோ, என் குடும்பத்தினரோ தேர்தலில் போட்டியிட மாட்டோம்; அப்படி ஒருவேளை நிகழ்ந்தால், என்னை முச்சந்தியில் நிறுத்தி சவுக்கால் அடியுங்கள்' என்று வசனம் பேசினார். பின், மக்கள் அதை மறந்திருப்பர் என்று நினைத்து, தன் மகன் அன்புமணியை எம்.பி.., யாகவும், மத்திய அமைச்சராகவும் ஆக்கி, தி.மு.க., பாணியில் வாரிசு அரசியல் செய்தார். மகனை தொடர்ந்து, பேரன் பரசுராமன் முகுந்தனை இளைஞரணி தலைவராக்க, அதை எதிர்த்து மகன் அன்புமணி போர்க்கொடி துாக்க, கட்சியை கைப்பற்ற தந்தைக்கும், மகனுக்கும் நடந்த போட்டியை தமிழகமே கண்டு களித்தது. மேலும், ஆட்சி அதிகாரத்திற்காக தேர்தலுக்கொரு கூட்டணி வைத்தவர், ராமதாஸ். இதில், தனித்துவமும், தொலைநோக்கு பார்வையும் எங்கே இருக்கிறது? அதுமட்டுமின்றி, 'வன்னியர் ஓட்டு, அன்னியர்க்கு இல்லை' என்று கூறி, பா.ம.க., மீது ஜாதிக் கட்சி முத்திரையை குத்தியாகி விட்டது. இந்நிலையில் அன்னியர்கள் எப்படி, பா.ம.க.,வுக்கு ஓட்டு போடுவர்? ஜாதியை மட்டுமே நம்பி கட்சி ஆரம்பித்ததால் தான், 37 ஆண்டுகளை கடந்தும், வடமாவட்டங்களை தவிர்த்து தென் மாவட்டங்களில், பா.ம.க., வளர முடியவில்லை. இதற்கு மேலும் வளர்ந்து ஆட்சியை பிடிக்க, அது இன்று வரை அனைத்து தரப்பு மக்களுக்குமான கட்சியாக இருக்கவில்லையே! எனவே, ஜாதிக் கட்சியான பா.ம.க., 2031ல் தமிழகத்தில் ஆட்சி அமைக்கும் என்று அன்புமணி காண்பது, பகல் கனவே!


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

வாசகர்கள் கருத்துகள் ( 5 )

Kuppan
ஆக 07, 2026 20:33

சிக்கன் பிரியாணி, முட்டை போடுவதற்கு பதிலாக புரதச் சத்துக்கள் நிறைந்த கலப்பு கடலை சுண்டல், சிறுதானிய வகைகள் போன்ற இயற்கை உணவுகள் வழங்கினால் குழந்தைகளின் உடல் நலம் நன்றாக இருக்கும். மேலும், நம் தமிழகம் பல சித்தர்களையும், அறிஞர்களையும், வள்ளலார் போன்றோர் உருவாக்கிய நாடு என்பதை கவனத்தில் கொள்ளவேண்டும். அசைவ உணவுகள் மனிதனை மிருகமாக்கும் இது வருங்கால சந்ததியினருக்கு ஏற்றதல்ல


Kuppan
ஆக 07, 2026 20:33

சிக்கன் பிரியாணி, முட்டை போடுவதற்கு பதிலாக புரதச் சத்துக்கள் நிறைந்த கலப்பு கடலை சுண்டல், சிறுதானிய வகைகள் போன்ற இயற்கை உணவுகள் வழங்கினால் குழந்தைகளின் உடல் நலம் நன்றாக இருக்கும். மேலும், நம் தமிழகம் பல சித்தர்களையும், அறிஞர்களையும், வள்ளலார் போன்றோர் உருவாக்கிய நாடு என்பதை கவனத்தில் கொள்ளவேண்டும். அசைவ உணவுகள் மனிதனை மிருகமாக்கும் இது வருங்கால சந்ததியினருக்கு ஏற்றதல்ல


selvanathan xavier
ஆக 07, 2026 11:05

ஸ்கூல் போவ்ட் அசிடிவிட்டீஸ் ஒன்ஸ் மோர் திங்க் இந்த மீ ஒப்பீனியன் th


ponssasi
ஆக 06, 2026 14:08

நான் பாமக இல்லாவிடினும் அன்புமணி அவர்களின் பேச்சால் ஈர்க்கப்பட்டவன் அவரின் பேச்சில் ஒரு உண்மை, நேர்மை இருக்கும் அவர்களின் நிழல் பட்ஜெட் மிக சிறந்த ஒரு பட்ஜெட் விவசாயம் கல்வி வேலைவாய்ப்பில் ஒரு முன்னூதாரமான பட்ஜெட் ஆனால் என்னால் ஒருபோதும் பமாகாவிற்கு வாக்களிக்க மனம் வரவில்லை. காரணம் அவர்கள் வன்னியர் தவிர யாரையும் ஏற்பதில்லை. அது இன்று பள்ளி மாணவர்களிடம் வேரூன்றிவிட்டது.


Anantharaman Srinivasan
ஆக 06, 2026 23:57

Ponssasi.. நீ என்ன சொல்ல நினைத்து என்ன சொல்லியிருகே..? அன்புமணியும் ஒரு சராசரி அரசியல்வாதியே.நேர்மையாளன் கிடையாது. மத்திய அமைச்சர் பதவியில் செய்த ஊழல் வழக்கு இருக்கிறது.


முக்கிய வீடியோ