உள்ளூர் செய்திகள்

/ தினம் தினம் / இது உங்கள் இடம் / கருத்து சொல்ல அருகதை இல்லை!

கருத்து சொல்ல அருகதை இல்லை!

பொ.பாலாஜி கணேஷ், சிதம்பரத்தில் இருந்து அனுப்பிய, 'இ -மெயில்' கடிதம்: த.வெ.க., தலைவர் நடிகர் விஜய், 10 மற்றும் பிளஸ் 2 தேர்வுகளில் சிறப்பான மதிப்பெண் எடுத்த மாணவ - மாணவியருக்கு பரிசளிப்பு விழா நடத்தினார். மூத்த அரசியல் தலைவர்கள் எவரும் அதை விமர்சனம் செய்யவில்லை. ஆனால், தமிழக வாழ்வுரிமை கட்சி தலைவர் வேல்முருகன், பரிசு பெற்ற மாணவியரையும், அவர்கள் பெற்றோரையும், விஜயையும் மிகவும் தரம் தாழ்ந்து விமர்சனம் செய்துள்ளார். இளம் தலைமுறையினர் படித்து நான்கு விஷயங்களை தெரிந்து கொண்டால், மக்களை ஏமாற்றி அரசியல் செய்ய முடியாது என்று நினைக்கும் அரசியல்வாதிகளின் பட்டியலில் வேல்முருகனும் இணைந்து விட்டார் என்பதையே, அவரின் பேச்சு வெளிப்படுத்தி உள்ளது. விஜய் உதவி செய்ததை அவதுாறாக பேசும் வேல்முருகன், காலை உணவு திட்டத்தால் மாணவர்கள் தன்னை அப்பா என்று அழைப்பதாக முதல்வர் ஸ்டாலின் பெருமையோடு சொன்னபோது, ஏன் மவுனமாக இருந்தார்? 'அவர்கள் என்ன அப்பா இல்லாத அனாதைகளா அல்லது படிக்க வைக்க வக்கில்லாதவர்களா...' என்று, அன்று கொதித்து எழுந்திருக்க வேண்டியது தானே!அதுசரி... தமிழ் தேசியம், தமிழீழம் என்று இளைஞர்களை தவறான பாதையில் கொண்டு சென்று அவர்கள் வாழ்வை நாசம் செய்வது தானே உங்கள் வேலை!உங்களால் நன்மை செய்ய முடியவில்லை என்றாலும் பரவாயில்லை; வாயை மூடிக் கொண்டு வேடிக்கை பாருங்கள். அதை விட்டுவிட்டு கருத்து சொல்கிறேன் என்ற பெயரில் கண்டபடி பேசி, கண்டனங்களை பெறாதீர்கள்!

அபாய மணி அடிக்கும் முதல்வர்!

எஸ்.ஆர்.ரத்தினம், ஊரப்பாக்கம், செங்கல்பட்டு மாவட்டத்தில் இருந்து அனுப்பிய, 'இ - மெயில்' கடிதம்: சமீபத்தில், கடன் வாங்கும் நிகழ்ச்சி ஒன்றை ஏற்பாடு செய்திருந்தது, சென்னை மாநகராட்சி. அதில் பங்கேற்ற தமிழக முதல்வர் ஸ்டாலின், நிகழ்ச்சியை மணி அடித்து துவக்கி வைத்தார்.அவர் அடித்தது, சுப நிகழ்வின் ஆரம்பத்தில் ஒலிக்கப்படும் மணி அல்ல; அதிக கடன் சுமையில் மாநகராட்சி தவிக்கிறது; அடிப்படை தேவைகளுக்கே பணம் இல்லை என்பதை சொல்லும் அபாய மணி!மாநகராட்சியின் வரி வருவாயில் ஏதும் குறைகள் இல்லை. அதேநேரம், அரசு கஜானாவிற்கு வரவேண்டிய வருவாய் அனைத்தும் அதிகாரிகளின் வீட்டு பணப்பெட்டிக்கும், அரசியல்வாதிகளின் கஜானாவிற்கும் மடை மாற்றம் செய்யப்பட்டால் மாநகராட்சி எப்படி திறம்பட செயல்பட முடியும்?இதோ... சென்னை மாநகராட்சி மிகப்பெரிய நிதிச் சுமையில் சிக்கித் தவிக்கிறது. இதை ஈடுசெய்ய பங்குச் சந்தை வாயிலாக நிதி திரட்டலாம் என்ற ஐடியாவுடன் ஏற்பாடு செய்யப்பட்டது தான், கடன் வாங்கும் நிகழ்ச்சி.அரசின் நிர்வாக தோல்வியின் வெளிப்பாடான இந்நிகழ்ச்சியை துவக்கி வைத்த முதல்வர், தான் ஏதோ பெரிய ஒரு திட்டத்தை நிறைவேற்றி, சாதனை புரிந்துவிட்டது போல் மணி அடித்து, அதை அறிவிக்கிறார்!எடுப்பது பிச்சை... வாய் கொப்பளிக்க பன்னீர் கேட்பது போல், வாங்குவது கடன்... இதற்கு ஒரு நிகழ்ச்சி... அதையும் ஒரு முதல்வர் மிகப் பெரிதாக சாதித்து விட்ட மகிழ்ச்சியுடன் மணி அடித்து துவங்கி வைக்கிறார்! என்னத்தை சொல்வது... தமிழக மக்கள் இன்னும் என்னவெல்லாம் பார்க்க வேண்டியுள்ளதோ!

நீதி காப்பாற்றப்படுமா?

அ.சேகர், கடலுாரில் இருந்து அனுப்பிய, 'இ - மெயில்' கடிதம்: குற்றவியல் வழக்குகளில் அரசு தரப்பில், காவல் துறை அதிகாரிகள் தாக்கல் செய்யும் ஆவணங்கள் மற்றும் சாட்சிகளின் அடிப்படையில் தான் தீர்ப்புகள் வெளியாகின்றன. இதில், 99 சதவீதம் அதிகாரிகளின் விசாரணையில் உள்ள ஓட்டைகளை பயன்படுத்தி, வழக்கறிஞர்கள் குற்றவாளிகளை விடுவித்து விடுவர். குற்றவாளிகள் செல்வாக்கு மிகுந்தவராகவோ, கொடிய பின்னணி உள்ளவராகவோ இருக்கும் பட்சத்தில், அவர்களுக்கு எதிராக சாட்சி சொல்ல எவரும் முன்வரவில்லை என்றால், குற்றவாளிகள் விடுதலை ஆவதும் வழக்கம்.தற்போது, அண்ணா பல்கலை மாணவி பாலியல் வழக்கில் குற்றஞ்சாட்டப்பட்ட ஞானசேகரன், தி.மு.க., நிர்வாகியாக, அமைச்சர்களுடன் நெருங்கிய தொடர்பில் இருந்தார். இந்நிலையில், குற்றம் நிரூபிக்கப்பட்டு, ஆயுள் தண்டனை விதிக்கப்பட்டுள்ள நிலையில், தமிழக பா.ஜ., முன்னாள் தலைவர் அண்ணாமலை, விசாரணை அதிகாரிகளை நோக்கி சில கேள்விகளை முன்வைத்து, மக்களை யோசிக்க வைத்துள்ளார்...கடந்த டிச., 23 இரவு குற்றம் நடந்த நிலையில், டிச., 24ல் கோட்டூர்புரம் காவல் நிலையம் அழைத்துச் செல்லப்பட்ட ஞானசேகரன், விசாரணை செய்து பின்னர் விடுவிக்கப்பட்டார். பின், ஊடகங்கள் இச்சம்பவத்தை பெரிதுபடுத்தவே, மறுநாள் மாலை மீண்டும் கைது செய்யப்பட்டு சிறைக்கு அனுப்பி வைக்கப்பட்டார். இவ்வழக்கு நீதிமன்றத்திற்கு வரும் முன்பே, '24 முதல் 25ம் தேதி மாலை சிறையில் அடைக்கும் வரை, ஞானசேகரன் எவரிடம் எல்லாம் மொபைல் போன் வாயிலாக பேசினார் என்பதை ஆய்வு செய்தால், 'யார் அந்த சார்?' என்பது தெரிந்து விடும்' என்று கூறியிருந்தார், அண்ணாமலை. தற்போது, 'இவ்வழக்கில் ஞானசேகரன் ஒருவன் மட்டுமே ஈடுபட்டுள்ளான்; வேறு எந்த, 'சாரு'க்கும் இதில் தொடர்பில்லை' என்று நீதிமன்றம் கூறியுள்ளது. இந்நிலையில், குற்றம் நிகழும் முன், நிகழ்ந்த பின் எவரையெல்லாம் ஞானசேகரன் தொடர்பு கொண்டார் என்பதை விளக்கியுள்ள அண்ணாமலை, 'தி.மு.க., மாவட்ட செயலர் கோட்டூர் சண்முகசுந்தரம், சுகாதார துறை அமைச்சர் சுப்பிரமணியன், அண்ணா பல்லை அதிகாரி நடராஜன் இவர்களிடம் விசாரணை செய்ய வேண்டும்' என்று கூறியுள்ளார். அதேபோன்று, நீதிமன்றத்தில், 11 பிரிவுகளில் ஒரு பிரிவில் ஆதாரங்கள் அழிக்கப்பட்டதாக கூறப்பட்டுள்ளது. 'அது என்ன ஆதாரம்?' என்றும் கேள்வி எழுப்பி உள்ளார்.இவை அனைத்தும் விசாரணை அதிகாரிகளுக்கு எதிராக, அவர் எழுப்பிய நியாயமான கேள்விகளே! இது நீதிமன்ற அவமதிப்புக்குள் வராது. காரணம், நீதிமன்றம் வழங்கியுள்ள தீர்ப்பு குறித்து அண்ணாமலை விமர்சனம் செய்யவில்லை.அதேநேரம், 'குற்றம் செய்தவர் மட்டுமல்ல; குற்றத்திற்கு பின்புலமாக இருந்தவர், குற்றவாளிகளை காப்பாற்ற முனைந்த அனைவருமே குற்றவாளிகள். எனவே, அவர்கள் அனைவரையும் கூண்டில் ஏற்ற வேண்டும்' என்கிறார்.இது நியாயம் தானே... குற்றம் செய்தவர் மட்டுமல்ல; குற்றத்திற்கு உடந்தையாக இருந்தவர்களும் தண்டனைக்கு உரியவர் என்று தானே நீதிமன்றம் கூறுகிறது... அதுதான் நீதியும், தர்மமும் கூட!


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

வாசகர்கள் கருத்துகள் ( 2 )

Anantharaman Srinivasan
ஜூன் 10, 2025 19:20

பங்கு சந்தையில் ஈடுபடும் investors விவரமறிந்த புத்திசாலிகளாகயிருந்தால் தேசிய பங்கு சந்தையில் விற்கும் சென்னை மாநராட்சியின் பங்குகளை வாங்கி நஷ்டமடைய மாட்டார்கள்.


D.Ambujavalli
ஜூன் 10, 2025 18:55

ஒருவரை மட்டுமே குற்றவாளியாக முன்னிறுத்தி விட்டு, அவருக்கு மட்டும் தண்டனை கிடைத்தததும் ‘பெருந்தலைகள்’ நிம்மதியாக, அடுத்து எந்த ‘பலியாடு’ மாட்டும், அதை முன்னால் வைத்து, தாங்கள் ஆட்டம் போடலாம் என்று திட்டங்கள் தீட்ட ஆரம்பித்திருப்பார்கள் எத்தனை AU களோ , அரக்கோணங்களோ


அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை