கருணாநிதியின் மரியாதை பேச்சு!
பி.என்.கபாலி, சென்னையில் இருந்து அனுப்பிய, 'இ - மெயில்' கடிதம்: 'மரியாதையாக பேசுவது எப்படி என்பதை கருணாநிதியிடம் கற்றுக் கொண்டேன்' என்று கூறியுள்ளார், நடிகை குஷ்பு. 'அரசியல்வாதிகளின் நகைச்சுவை பேச்சுகள்' என்ற பகுதியில் இடம்பெற வேண்டிய பொன்னான கருத்து இது! திராவிடர் கழகத்திலிருந்து, தி.மு.க., பிரிந்த சமயம், ஈ.வெ.ரா., குறித்து கருணாநிதி பேசியதும், எழுதியதும் அச்சில் ஏற்ற முடியாத மூன்றாம் தரமானவை. அதனால், அவற்றை தவிர்த்து, பிற அரசியல் தலைவர்கள் குறித்து கருணாநிதி எப்படி மரியாதையாக பேசினார் என்பதை பார்க்கலாம்... மூதறிஞர் ராஜாஜியை, 'குல்லுக பட்டர், குள்ளநரி' என்று ஏசியவர், கர்மவீரர் காமராஜரை, 'எருமைத் தோலன், மரமேறி, கருவாட்டுக்காரியின் மைந்தன்' என்று மிகவும், 'மரியாதையாக' குறிப்பிட்டவர் கருணாநிதி. அதுமட்டுமல்ல... 'முன்பெல்லாம் ரஷ்யாவிற்கு எருமை மாடுகள் தான் ஏற்றுமதி செய்யப்பட்டன; தற்போது, காமராஜர் அங்கு செல்கிறார்' என்று கூறியனார். இவற்றில் எதுவுமே காமராஜரின் அரசியல் குறித்தோ, அவரது செயல்பாடுகள், கொள்கை குறித்தோ கூறப்பட்ட விமர்சனங்கள் அல்ல. மிகவும் கீழ்த்தரமான சிந்தனை உள்ளவர்கள் பேசும் உருவ கேலி பேச்சுக்கள்! முன்னாள் பிரதமர் நேருவும், அப்போதைய இலங்கை அதிபர் சிறிமாவோ பண்டாரநாயக்காவும் இருநாடுகளுக்கு இடையிலான பேச்சுவார்த்தையில் ஈடுபட்டபோது, 'மனைவியற்ற நேருவும், கணவரற்ற பண்டாரநாயக்காவும் தனியாக என்ன செய்து கொண்டிருப்பர்?' என்று, தன் அசிங்கமான கற்பனையை அவிழ்த்து விட்ட உத்தமர் தான் கருணாநிதி. சட்டசபையில், 'திராவிட நாடு எங்கிருக்கிறது' என்று கேட்ட காங்கிரஸ் எம்.எல்.ஏ., அனந்தநாயகியை, 'நாடாவை அவிழ்த்துப் பார் தெரியும்' என்று சொன்ன ஆபாச பேச்சுக்கு சொந்தக்காரர். மலையாளி, குழந்தை பெற தகுதியற்றவர், ஊமை என்றெல்லாம் எம்.ஜி.ஆரை ஏசினார். தி.மு.க., குண்டர்கள் தாக்கியதில் நெற்றியில் காயம் பட்டு ரத்தம் சிந்திய முன்னாள் பிரதமர் இந்திராவை, 'அம்மையாருக்கு மாதவிலக்காக இருக்கும்' என்று அருவருப்பாக குறிப்பிட்டவர் தான் கருணாநிதி. முன்னாள் முதல்வர் ஜெயலலிதா குறித்து இவர் பேசியவை எல்லாம் ஏட்டில் எழுத முடியாதவை. அந்தளவு நாகரிகமான, மரியாதையான பேச்சுக்கு சொந்தக்காரர் கருணாநிதி. அவரிடம், 'மரியாதையாக பேசுவதை கற்றுக் கொண்டேன்' என்று நடிகை குஷ்பு சொல்வதில் இருந்து, அவருக்கு பா.ஜ., அலுத்துவிட்டது என்றே எண்ணத் தோன்றுகிறது. இனி, பா.ஜ.,வில் தொடர்வதில் பயனில்லை என்று எண்ணியிருக்கலாம் குஷ்பு. இதுவரை, மூன்று முறை கட்சி மாறிவிட்டார். அதன்படி, தற்போது அவரது கடைக்கண் தி.மு.க., பக்கம் சென்றுள்ளது. அதை உணர்த்தவே இப்படி ஒரு, 'பிட்'டை போட்டுள்ளார்! lll அறநிலையத் துறை யோசிக்குமா? ஆர்.பார்த்தசாரதி, சென்னையில் இருந்து அனுப்பிய, 'இ - மெயில்' கடிதம்: மக்கள் கோவிலுக்கு செல்வது இறைவனை தரிசிக்க; அறநிலையத்துறைக்கு வருமானம் ஈட்டிக் கொடுக்க அல்ல! ஒரு சில நிமிடங்கள் இறைவனை தரிசித்தால் போதும்; மனம் திருப்தி அடைந்து விடும். ஆனால், பிரசித்தி பெற்ற கோவில்களில் சுவாமி தரிசனம் சில நிமிடங்கள் என்பது சில வினாடியாக மாறிவிட்டது. இது தவிர்க்க முடியாது என்றாலும், அந்த குறைந்த நேரத்திலாவது பக்தர்கள் இறைவனை தரிசிக்க வழிவகை செய்ய வேண்டும் அல்லவா... அதைக்கூட செய்ய முடியவில்லை என்றால், எதற்கு கோவில் செயல் அலுவலர்? திருச்சி ஸ்ரீரங்கம் ரங்கநாதர் சன்னிதியில், வினாடி நேரம் கூட தரிசிக்க விடாமல், அறநிலையத்துறை அலுவலர்கள் முரட்டுத்தனமாக நடந்து கொள்கின்றனர். பெண் காவலர்களோ பக்தர்கள் ஏதோ சுவாமியின் ஆபரணங்களை கொள்ளையடிக்க வந்து விட்டது போல், கையைப் பிடித்து இழுத்து வெளியே தள்ளுகின்றனர். ஸ்ரீரங்கத்தை விட பலமடங்கு கூட்டம் வரும் திருப்பதியில் வரிசையில் நகர்ந்தவாறே சுவாமியை நன்றாக தரிசிக்க முடிகிறது. அதேபோன்று தமிழகத்தின் பிரசித்தி பெற்ற கோவில்களிலும் மக்கள் கூட்டத்தை ஒழுங்குபடுத்தி, சுவாமியை தரிசிக்க வழிவகை செய்யலாம் அல்லவா? உதாரணத்திற்கு, ஸ்ரீரங்கம் ரங்கநாதர் கோவிலில், கருடன் சன்னிதியில் இருந்து கர்ப்பகிரகத்தைப் பார்த்தவாறே நேராக கூட்டம் முன்னோக்கி நகர்வது போல் ஏற்பாடுகள் செய்திருந்தால், அனைவரும் கூட்டத்தில் நகர்ந்தபடியே சுவாமியை தரிசிக்க முடியும். இதுபோன்று எந்த ஒழுங்குமுறையும் செய்யாமல், கூட்டத்தை கட்டுப்படுத்துகிறேன் என்ற பெயரில் சுவாமியை தரிசிக்க விடாமல், அநாகரிகமாக கைகளை பிடித்து இழுத்து அப்புறப்படுத்துவது சரியா? பக்தர்களுக்கு இதுபோன்ற வசதிகளை செய்து தருவதற்கு தான், அறநிலையத்துறை உள்ளதே தவிர, கூட்டத்தை பயன்படுத்தி டிக்கெட் விற்று வருமானம் ஈட்ட அல்ல என்பதை சம்பந்தப்பட்ட அதிகாரிகள் உணர்ந்து கொள்ள வேண்டும்! lll ராணுவ கோர்ட்டில் நிறுத்துங்கள்! ஆர்.பொன்னையா, புதுச்சேரியில் இருந்து அனுப்பிய, 'இ - மெயில்' கடிதம்: டில்லி செங்கோட்டை அருகே நடந்த பயங்கரவாத தாக்குதலுக்கு காரணமான அனைவரும் டாக்டர்கள் என்று அறிந்தபோது, மனம் கசந்து போனது. உயிர்களை காக்கவேண்டியவர்கள், உயிர்களை கொல்லும் ரத்தவெறி பிடித்தவர்களாக இருக்கின்றனர் என்றால், அவர்கள் எந்த அளவு மதவெறி பிடித்தவர்களாக இருக்க வேண்டும்! போலீசாரின் சந்தேக பார்வை டாக்டர் போன்ற உயர் பதவிகளில் இருப்போர் மீது விழாது என்பதால், பயங்கரவாத செயல்களுக்கு துணை போயுள்ளனர். இதில், பயங்கரவாத பெண்கள் பிரிவுக்கு பெண் டாக்டர் ஒருவர் தலைவராக செயல்பட்டுள்ளார். இத்தாக்குதல் தொடர்பாக, ஐந்து டாக்டர்களை போலீசார் கைது செய் துள்ளனர். இந்நாட்டு மக்களின் வரிப்பணத்தில் படித்து, இம்மண்ணில் வாழ்ந்து கொண்டு, இந்நாட்டிற்கு துரோகம் செய்யும் இதுபோன்ற தேசத்துரோகிகள் உயிர் வாழ தகுதி அற்றவர்கள். டாக்டர் என்ற பட்டமும், அது கொடுக்கும் பிரபலமும் இந்த கிரிமினல்களுக்கு, பயங்கரவாத செயல்களை நடத்த பேருதவியாக இருந்துள்ளன. இவர்களுக்கு உச்ச நீதிமன்றம் உட்பட எந்த நீதிமன்றத்திலும் உடனடி தண்டனை கிடைக்காது. இவர்கள் ஜாமீன் மனு போட்டால், அதையும் அனுமதித்து ஜாமீன் வழங்கும், நீதிமன்றம். சிவில் நீதிமன்றங்களில் வாய்தா மேல் வாய்தா வாங்கி ஆண்டுக்கணக்கில் வழக்கை இழுத்தடித்து, பின், சட்டத்தின் சந்து பொந்துகளில் நுழைந்து தப்பி விடாமல் இருக்க வேண்டும் என்றால், இந்த தேசத்துரோகிகளை ராணுவ கோர்ட்டில் நிறுத்த வேண்டும். அவர்களால் மட்டுமே இவர்களுக்கு உடனடி தண்டனை வழங்க முடியும்! செய்யுமா மத்திய அரசு? lll