உள்ளூர் செய்திகள்

/ தினம் தினம் / இது உங்கள் இடம் /  கருணாநிதி பேச்சு; ஸ்டாலின் மூச்சு!

 கருணாநிதி பேச்சு; ஸ்டாலின் மூச்சு!

அ.அண்ணா அன்பழகன், அந்தணப்பேட்டை, நாகை மாவட்டத்திலிருந்து அனுப்பிய, 'இ - மெயில்' கடிதம்: 'காவல் துறையின் செயல்பாடுகள் எல்லாம், தலைமையை பொறுத் துத்தான் அமையும். ஆட்சியாளர்கள் மோசமாக இருந்தால், காவல் துறையின் செயல்பாடுகளும் அப்படித்தான் இருக்கும். கடமை, கண்ணியம், கட்டுப்பாடு, பழிவாங்கும் உணர்ச்சி இல்லாமல் செயல்படுவது தான், ஒரு நல்ல நிர்வாகத்திற்கு அடித்தளம். இவை எதுவும், இந்த ஆட்சியில் இல்லை. அதனால், காவல் துறையிடமும் அது இல்லை. காவல் துறையை சட்டம் - ஒழுங்கை பராமரிக்க பயன்படுத்தாமல், ஆட்சியாளர்கள் தங்கள் இஷ்டப்படி ஆட்டிப்படைத்தால், காவல்துறையின் செயல்பாடுகள் இப்படித்தான் இருக்கும். 'தமிழக அமைச்சர்கள் எவராவது தங்கள் துறையைச் சேர்ந்த மத்திய அமைச்சர்களை பார்த்து, தமிழக நலனுக்கு ஏதாவது பேசி வாங்கி இருக்கின்றனரா? ஒரு முதல்வர் போய் மத்திய அமைச்சரை பார்ப்பதா என்று கவுரவம் பார்க்கின்றனர். இதில், என்ன கவுரவம் வேண்டி கிடக்கு?' - இப்படி, கடுமையாக தமிழக அரசை விமர்சித்துள்ளவர், தமிழக பா.ஜ., முன்னாள் தலைவர் அண்ணாமலையோ, அ.தி.மு.க., பொதுச்செயலர் பழனிசாமியோ, நாம் தமிழர் கட்சி ஒருங்கிணைப்பாளர் சீமானோ அல்ல... மறைந்த முன்னாள் முதல்வர் கருணாநிதி தான், ஜெயலலிதா ஆட்சியை இப்படி விமர்சித்தார் அன்று! அவரின் அன்றைய பேச்சு, இன்று அப்படியே அவரது புதல்வர் ஆட்சிக்கு பொருந்தி வருகிறது அல்லவா! மக்கள் சுதாரிக்க வேண்டிய சரியான நேரம் இது!

தங்க தராசில் உட்கார்ந்துள்ள 'ஈ' யார்?

டி.ஈஸ்வரன், சென்னை யிலிருந்து அனுப்பிய, 'இ - மெயில்' கடிதம்: விருதுநகர் தொகுதி காங்கிரஸ் எம்.பி., மாணிக்கம் தாகூர், 'தொகுதி பங்கீடு மட்டுமல்ல, அதிகாரப் பகிர்வு குறித்தும் விவாதிக்க வேண்டிய நேரம் வந்துவிட்டது' என்று கூறியதற்கு பதிலடி கொடுக்கும் வகையில், தி.மு.க.,வின் செய்தி தொடர்புக் குழு துணைத் தலைவர் மருது அழகுராஜ், 'தவிட்டுக் கடை தராசின் மீது உட்காரும், 'ஈ'க்கு மதிப்பு கிடையாது; ஆனால், தங்க நகைக்கடை தராசில் உட்காரும், 'ஈ' சில ஆயிரம் ரூபாய்க்கான மதிப்பை பெற்று விடும். 'தி.மு.க., என்பது தங்க நகைக்கடை தராசு...' என்று, கவிதை வெளியிட்டுள்ளார். அ.தி.மு.க.,வையும், பா.ஜ.,வையும் கடுமையாக விமர்சனம் செய்து, 'என்ன நாஞ் சொல்றது?' எனும் வாக்கியத்தில் கவிதை வெளியிட்டு வரும் அழகுராஜ், இப்போது காங்கிரசை விமர்சனம் செய்துள்ளார். ஜெயலலிதா, சசிகலா, பன்னீர்செல்வம், பழனிசாமி ஆகியோர், அ.தி.மு.க., என்னும் தங்க நகைக்கடையை நடத்தியபோது, அதன் தராசின் மீது மருது அழகுராஜ் என்ற, 'ஈ' அமர்ந்து கொண்டு, பல ஆயிரம் ரூபாய்க்கான மதிப்பை பெற்றது. அந்நகைக்கடை இப்போது அவர் பார்வையில் தவிட்டுக் கடையாக மாறிவிட்டது போலும்; அதனால் தான், இனி அந்த தராசில் அமர்ந்தால் மதிப்பு இல்லை என நினைத்து, தி.மு.க., எனும் தங்க நகைக்கடை மீது அமர்ந்து கொண்டு, சில ஆயிரம் ரூபாய்க்கான மதிப்பை பெற்று வருகிறார். முன்பு, அ.தி.மு.க.,வின் புகழ்பாடி கவிதை வெளியிட்ட மருது அழகுராஜ், இப்போது தி.மு.க.,வின் புகழ்பாடி கவிதை வெளியிட்டு வருகிறார். எனவே, இவர் எழுதியுள்ள, 'ஈ' கவிதை, காங்., மாணிக்கம் தாகூருக்கு பொருந்துதோ இல்லையோ, இவருக்கு கனகச்சிதமாக பொருந்துகிறது... என்ன நாஞ் சொல்றது?

நாய்கள் பிரச்னைக்கு மாநில அரசுகள் தான் தீர்வு கொடுக்கணும்!

அ.குணசேகரன், புவனகிரி, கடலுார் மாவட்டத்திலிருந்து அனுப்பிய, 'இ - மெயில்' கடிதம்: எந்த உயிரினத்தையும் நாம் கொல்வது இல்லை. கொடிய விஷம் கொண்ட பாம்பைக் கண்டால் கூட, பாம்பு பிடிப்பவரை வரவழைத்து காட்டிற்கு எடுத்துச் செல்லச் சொல்கிறோம். ஆனால், நம் உயிரைப் பலிவாங்கும், உடல் உறுப் பு களைச் சேதம் செய்யும் வெறி பிடித்த நாய்களை, நம்மால் முற்றிலும் ஒழிக்க முடியவில்லை. சாதாரண தெரு நாயாக இருக்கும் வரை பிரச்னை இல்லை; அது வெறி கொண்டு ஓடத் துவங்கும்போது தான் நம்மை பதம் பார்த்து விடுகிறது. நாய்க்கடிக்கு போதிய அளவு மருந்து, நம் மாநிலத்தில் கிடைப் பதில்லை என்ற குற்றச்சாட்டும் உள்ளது. தெரு நாய்களைக் கட்டுப்படுத்த, மத்திய, மாநில அரசுகள் நடவடிக்கை எடுக்கவில்லை என, உச்ச நீதிமன்றம் சுட்டிக் காட்டி, நாய்க்கடி மரணங்களுக்கு ஆளும் அரசுகளைப் பொறுப்பாக்கியுள்ளது. தெரு நாய்களுக்கு ஆதரவாக வாதாடும் வழக்கறிஞர்கள், ஆதரவற்ற குழந்தைகளைத் தத்தெடுக்க வாதாடலாமே என்றும் உச்ச நீதிமன்றம் அறிவுறுத்தியுள்ளது, மிகவும் மகிழ்ச்சியை ஏற்படுத்துகிறது. எல்லாம் சரி... தெருநாய்களால் கடிபட்டவர்களுக்கு நஷ்ட ஈடு கொடுக்கும்போது, அதற்கு உணவளிப்பவர்கள், 'நாங்கள் தான் இதற்கு உணவளித்து ஊட்டி வளர்த்தோம்' எனச் சொல்ல முன்வருவரா? மாநில அரசுகள், நாய்கள் விவகாரத்தில் இன்னும் தெளிவான தீர்வை எட்டினால் தான், இப்பிரச்னைக்கு முற்றுப்புள்ளி வைக்க முடியும்!

வேஷம் எடுபடவில்லையே!

பொ.ஜெயராஜ், பாம்பனார், இடுக்கி மாவட்டம், கேரளாவில் இருந்து அனுப்பிய, 'இ - மெயில்' கடிதம்: 'யானை வரும் பின்னே, மணியோசை வரும் முன்னே' என்பது போல், சட்டசபை தேர்தலை முன்னிட்டு, கடந்த சில மாதங்களாகவே, தமிழக அரசு மிகவும் சுறுசுறுப்பாக இயங்குவது போல் நாடகமாடிக் கொண்டிருக்கிறது. பணி நிறைவடைந்த பாலங்கள், கட்டடங்கள், பேருந்து நிலையங்களை மக்கள் பயன்பாட்டிற்கு கொண்டு வராமல், வேண்டுமென்றே பல மாதங்களாக கிடப்பில் போட்டு, இப்போது, திறப்பு விழா நடத்திக் கொண்டிருக்கின்றனர், முதல்வரும், துணை முதல்வரும்! அதுமட்டுமல்ல... இதுவரை, 1,000 ரூபாய் வாங்குவதற்கு தகுதியற்றவர்களாக இருந்த பல லட்சம் பெண் களுக்கு, இப்போது, பணம் வழங்க ஆரம்பித்து விட்டனர். கடந்த சில ஆண்டுகளாக நிறுத்தப்பட்டிருந்த மாணவர்களுக்கான இலவச, லேப்டாப் வழங்கும் திட்டத்தையும் மீண்டும் ஆரம்பித்து விட்டனர். பொங்கலுக்கு, 3,000 ரூபாய் கொடுக்கின்றனர். புதிய பேருந்துகளை ஒரே நாளில் துவக்கி வைக்காமல், தினந்தோறும் புதிய பேருந்துகளை பயன்பாட்டிற்கு கொண்டு வருவதாக காட்டி, விழா நடத்தி, மக்கள் பணத்தை விரயம் செய்து வேடிக்கை காட்டுகின்றனர். நான்கரை ஆண்டுகள் சும்மா இருந்துவிட்டு, இப்போது மக்களுக்காக கடுமையாக பணியாற்றுவது போல வேஷம் போடுகின்றனர். மக்கள் தான் அதை நம்பத் தயாராக இல்லை!


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

வாசகர்கள் கருத்துகள் ( 3 )

Anantharaman Srinivasan
ஜன 18, 2026 21:40

கொல்லன் பட்டரையில் ஈ என்ன வேலை என்பதுபோல் பசையிருந்த வரையில் அதிமுகாவில் மேய்ந்துகொண்டிருந்த மருது என்னும் ஈ தேர்தல் நேரத்தில் ஆதாயம் தேடி திமுக என்னும் தேனை நக்க வந்துள்ளளது.


Anantharaman Srinivasan
ஜன 18, 2026 21:32

காவல் துறையின் ஈரல் கெட்டுபோச்சு என சொன்னவரும் கருணாநிதி தான். இன்று காவல் துறைக்கு புற்றுநோய் முற்றிப்போயிருக்கிறது என்பதே உண்மை.


D.Ambujavalli
ஜன 18, 2026 06:39

விடிந்தால் தேர்வு என்ற நிலையில் பாடப்புத்தகத்தை தேடும் மாணவனைப்போல் இறுதிக்கட்ட நாடகம் போடுகிறது திமுக அரசு மக்கள் விழிப்புடன் இருந்து எதிர்க்கேள்வி கேட்க வேண்டும் தேர்தல் சமயம் கொடுத்தல் கைக்காசு, கட்சிக்காசு போய்விடும் என்று அரசு கஜானாவைத் துடைத்து கட்சிப் பிரசாரம் நடத்துகிறார்கள்


அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை