வாசகர்கள் கருத்துகள் ( 1 )
இதே மாணவஅந்த இன்னும் 8 ஆண்டுகள் உயிருடனிருந்து கள்ளச்சாராயம் குடித்து உயிரிழந்தார் என்றால் அரசு 10 லட்சம் கொடுத்திருக்கும்
வ.ப.நாராயணன், ஊரப்பாக்கம், செங்கல்பட்டு மாவட்டத்திலிருந்து அனுப்பிய, 'இ - மெயில்' கடிதம்: மகளிர் உரிமைத் தொகை எண்ணிக்கையில், மே லும், 16.9 லட்சம் மகளிரை சேர்த் துள்ளது,- தி.மு.க., அரசு. இதன்வாயிலாக, இனி, 1.30 கோடி பெண்கள், மாதம், 1,000 ரூபாய் உரிமைத் தொகை பெறுவர்.ஏற்கனவே, மகளிர் உரிமைத் தொகை பெறுவதற்கு விண்ணப்பித்து, தகுதி இல்லை என்று நிராகரிக்கப்பட்டவர்களுக்கு, தேர்தலை மனதில் வைத்து, மகளிர் ஓட்டுகளை பெறுவதற்காக விதிகளை தளர்த்தியுள்ளது, தி.மு.க., அரசு.உண்மையில் கஷ்டப்படும் பெண்களுக்கு, 1,000 ரூபாய் வழங்கினால் பாராட்டலாம்; ஆனால், மாதம் ஒரு லட்சம் ரூபாய் சம்பாதிக்கும் கணவனுடன் வாழும் பெண்களுக்கும், 1,000 ரூபாய் வழங்குவது ஏன்?முதலில், ஓரளவு தகுதியான பெண்களுக்கு வழங்கி விட்டு, இப்போது தேர்தலை மனதில் வைத்து விதிகளை தளர்த்தி எல்லாருக்கும் வழங்குவது சரியா?பெண்களின் ஓட்டுகளை பெற, மக்களின் வரிப்பணத்தை இப்படி விரயம் செய்துவிட்டு, நிதி ஒதுக்கவில்லை என்று மத்திய அரசை குறை கூறுவது ஏன்?ஆண்டுதோறும் ஓய்வு பெறும் போக்குவரத்து ஊழியர்களுக்கு, பணிக்கொடை வழங்க நிதியில்லை. ஊதிய உயர்வு கேட்டு போராடும் துாய்மை பணியாளர்களுக்கும், அங்கன்வாடி ஊழியர்கள் மற்றும் ஊதியம் உயர்த்தக்கோரி போராடும் இடைநிலை ஆசிரியர்களுக்கும் வழங்க நிதியில்லை என்று கூறும் தி.மு.க., அரசுக்கு, உரிமைத் தொகை வழங்க மட்டும் எங்கிருந்து வருகிறது நிதி?இதுபோன்றதுதான் இலவச பேருந்து பயண திட்டமும்!மாதம், 50,000க்கும் மேல் ஊதியம் பெறும் பெண்களும், தமிழக அரசின் விடியல் பேருந்தில் இலவசப் பயணம் மேற்கொள்கின்றனர். இவர்களால், 10 ரூபாய் கொடுத்து பயணச் சீட்டு வாங்க முடியாதா?கடை தேங்காயை எடுத்து வழிப் பிள்ளையாருக்கு உடைப்பது போல், மக்களின் வரிப்பணத்தை எடுத்து இலவசங்களை வழங்கி விட்டு அதற்கு, 'கலைஞர் உரிமைத் தொகை' என்று பெயர் வேறு வைக்கிறது அரசு.பொருளாதாரத்தில் நலிவுற்ற பெண்களுக்கு உரிமைத் தொகை, இலவசப் பயணம் போன்ற சலுகைகளை வழங்குவதில் தவறில்லை. ஆனால் பொருளாதாரத்தில் உயர்ந்த நிலையில் இருப்போருக்கும் இதுபோன்ற சலுகைகளை வழங்குவதை எப்படி ஏற்றுக் கொள்ள முடியும்?இது அரசின் சாதனை அல்ல; தமிழகத்திற்கு நேர்ந்துள்ள சோதனை!----
அனுபவித்து தான் ஆக வேண்டும்!
ஆர்.வித்யாசாகர், அருப்புக்கோட்டையில் இருந்து அனுப்பிய, 'இ - மெயில்' கடிதம்: தமிழக அரசின் மெத்தனப்போக்கால் திருவள்ளூர் மாவட்டம் கொண்டாபுரம் அரசு பள்ளியின் சுவர் இடிந்து விழுந்ததில், 12 வயது சிறுவன் பலியாகியுள்ளான். நஷ்ட ஈடாக, 3 லட்சம் ரூபாய் வழங்கி, தன் கடமையை முடித்து விட்டது, அரசு.சிறுவனின் பெற்றோர் மகனின் எதிர்காலம் குறித்து எத்தனை கனவு கண்டிருப்பர்? அதெற்கெல்லாம் இந்த 3 லட்சம் ரூபாய் ஈடாகிவிடுமா? ஆட்சியாளர்களின் பிள்ளைகள் படிக்கும் பள்ளிகளில் இப்படியொரு அசம்பாவிதம் நடந்திருந்தால், 3 லட்சத்தைப் பெற்று, அமைதியாக கடந்து சென்றுவிடுவரா?இலவசம் என்ற பெயரில் பல ஆயிரம் கோடிகளை விரயம் செய்துவரும் திராவிட மாடல் அரசு, அதில் ஒரு சிறு பகுதியை பள்ளிகளின் உள்கட்டமைப்பை மேம்படுத்த ஒதுக்கியிருந்தால், அம்மாணவன் உயிர் இழந்திருப்பானா?சமீபத்தில், மேற்கு வங்கத்தில் பிரபல கால்பந்து வீரர் மெஸ்ஸி பங்கேற்ற நிகழ்ச்சியில், குளறுபடி ஏற்பட்டு, ரசிகர்கள் தண்ணீர் பாட்டிலை மெஸ்ஸி மீது வீசினர்; மெஸ்ஸி கிளம்பிச் சென்றதால் ஆத்திரமடைந்த ரசிகர்கள் பிளாஸ்டிக் நாற்காலிகள், தண்ணீர் பாட்டில்களை வீசி எறிந்து, மைதானத்தின் சொத்துக்களைச் சேதப்படுத்தினர்.நிகழ்ச்சி சரியான முறையில் ஒருங்கிணைப்படாததாலேயே இப்பிரச்னை ஏற்பட்டது. அதற்கு பொறுப்பேற்று அம்மாநில விளையாட்டுத்துறை அமைச்சர் அரூப் பிஸ்வாஸ், தன் பதவியை ராஜினாமா செய்தார்.அதுபோன்று திராவிட மாடல் ஆட்சியில் எதிர்பார்த்து விட முடியுமா?இதுபோன்று இன்னும் பல பள்ளிக் கட்டடங்கள் இடிந்து, பல நுாறு மாணவர்கள் இறந்தால் கூட, பலியானவர்களுக்கு தலா, 3 லட்சம் ரூபாயை கொடுத்து விட்டு நடையை கட்டுமே தவிர, தவறுக்கு பொறுப்பேற்று பதவியை ராஜினாமா செய்வது எல்லாம் தி.மு.க., ஆட்சியில் நடக்காத ஒன்று!தி.மு.க., ஆட்சியாளர்கள் எப்படிப்பட்டவர்கள் என்று தெரிந்தும், தேர்ந்தெடுத்த மக்கள், இதையெல்லாம் அனுபவித்து தான் ஆக வேண்டும்!---------குழந்தைகள் கையில் மொபைல் போனை கொடுக்காதீர்கள்!
க.ஹேமமாலினி, சென்னை யிலிருந்து அனுப்பிய, 'இ - மெயில்' கடிதம்: ராஜ்யசபா உறுப்பினர் சுதா மூர்த்தி, தற்போதைய அத்தியாவசிய தேவையான விஷயம் குறித்து, சபையில் பேசினார். 'குழந்தைகளை, மிகச் சிறு வயதிலேயே சமூக ஊடகங்களில் ஈடுபடுத்துவதை முற்றிலும் தவிர்க்க வேண்டும். குழந்தைகளின் எதிர்காலத்தைப் பாதுகாக்க வேண்டும். குழந்தைகளை வைத்து வீடியோ வெளியிடுவதை தடை செய்ய வேண்டும்' என்று பேசினார். மிகச் சரியான கருத்து இது! ஆஸ்திரேலியா, பிரான்ஸ் போன்ற பல நாடுகளில், 16 வயதுக்குட்பட்ட சிறுவர் - சிறுமியர், சமூக வலைத்தளங்களை உபயோகப்படுத்த தடை விதிக்கப்பட்டுள்ளது. அதே போன்று, நம் நாட்டிலும் சட்டம் கொண்டு வர வேண்டும். சமூக வலைத்தளங்களை குழந்தைகள் பார்ப்பது, அவர்களை நடிக்க வைத்து காசு பார்ப்பது நம் நாட்டில் சர்வ சாதாரணமாக நடக்கிறது. அதை விட கொடுமை, குழந்தைகள் சாப்பிட மறுக்கின்றன என்ற காரணத்தால், அவர்கள் கையில் மொபைல் போனைக் கொடுத்து, அதில் குழந்தைகளுக்குப் பிடித்த வீடியோக்களை ஓட விட்டு, அதைப் பார்க்க வைத்தபடியே உணவு ஊட்டுகின்றனர் பெண்கள். இப்படி குழந்தைகளை போன் பார்க்க வைத்து அடிமையாக்கி, பின் பள்ளி நாட்களில் அவர்கள் நன்றாக படிப்பதே இல்லை என்று குற்றமும் சுமத்து கின்றனர். இவர்கள் செய்யும் தவறுக்கு குழந்தைகளைப் பொறுப்பாக்கலாமா? 'இப்படி போனும், கையுமாக குழந்தைகள் இருப்பதால், நரம்பு மற்றும் உளவியல் பிரச்னைகளுக்கும் ஆளாகி விடுகின்றனர். நினைவாற்றல் பாதிக்கப்படுகிறது. தொடர்ச்சியான மன அழுத்தம், பதற்றம் மற்றும் நண்பர்கள் தன்னைப் புகழ்ந்தபடியே இருக்க வேண்டும் என்ற போக்கு ஆகிய நிலைகளுக்கு வழிவகுக்கும்' என்று வல்லுநர்கள் எச்சரிக்கின்றனர். ஆன்லைன் புகழ் அல்லது நிதி ஆதாயத்திற்காக ஒரு குழந்தையின் நல்வாழ்வையும் கண்ணியத்தையும் தியாகம் செய்யக்கூடாது. குழந்தைகள் நம் நாட்டின் எதிர்காலத்தை கட்டமைக்கப்படும் பாறைகள். நம் நாட்டின் துாண்களான மாணவ செல்வங்களை பாதுகாப்பது, பெற்றோர் மற்றும் அரசின் கடமை!
இதே மாணவஅந்த இன்னும் 8 ஆண்டுகள் உயிருடனிருந்து கள்ளச்சாராயம் குடித்து உயிரிழந்தார் என்றால் அரசு 10 லட்சம் கொடுத்திருக்கும்